ஆன்-லைனில் இன்ஜினியரிங் பொது நுழைவுத்தேர்வு

சி.பி.எஸ்.இ., தகவல்:

புதுடில்லி : அடுத்த ஆண்டு முதல் அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.,) பரீட்சார்ந்த முறையில் ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். நாட்டின் பெருமைமிக்க கல்வி நிறுவனங்களாக கருதப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.,), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி.,) ஆகியவற்றில் மாணவர்களை சேர்ப்பதற்கு, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தவிரவும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் குறிப்பிட்ட மாநில கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் மற்றும் கட்டடக்கலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையும், இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதால், இந்த நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

உள்நாடு மட்டுமின்றி, துபாய் மற்றும் சவூதி அரேபியா ஆகிய வெளிநாடுகளிலும் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக கருதப்படும் இதில், கடந்த ஆண்டு 12 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்.,) சேர்வதற்கு நடத்தப்படும் சி.ஏ.டி., நுழைவுத் தேர்வு, கடந்த ஆண்டு ஆன்-லைனில் நடத்தப்பட்டது. இதேபோன்று, இன்ஜினியரிங் பொது நுழைவுத் தேர்வையும் ஆன்-லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை (ஏ.ஐ.இ.இ.இ.,) ஆன்-லைனில் நடத்த சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. நாட்டின் 84 நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இன்ஜினியரிங் பொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், நாட்டின் 20 முக்கிய நகரங்களில் இத்தேர்வு ஆன்-லைனில் சோதனை முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கும் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.


"எழுத்தறிவைப் போல சூழலியல் கரிசனமும் அவசியம்'

http://img.dinamalar.com/data/large/large_135465.jpg
கோவை: "எழுத்தறிவைப்போல் சூழலியல் கரிசனம் அனைவருக்கும் இருக்க வேண்டும்,'' என, சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் பேசினார். கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் ரோட்டரி கிளப் சார்பில், "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்புக்கு "போற்றுதலுக்குரிய சேவைக்கான விருது' வழங்கும் விழா, குப்புசாமிநாயுடு மருத்துவமனை ஜி.கே.டி., அரங்கத்தில் நடந்தது. கலெக்டர் உமாநாத், சுற்றுச்சூழலியல் ஆர்வலர் தியோடர்பாஸ்கரன் பங்கேற்று, விருதை வழங்கினர். தியோடர் பாஸ்கரன் பேசியதாவது:
சூழலியல் ஆர்வலர் அடைமொழி சிலருக்கு மட்டுமே உண்டு. ஆனால், "சூழலியல் கரிசனம்' அனைவருக்கும் இருக்க வேண்டும். எழுத்தறிவு போல, சூழலியல் கரிசனம் பொதுமக்களுக்கு அவசியம். படித்தவர்கள், வசதிபடைத்தவர்களிடையே சூழலியல் கரிசனம் விலகி உள்ளது. யார்வீட்டு கல்யாணமோ என்ற அளவில்தான் உள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான விஷயம் பெரிதாகி, பிரச்னையான பின்னரே போராட்டங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் அரசு சூழலியல் பற்றிப் பள்ளிகளில் பாடமாக்கி இருக்கிறது. அதற்கான பாடப்புத்தகங்களும்; சூழலியல் பாடத்தை நடத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் இல்லை. சூழலியலை பாடமாக மட்டும் பார்க்கக்கூடாது. அது ஒரு விழிப்பு; பார்வைக்கோணம்; உலகைப்பற்றிய புரிதல்; உயிர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பு பற்றியதுதான் சூழலியல் கரிசனம். வறுமைக்கும் சூழலியல் கரிசனத்துக்கும் தொடர்புண்டு. எப்போதெல்லாம் சூழலியல் பாதிக்கப்படுகிறதோ அதனால் நேரடியாகவும், முதலிலும், அதிகமாகவும் பாதிக்கப்படுவது ஏழைகள்தான். காடுகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பின்புலத்தில் கேள்வி எழுப்ப வேண்டும். எல்லா வாழ்வாதாரங்களுக்கும் காடுகள்தான் அடிப்படை. மலைகளையும், காடுகளையும் அழித்துவிட்டால், நீராதாரங்கள் அழிந்துவிடும். காடுகளை அழித்ததன் பலன், நீர் நிலைகள் வறண்டு விட்டன. நதிகள், பூமியின் தழும்புகளாக மாறிவிட்டன. கானகத்தின் பல மரங்கள் இன்னும் பட்டியலிடப்படவே இல்லை. மனிதன் உண்ணும் உணவுகளில் 85 சதவீதத்தை எட்டுவகையான பயிர்களில் இருந்துதான் பெறுகிறோம். காடுகளைப் பாதுகாத்தால், கூடுதலான தாவரங்களில் இருந்து வேறு வகையான உணவுகளைப் பெற முடியும். உணவுத்தட்டுப்பாடு தவிர்க்கப்படும். பல நோய்களுக்கு மருந்து கிடைக்கும். தேவையற்று நதிகளை இணைப்பது குறித்து சிந்திப்பது இயற்கைக்கு எதிரானது. பின் எவ்வாறு, தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வது என்ற கேள்வி எழும். காடுகளை மீட்டெடுத்தல், மழை நீர் சேகரிப்பு போன்ற உள்ளூர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேரணைகள் கட்டுவது, நதிநீர் இணைப்பு போன்றவை உள்ளூர் முயற்சிகளைத் தடை செய்யும். இவ்வாறு, சுற்றுச் சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் பேசினார்.
ஓசை நிர்வாகி காளிதாஸ் விருது ஏற்புரையில், "மாணவர்களிடையே ஓசை அமைப்பு இயற்கை குறித்த விழிப்புணர்வை விதைத்திருக்கிறது; தொடர்ந்து விதைத்தும் வருகிறது.வளர்ச்சித்திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. வளர்ச்சித் திட்டங்கள் பெயரில், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை, அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இளம் தலைமுறையினரிடையே சூழலியல் விழிப்புணர்வு அதிகரித்து வருவது நம்பிக்கையூட்டுகிறது,'' என்றார்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுனர் ராஜரத்தினம், தொழிற்சேவைப்பிரிவு இயக்குனர் விஸ்வநாதன், ரோட்டரி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வீட்டுக்கே வருகிறது "பைபர் ஆப்டிக் கேபிள்'; ஒரே இணைப்பில் போன், "டிவி', நெட்

http://img.dinamalar.com/data/large/large_135472.jpg
கோவை: கோவை நகர மக்களுக்கு, "டிவி' இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட் உள்ளிட்ட மதிப்புமிக்க சேவைகளை "பிராட் பேண்ட்' இணைப்பில் பி.எஸ். என்.எல்., நிறுவனம் அளிக்க வுள்ளது. "பைபர் ஆப்டிக் கேபிள்' இணைப்பை நேரடியாக வீட்டுக்கு அளித்து, இச்சேவையை சாத்தியமாக்கவுள்ளது. அதிநவீன தொலைத்தொடர்பு சேவையில், "பைபர் ஆடிக்கல் கேபிள்' வழியாக இணைப்பில் எளிதாக பல்வேறு சேவைகளை வழங்க முடியும். இந்த சேவையை, கோவை நகரில் முதலில் அறிமுகம் செய்துள்ளது. கோவை நகர மக்கள் இந்தசேவையை இனி எளிதாக பெற முடியும்.
இந்திய தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., "3ஜி' அலைவரிசையான, முகத்துக்கு முகம் பார்த்து பேசும் செல்போன் சேவையை சில மாதங்களுக்கு முன் கோவையில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து, தற்போது வீட்டுக்கு நேரடியாக பைபர் ஆப்டிக்கல் கேபிள் சேவையை அளிப்பதால், கோவை மக்கள் அதிநவீன தொலைத்தொடர்பு சேவையை பெற முடியும். இந்த பைபர் ஆப்டிக்கல் கேபிள் பைபர் வழியாக, ஒரே சமயத்தில் "டிவி' இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட், இன்டர்நெட் டெலிபோன், வீடியோ கான்பிரன்சிங் போன்ற சேவைகளையும் எளிதாக பெறமுடியும். இந்த சேவையை, "எப்.டி.டி.எச்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை அறிமுக துவக்க விழா, கோவை, புரூக் பீல்டு வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், எஸ்.பி., கண்ணன் முதல் இணைப்பை வழங்க, புரூக் பீல்டு இயக்குனர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில்,எஸ்.பி., கண்ணன் பேசியதாவது: தொலை தொடர்புத்துறையில் அடுத்த கட்ட நவீன தொழில்நுட்பமே பைபர் டி.டி.எச்., இணைய உலகில் "ஹேக்கிங்' போல, தொலைபேசியில் "பிரிகிங்' என்ற முறை உண்டு. தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது; "டேப்'செய்வது போன்றவையும் இதில் அடங்கும்.பைபர் ஆப்டிகல் தொழில்நுட்பத்தில் அதிவேகத்தில் டேட்டாக்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றை இடைமறிப்பதும் கூட கடினம். எனவே, தொலைபேசி உரையாடல்களை இடைமறிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும், என அரசுக்கு கோரியுள்ளோம். நவீன தொழில்நுட்பங்களை பொதுமக்கள் நாட்டின் மேம்பாட்டுக்காகவும், நல்ல செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
பைபர் டி.டி.எச்., சேவை குறித்து பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் மேத்யூ கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இச்சேவை துவங்குகிறது. முதலில் நகரப்பகுதிகளுக்கு வழங்கப்படும். பின், அனைத்து இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஒரே இணைப்பில் கேபிள் "டிவி'; பிராட்பேண்ட், தொலைபேசி இணைப்புகளை தனித்தனியாக ஒரே சமயத்தில் பெற முடியும். இதற்கான மோடத்தில் ஐந்து இணைப்புகளுக்கான இடம் விடப்பட்டிருக்கும். மூன்று சேவைகளை இவ்விணைப்புகள் வழியாக பெறலாம். எதிர்காலத்தில் கூடுதல் வசதிகளை பெற கூடுதலான இரு இணைப்புகள் விடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் எக்சேஞ்ச் வரை மட்டுமே பைபர் ஆப்டிகல் இணைப்பு இருந்தது. தற்போது வீடு வரை வருகிறது. பிராட்பேண்ட் திட்டத்தில் 500 ரூபாய் முதல் இச்சேவையில் பெற முடியும். டெலிபோனுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். வரும் முதல் தேதியில் இருந்து தரைவழித் தொலைபேசிக்கு வினாடிக்கு 27 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது. கேபிள் "டிவி'யைப் பொருத்தவரை இந்தியாவின் மிகத்துல்லியமான ஒளிபரப்பாக இருக்கும். 100 ரூபாய் முதல் வாடிக்கையாளர் விரும்பும் "பேக்கேஜை' தெரிவு செய்யலாம். இவ்வாறு, பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் மேத்யூ கூறினார்.
நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் முரளிதரன், துணைப்பொதுமேலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

விப்ரோ நிறுவனம் கல்விக்காக 2 பில்லியன் டாலர் உதவி

பெங்களூரூ: இந்தியாவின் முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம் இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்காக 2 பில்லியன் டாலர் நிதிஉதவி அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரான ஆசிம் பிரேம்ஜி ஆசிம் பிரேம்ஜி பவுண்டேசன் மூலம் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள கல்விநிலையங்களுக்கு வழங்குகிறார். இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 846 கோடியாகும். முதல் கட்டமாக சுமார் 700 கோடி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் ஆசம் பிரேம்ஜி பவுண்டேசன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பவுண்டேசன் மூலம் உருவாக்கப்படும் பல்கலை மூலம் 2011 கல்வி யாண்டில் 200 மாணவர்களும், அடுத்துவரும் நான்கு முதல் ஐந்தாண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் என உயரும் என பவுண்டேசன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Blog Center - வலைப்பூ மையம்!

blogcenter - blogger's can update their posts here!

வலைப்பூ மையம்! - வலை பதிவர்கள் தங்களது பதிவுகளை பதிவு செய்திடும் களம்!


அன்புடையீர் வணக்கம்!

இன்றைய நாளில் இணையம் அறிந்த நண்பர்கள் அனைவருமே (பெரும்பாலும்) வலைப்பூ நடத்தி வருவது கண்கூடு.

வலைப்பூவில் பதிவு செய்யும் பதிவுகளை பலரிடமும் கொண்டு சேர்க்கும் பல்வேறு திரட்டிகள் இருந்தாலும் அனைவரது பதிவுகளையும் அனைவரும் கொண்டு சேர்க்கும் வகையிலும் தெரிந்தெடுத்து படிக்கும் வகையிலும் ஒரு மடலாடற் குழுமம் இருப்பின் நல்லது என்று தோன்றியது.

வலைப்பூ நடத்தி வரும் பதிவர்கள் அனைவரும் தங்களது அனைத்து பதிவுகளையும் நமது குழுமத்திலும் பதிவு செய்து மேலும் பலரை சென்றடைய வரவேற்கிறோம்!

நன்றி..!

என்றும் அன்புடன்...

kindly visit:

http://groups.google.com/group/blogcenter?hl=ta_US

விண்வெளியில் மனிதன்


இஸ்ரோ புதிய திட்டம்:


"நிலவில் உயிர் வாழ்வது தொடர்பான, "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என, "இஸ்ரோ' விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசினார். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, திருப்பூரில் இரண்டு நாட்கள் நடந்தது; 143 பள்ளிகளைச் சேர்ந்த 210 அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 10 ஆயிரம் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இதன் நிறைவு விழா, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.

இஸ்ரோ விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசியதாவது: தற்போது, 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி, மற்ற நாடுகளுக்கு முதன்மையாக இந்தியா விளங்குகிறது. விண்வெளி, செயற்கைக் கோள்களின் பயன், தேவை அதிகமானோருக்கு தெரிவதில்லை. ஆராய்ச்சியின் மூலம் நாட்டின் பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி மேம்படும்.

பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வெற்றி கண்டாலும், வரும் காலத்துக்கு இது போதாது. பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டாலும், நாம் செலுத்திய, "சந்திரயான்' நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முறையாக உறுதிப்படுத்தியது; உலக நாடுகளுக்கு நம்மை அடையாளம் காட்டியது. இதனால், பல நாடுகள் நம்முடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.

அடுத்ததாக, ரஷ்யாவுடன் இணைந்து புது திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது, நிலவில் விண்கலம் செலுத்தி, அதிலிருந்து ரோபோ 100 மீ., நடந்து சென்று, அங்குள்ள மண்ணை எடுத்து ஆராய்ச்சி செய்வது பற்றியது. இதில், கடுமையான சவால்கள் உள்ளன. மேலும், நிலவில் உயிர்வாழ்வது குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சத்தியபாமா, எஸ்.ஆர்.எம்., - ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஏவுகணை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரோ, அக்கல்லூரிகளுக்கு உதவி வருகிறது. யார், இதுபோல் முயற்சி எடுத்தாலும் இஸ்ரோ உதவ தயாராக இருக்கிறது. இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.

எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வு முடிவுகள் -நாளை வெளியீடு

சென்னை : கடந்த மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வுகளுக்கான முடிவுகள், நாளை 18ம்தேதி வெளியிடப்படுகிறது.

தேர்வுத்துறை அறிவிப்பு: நாளை பிற்பகல், தேர்வுத்துறை இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மதிப்பெண் சான்றிதழ்கள், 25, 26, 27 ஆகிய தேதிகளில், அந்தந்த தேர்வு மையங்களில் வழங்கப்படும். மாணவர்கள் நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள், 25, 26, 29 ஆகிய தேதிகளில், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம்.

தேசிய திறனாய்வுத் தேர்வு: தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழி திறன்படிப்பு உதவித் தொகைகளுக்கான தேர்வு, வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்த பள்ளி மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே, "ஹால் டிக்கெட்டுகள்' வழங்கப்படும். வரும் 18ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்' பெறாத மாணவர்கள் (தேசிய திறனாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள்), அந்தந்த மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களையும், தேசிய வருவாய் வழி திறன்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து, "ஹால் டிக்கெட்' கிடைக்காத மாணவர்கள், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்வு நாளன்று, காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெறும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இயற்கை பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால்..



கூடலூர்: "இயற்கை பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால், 25 ஆண்டுகளில் தண்ணீர் மற்றும் காற்றுக்கு தவிக்க வேண்டிய நிலை உருவாகும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பு சார்லஸ் (53). இயற்கை மற்றும் நீர் பாதுகாப்பை வலியுறுத்தி, கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி முதல் சைக்கிள் மூலம் நம் நாட்டை சுற்றி வருகிறார். சமீபத்தில் கேரளா மாநிலம் வந்த அவர், கடந்த 12ம் தேதி தமிழக - கேரள எல்லையான தாளூர் வழியாக கூடலூர் வந்தார். அங்குள்ள தனியார் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதன்பின், தனது சுற்றுப்பயணம் குறித்து அவர் கூறியதாவது: இயற்கை அழிவு, ஏற்படும் பாதிப்புகள், வாகன புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும்; உலக வெப்பமயம், இயற்கை பேரிடர்களை தடுக்க வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே சைக்கிள் மூலம் நம் நாட்டை சுற்றி வருகிறேன். இதுவரை 20 மாநிலங்களில் 42 ஆயிரம் கி.மீ., சைக்கிள் மூலம் சுற்றி வந்ததுடன், 5000 பள்ளிகளில் இயற்கை பாதுகாப்பு குறித்து பேசியுள்ளேன். தமிழ், ஆங்கிலம் தவிர, மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள் தெரியும்; பிற மொழிகளை கற்பதன் மூலம், நாம் கூடுதல் பலம் பெற முடியும். என் முயற்சிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இதற்கு பின்பு, வெளிநாடுகளிலும் எனது பயணத்தை தொடர முயற்சி மேற்கொண்டுள்ளேன். இயற்கையை பாதுகாக்காமல் அலட்சியம் காட்டினால் 25 ஆண்டுகளில் தண்ணீருக்கும், இயற்கை காற்றுக்கும் சிரமப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்,'' என்றார்.

B.Ed., பயிற்சி பெற்ற ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை

தமிழ்நாடு கல்வியியல் தகவல்:

கோவை : "இந்தியாவுக்கு, பி.எட்., பயிற்சி பெற்ற ஒரு கோடி ஆசிரியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது,'' என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலை துணைவேந்தர் பத்மநாபன் கூறினார்.


கோவை பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் பத்மநாபன் பேசியதாவது: கல்வி என்பது எதிர்காலத்துக்கான முதலீடு. நாம் பெறும் உயர்கல்வி, வறுமையையும், வேலை வாய்ப்பின்மையையும் அகற்ற உதவ வேண்டும். ஆசிரியரை மையமாகக் கொண்ட கல்வி முறையில் இருந்து, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறைக்கு மாற வேண்டும். நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்தால், நம்பிக்கையுடன் வகுப்பறையை சந்திக்கலாம். வகுப்பறையில் சுதந்திர காற்று வீச வேண்டும். நல்ல நடத்தையுடன் சிறந்த ஆசிரியர் என்ற பெயர் பெற வேண்டும்.


நீங்கள் அளிக்கும் பயிற்சி, மாணவர்களிடம் ஏற்கனவே புதைந்துள்ள தெய்வீக சக்தியை வெளியே கொண்டு வர உதவ வேண்டும். முன்னர் மாணவர்களின் கண்ணை மட்டும் விட்டு வைத்து, அடிக்குமாறு பெற்றோர் கூறினர். இன்று பெற்றோரின் நிலை வேறு. ஆகவே கால மாற்றத்துக்கேற்ப ஆசிரியர்களும் தங்களை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமானது. ஆசிரியர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. உங்களிடம் கற்கும் மாணவர் மனதில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய உதவுங்கள். மத்திய ஆசிரியர் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, இந்தியாவுக்கு பி.எட்., பயிற்சி பெற்ற ஒரு கோடி ஆசிரியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.


இன்று, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 50 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். பல மாநிலங்களில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்தான் பணியில் உள்ளனர். தமிழகத்தில் வாய்ப்புகள் கதவை தட்டும் அளவுக்கு உயர்கல்வித் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆசியாவில் முதல் முறையாக தமிழகத்தில்தான் ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கென தனி பல்கலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பத்மநாபன் பேசினார்.


கல்வி கடனுக்கு வட்டி தள்ளுபடி

சிவகங்கை : தேசிய வங்கிகளில் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி பெற, கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பொருத்து, தேசிய வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என, அரசு அறிவித்த போதும், அதற்கான உத்தரவு, வங்கிகளுக்கு பிறப்பிக்கப்படவில்லை. "அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை. எனவே வட்டியை செலுத்த வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வட்டியை தள்ளுபடி செய்து வங்கிகள் கடிதம் அனுப்பி வருகின்றன. முதற்கட்டமாக, 2009 - 10ல் பெற்ற கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இதில் பயன்பெறும் மாணவர்களின் குடும்ப வருமானம், 4.50 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாணவர்களின் விவரம், வருமான சான்று போன்ற ஆவணங்களை வங்கியில் ஒப்படைக்க வேண்டும்,'' என்றார்.

அரசுப் பள்ளிகளுக்கு 4,944 கூடுதல் வகுப்பறை

கட்டாய கல்விச் சட்டம் எதிரொலி:
கோவை : தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 4,944 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது, 61 துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது போன்ற திட்டங்களுக்கு துணை பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இயற்றப்பட்டுள்ள கட்டாய கல்விச் சட்டம் அமலுக்கு வந்து விட்டதால், மாணவர்கள் கல்வி கற்க தடையாக உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண மத்திய அரசு முடிவு செய்துள்ளது. போதுமான கழிப்பறைகள் இல்லாததாலோ, வகுப்பறைகள் இல்லாததாலோ கூட பள்ளிக்கு மாணவர்கள் வருவது தடைபடக் கூடாது என்பதற்காக, அனைத்து தடைகளையும் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் - மாணவர் விகிதமும் மாற்றியமைக்கப்படவுள்ளதால், ஏராளமான ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய பட்ஜெட்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையை விட, துணை பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 4,944 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன. 61 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. மாணவியருக்கு தனியாக 7,625 கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. இதைத் தவிர, 370 பொது கழிப்பறைகளும் கட்டப்படுகின்றன. 434 பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டங்களை செயல்படுத்த கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு மட்டும் 20.34 கோடி ரூபாய் துணை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதான பட்ஜெட்டில் கட்டுமானப் பணிகளுக்காக 8.59 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணை பட்ஜெட் தொகையான 20.34 கோடி ரூபாயை பயன்படுத்தி, நான்கு துவக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. 323 கூடுதல் வகுப்பறைகள், 165 தலைமை ஆசிரியர் அறைகள், 495 கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. 12 பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 2010 - 2011ம் ஆண்டில் ஏற்கனவே 8.59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழையால் பாதிப்பு: கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, செங்கல் உற்பத்தி குறைந்துள்ளது. சிமென்ட், மணல், ஜல்லி விலை அதிகரித்துள்ளதால், கட்டுமானப் பணிகளை துரிதமாக முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மூட்டை 300 ரூபாய் ஆக இருந்த சிமென்டின் விலையை 50 ரூபாய் குறைப்பதாக தமிழக அரசு அறிவித்தாலும், சிமென்ட் குடோன்கள் 10 அல்லது 15 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளன.
ஆனாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் உதவியுடன் பற்றாக்குறை தொகையை ஈடுசெய்து, பணிகளை விரைந்து முடிக்க அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

அனைவருக்கும் வங்கி சேவை திட்டம் இந்தியன் வங்கி துவக்கம்

முசிறி: முசிறி யூனியன் செவந்தலிங்கபுரம் பஞ்சாயத்தில் இந்தியன் வங்கி முசிறி கிளை சார்பில் அனைவருக்கும் வங்கி சேவை திட்ட துவக்க விழா நடந்தது. இந்தியன் வங்கி முசிறி கிளை மேலாளர் நடராஜன் வரவேற்றார். திருச்சி வட்டார சீனியர் மேனேஜர் சுரேஷ், உதவி மேலாளர் (விவசாயம்) கௌரி, பஞ்., தலைவர் செழியன் முன்னிலை வகித்தனர். இந்தியன் வங்கி துணை பொதுமேலாளர் உலகன் பேசியதாவது: வாடிக்கையாளர் வங்கிக்கு சென்று பணம் செலுத்தி வரவு செலவு செய்த நிலை மாறி தற்போது வங்கியே கிராமங்களுக்கு சென்று மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் அவர்களின் உழைப்பிலிருந்து கிடைக்கும் வருவாயில் சிறுதொகையை சேமிப்பாக வைத்திருக்க வசதியாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.வங்கி அலுவலர் கிராமங்களின் வீடுகளுக்கு சென்று சேமிப்புத் தொø கயை பெறுவது மற்றும் வாடிக்கையாளருக்கு பண ம் தேவைப்படும் போது பணம் பட்டுவாடா செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்வதால் வாடிக்கையாளர் வங்கிக்கு வந்து சிரமப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், வங்கி அலுவலர் முரளி, ஊழியர் நடராஜன், மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர். முன்னதாக கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வங்கியில் கணக்கு துவங்கும்போதும், பணம் செலுத்தும் போதும், எடுக்கும் போதும் தங்களின் கைரேகைகளை பதிவு செய்தால் மட்டுமே கணக்கு பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்திய மேலாண்மை நிறுவன வகுப்பு துவங்க குழுவினர் ஆய்வு

திருச்சி: திருச்சி அருகிலுள்ள பெல் நிறுவன வளாகத்தில் இந்திய மேலாண்மை நிறுவன வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணைச்செயலாளர் (மேலாண்மை) டாக்டர் சர்மிளா மேரி ஜோசப் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்திய மேலாண்மை நிறுவன வகுப்புகளை பெல் நிறுவன வளாகத்தில் தற்காலிகமாக தொடங்கவும், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக்கழக வளாகத்தில் மாணவர் தங்கும் விடுதியை தொடங்குவது குறித்தும் இக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


பின்னர், சூரியூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் தொடங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 200 ஏக்கர் நிலத்தையும் இக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, திருச்சி மாவட்ட கலெக்டர் மகேசன் காசிராஜன், திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குனர் டாக்டர் பிரபுல்ல அக்னி சேஷாத்திரி, துவாக்குடி தேசிய தொழில்நுட்பக்கழக இயக்குனர் (பொ) டாக்டர் சிவம், மத்திய பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் செல்வராஜ், டி.ஆர்.ஓ., ராமன், ஆர்.டி.ஓ., மகாலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.

ஆபத்து என்றால் குரல் கொடுங்கள்: மன இயல் நிபுணர் அறிவுரை

கோவை: "பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளோம் எனக் கருதும் நிலையில் குழந்தைகள் காத்துக் கொள்ள அல்லது பிறரிடமிருந்து உதவி பெற சத்தம் போட வேண்டும்,'' என குழந்தைகள் மன இயல் நிபுணர் மோகன் ராஜ் கூறினார். கோவையில் சில நாட்களுக்கு முன் இரு குழந்தைகள் கடத்தி கொலை செய்யப் பட்டதை தொடர்ந்து குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் தோறும் நடந்து வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெக்குப்பாளையம் ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் "பெண் குழந்தைகள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது எப்படி!' என்பது குறித்து குழந்தைகள் மன இயல் நிபுணர் மோகன் ராஜ் பேசியதாவது:
பெண் குழந்தைகள் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் பேசத் தயங்கக் கூடாது. பெற்றோரிடமோ அல்லது தோழிகளிடமோ மனதில் உள்ள கருத்துக்களை சுதந்திரமாக பேச வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக் கும் துன்பங்கள் குறித்து மற்றவர்களுக்கு தெரியாது. பெண் குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பாற்ற தொடுதல் முறைகளை அடையாளம் காண வேண்டும். அருகில் வசிப்பவர், நண்பர், உறவினர் சில நேரங்களில் வீட்டில் இருப்பவர்கள் கூட உங்களை "பாதுகாப்பாற்ற முறையில்' தொடலாம். உடனடியாக அவர்களின் கண்களை பார்த்து "என்னை தொடாதே' என்று மிரட்டும் பாணியில் தெரிவிக்கலாம். மீறி தொட முயற்சித்தால் பலத்த சத்தம் போடலாம். மற்றவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பி, உடனடியாக உதவி பெற முடியும். உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு வரும் வழியில் சில டாக்சி, ஆட்டோ டிரைவர்கள், அதே போல பள்ளியிலும் சில நேரங்களில் இந்த பாதுகாப்பாற்ற தொடுதல் நிகழ்ச்சி நடக்கலாம். அதை உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தினமும் பள்ளியில் என்ன நடந்தது என்பதை நேரம் ஒதுக்கி கேட்க வேண்டும். அசாதாரண நிகழ்ச்சி நடந்து இருந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவற்றை குழந்தைகள் வாங்கி சாப்பிடக் கூடாது. பிஸ்கட், ஐஸ்கிரீம், சாக் லெட் போன்றவை ஏற்கனவே திறந்து மூடப்பட்டு இருப்பதை போன்று இருந்தால், அதை கட்டாயம் சாப்பிடக் கூடாது. அபாயகரமான சூழ்நிலையில் 1098 என்ற எண்ணுக்கு போன் செய்ய வேண்டும். அவர்கள் நிச்சயம் உதவுவார்கள். கூட்டத்தில் தொலைந்து போனால் போலீஸ் இருந்தால் அவர்களிடம் உங்கள் தாய், தந்தை, முகவரி, அவர்களின் மொபைல் எண்களை தெரிவியுங்கள். நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே உங்களுடைய மொபைல் எண்களை கொடுங் கள். புதிய நபர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் தந்தையின் மொபைல் எண்ணை கொடுங்கள். "மிஸ்டு கால்' கொடுக்கும் நபர்களிடம் பேச வேண்டாம். பயன்படுத்தாத "சிம்கார்டு' களை அழித்து விடவும் அல்லது அந்த மொபைல் நிறுவனத்தில் கூறி "சிம்கார்டு' செயல்படுவதை தடை செய்து விடவும். இவ்வாறு மோகன்ராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில், ஏ.வி.பி. பள்ளி தலைவர் சுப்பிரமணியம், தாளாளர் வெங்கடேஷ்வரன், இயக்குனர் குணசேகரன், முதல்வர் சந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாளை பிற்பகல் + 2 தனித்தேர்வு ரிசல்ட்

சென்னை : பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள், தேர்வுத்துறை இணையதளத்தில் 09ம் தேதி வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 தனித்தேர்வு, கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்தன. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இத்தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், தேர்வுத்துறை இணையதளத்திலும் (www.dge1.tn.nic.in), பள்ளிக்கல்வி இணையதளத்திலும் (www.pallikalvi.in) 09ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.மதிப்பெண் சான்றிதழ்கள், வரும் 15, 16, 18 ஆகிய தேதிகளில், சம்பந்தபட்ட தேர்வு மையங்களில் வழங்கப்படும். மாணவர்கள், தேர்வெழுதிய மையங்களுக்கு நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.விடைத்தாள் நகல் பெறவோ அல்லது மறுகூட்டல் செய்யவோ மாணவர்கள் விரும்பினால், மேற்கண்ட மூன்று தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, 18ம் தேதி மாலை 5.45க்குள், அதே அலுவலகங்களில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளமையில் சேமிப்பு; முதுமையில் பாதுகாப்பு: விழாவில் கலெக்டர் பேச்சு

கரூர்: கரூரில் உலக சிக்கன நாள் விழா கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த பேச்சுப்போட்டியில் சேரன் மெட்ரிக் பள்ளி அகிலா முதல்பரிசு, தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளி சீத்தாலட்சுமி இரண்டாம் பரிசு, பள்ளபட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரோசினி மூன்றாம் பரிசு பெற்றனர். கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது: நமது நாடு முழுவதும் உலக சிக்கன நாள் விழா அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அத்தகையை சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும். பாடுபட்டு தேடிய பணத்தை, பாதுகாப்பான வழியில் சேமிப்பது தான் சிறந்தது. தபால்துறை  செயல்படுத்தும் சிறு சேமிப்பு திட்டங்களில் சேமிப்பவர்களுக்கு நல்ல வட்டி கிடைப்பதுடன், அத்தொகை அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற பயன்படுகிறது.
இளமையில் சேமிப்பு முதுமையில் பாதுகாப்பு, ஒருவர் சேமிக்கும் தொகையானது முதுமையில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கிறது.  ஆடம்பர செலவுகளை குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் ஆண்டு முன்பே திருவள்ளுவர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் வாக்கை கடைபிடித்தால், வாழ்க்கை சிறப்புறும்.  அனைவரும் சிக்கனமாக செலவு செய்து அருகிலுள்ள தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சி.இ.ஓ., கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


வேலைவாய்ப்பு உருவாக்கும் சமுதாயக்கல்லூரி : ஐ.ஈ.சி.டி., முயற்சிக்கு பாராட்டு

திருச்சி: ""வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் மற்ற கல்லூரிகளுடன் இணைந்து சமுதாய கல்லூரிகளை உருவாக்குவதில், ஐ.ஈ.சி.டி.,யின் முயற்சி பாராட்டத்தக்கது,'' என்று துணைவேந்தர் மீனா பேசினார். திருச்சி பாரதிதாசன் பல்கலை வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறை சார்பில், "வணிகவியல் மற்றும் மேலாண்மையியலில் புள்ளியியல் தொகுப்புகளின் பயன்பாடு' குறித்த ஏழுநாள் பயிற்சிபட்டறை நடந்தது. துவக்கவிழாவுக்கு, துறைத்தலைவர் செல்வம் வரவேற்றார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் மற்றும் வேதியியல் பள்ளியின் துறைத்தலைவர் வேணு வனலிங்கம் தலைமை வகித்தார்.

உருமு தனலெட்சுமி கல்லூரி முதல்வர் சேகர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, செயின்ட் ஜோசப் கல்லூரி புள்ளியியல் துறை பேராசிரியர்கள் ஸ்டீபன் வின்சென்ட், சண்முகவடிவேல், விவேக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலையில் இருந்து 22 பெண்கள் உட்பட 50 ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு புள்ளியியல் கருவிகள், அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பல்கலை துணைவேந்தர் மீனா, நிறைவு விழாவுக்கு தலைமை வகித்து பேசியதாவது: கணிதம் மற்றும் புள்ளியியல் கோட்பாடுகளின் பயனால் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. புள்ளியியல் கருவிகள், கணினி அல்காரிதம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி பகுப்பாய்வு புரிந்து கொள்ள உறுதுணை புரிகின்றன. வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் மற்ற கல்லூரிகளுடன் இணைந்து சமுதாய கல்லூரிகளை உருவாக்குவதில், ஐ.ஈ.சி.டி.,யின் முயற்சி பாராட்டத்தக்கது. திருச்சியில் ஐ.டி., பார்க்கில், பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், அவை சார்ந்த சேவை நிறுவனங்களும் அமையவிருக்கிறது.

இச்சூழலில், வேலையில்லா பட்டதாரிகள் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சுயவேலைவாய்ப்பு பெறும் வகையில், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன், மெடிக்கல் கோடிங், மெடிக்கல் பில்லிங் போன்ற சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளை துவங்க ஐ.ஈ.சி.டி., மேற்கொண்டுள்ள முயற்சி சிறப்புக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் சான்றிதழ் வழங்கினார். முன்னதாக, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் மற்றும் வாணாள் வரை கற்றல் துறைத்தலைவர் பார்த்தசாரதி வரவேற்றார். நிதிக்கல்வியியல் துறைத்தலைவர் செல்வம் அறிக்கை வாசித்தார். ஏற்பாடுகளை, வணிகவியல்துறை உதவி பேராசிரியை காயத்திரி, பேராசிரியர் பாபு செய்திருந்தனர்.

பாலிடெக்னிக் பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கலாம்

சென்னை: "பாலிடெக்னிக் பாடத்திட்ட மாற்றம் குறித்து, இம்மாதம் 19ம் தேதிக்குள் கல்வியாளர்கள், கல்லூரி முதல்வர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம்' என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறன், பயிற்சியை இன்றைய தொழில்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையிலும், மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பாலிடெக்னிக் படிப்பிற்கான பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல்(2011 - 12) மாற்றியமைக்கப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம், வல்லுனர் குழுவால் வரையறுக்கப்பட்டு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் (www.tndte.gov.in)வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள், புதிய பாடத்திட்டம் குறித்து தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும்"socdcdote@yahoo.co.in'    என்ற இ-மெயிலுக்கு 19ம் தேதிக்குள் அனுப்பலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்.சி.சி.,யில் சேர அழைப்பு

சென்னை: ""பள்ளி, கல்லூரிகளில் இன்னும் நிறைய மாணவர்கள் என்.சி.சி.,யில் சேர வேண்டும்,'' என என்.சி.சி., துணை பொது இயக்குனர்(டி.டி.ஜி.,) சர்தாஜ் இமாம் தெரிவித்தார். தேசிய மாணவர் படையினருக்கான(என்.சி.சி.,), தேசிய அளவிலான சிறப்பு பயிற்சி முகாம், கடந்த 25ம் தேதி முதல் 3ம் தேதி வரை டில்லியில் நடந்தது. இம்முகாமில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளின் என்.சி.சி., மாணவர்கள் 80 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு, வரைபடத்தைப் பற்றி தெரிந்து கொள்வது, உயரம் தாண்டுதல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் தேசிய அளவில் தமிழக மாணவிகள், இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணிக்கம், தடை தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற கீதா உள்ளிட்ட 11 பேர் பரிசுகளை பெற்றனர். இவர்களுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அவ்விழாவில், தேசிய மாணவர் படை இயக்குனரக துணை பொது இயக்குனர்(டி.டி.ஜி.,) சர்தாஜ் இமாம் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். அவர் பேசும்போது, ""துப்பாக்கி சுடுதலில் தமிழக மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்ற குறை இந்த ஆண்டு நீங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் தமிழக என்.சி.சி., மாணவர்கள் மேலும் சாதிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இன்னும் நிறைய மாணவர்கள் என்.சி.சி.,யில் சேர வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், என்.சி.சி., குரூப் ஏ கமாண்டர் சுனில் சர்மா, உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வகுப்பறையில் மாணவர்களை வசப்படுத்துவது எப்படி?

"ஆசிரியர் பணி அறப்பணி... அதற்கு உன்னை அர்ப்பணி' என ஆசிரியர் பணியின் பெருமையை பறைசாற்றும் வாக்கியங்கள் பல உண்டு. இன்றைய காலகட்டத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களை பாடங்களில் கவனத்தை செலுத்து வைத்து, தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வைப்பதில், ஆசிரியர்களின் பணி மகத்தானது.

மாணவ பருவத்தில் எந்நேரமும் விளையாட்டு உணர்வு மேலோங்கி நிற்கும். அதிலிருந்து மாணவர்களை திசைதிருப்பி, வகுப்பறைகளில் போதிக்கும் கல்வியை கற்று கொள்ள வைப்பதற்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர்கள் அடித்தால் கூட மாணவர்களோ, பெற்றோர்களோ, "பையன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் அடிக்கின்றனர்,' என எடுத்து கொண்டனர். தற்போது எக்காரணம் கொண்டும் மாணவர்களை, ஆசிரியர்கள் அடிக்க கூடாது என அரசு சட்டம் கொண்டு வந்து விட்டது. தவறு செய்யும் மாணவர்களை கூட தண்டிக்க முடியாத நிலையில், பள்ளி நிர்வாகங்கள் அவர்களை படிக்க வைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.

வகுப்பறைகளில் மாணவர்களை வசப்படுத்துவது குறித்து மதுரை மகாத்மா பள்ளிகளின் மூத்த முதல்வர் பிரேமலதா கூறியதாவது:முக மலர்ச்சியுடன் இன்முகத்துடன் மாணவர்களை ஆசிரியர் வரவேற்கும் பட்சத்தில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிப்பை துவங்குவர். ஆசிரியர்கள் இரண்டாம் தாயாக மாறி மாணவர்களிடம் உள்ள நிறை, குறைகளை முன்கூட்டியே அறிந்து, அதற்கு தீர்வு காண வேண்டும். ஏதேனும் ஓர் இடத்தில் குறையோ, குற்றமோ, தவறோ இருந்தால், ""எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான் மண்ணில் பிறக்கும் வரை'' என்பதை உணர்ந்து, தாய்மை உணர்வுடன் அவர்களை அணுக வேண்டும்.மாணவர்களிடம் குறைகளை சொல்லும் போதும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தாமல், "கண்ணே, மணியே' என்ற இனிமையான சொற்களை பயன்படுத்தி, அவர்களை நல்வழிக்கு கொண்டு வர வேண்டும். அவர்கள் விரும்பும் வகையில் அவர்களது குறைகளை உணர செய்ய வேண்டும்.வகுப்பறைகளில் அனைத்து மாணவர்களையும் வட்டமாக அமர வைத்து, நண்பர்களாக மாறி மனம் திறந்து பேசும் போது, கண்டிப்பாக மாணவர்களை ஆசிரியர்கள் வசப்படுத்திட முடியும். பாடத்திட்டம், மாணவர்கள் சார்ந்த கல்வியாகவும், அவர்களை மையமாக வைத்து கற்பிக்கும் வண்ணமுமாக அமைய வேண்டும். பாடங்களை நேர்த்தியாகவும், அழகாகவும் கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு தான் படிக்கிறோம் என்ற உணர்வு வராத வண்ணமும், படிப்பில் முழுமையாக ஈடுபாடு வரும் வண்ணமும், கற்பிப்பதில் சிறந்த அணுகு முறையை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும். பாடங்களை கற்பிப்பதோடு, தியாக உணர்வுடனும், தன்னலமற்ற மனப்பான்மையுடனும் மாணவர்களுக்கு நீதி, மனித நேய கருத்துக்கள், ஒழுக்க நெறிகள் போன்றவற்றையும் போதிக்கும் ஆசானாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

என்ன ஆசிரியர்களே, இனி மாணவர்களை வசப்படுத்தி விடலாம் அல்லவா?

தீப ஒளி ஏற்றுவோம்!



*அல்லதை தீய்த்து
நல்லதை நிலை நாட்ட
பிரகாசமாக
தீப ஒளி ஏற்றுவோம்!
*உள்ளதைக் கொண்டு
நல்லறத்தோடு-இல்லாரும்
மகிழ்வுறச்செய்து
இன்ப ஒளி ஏற்றுவோம்!
*பாவ இருளை தகர்த்து
நம்பிக்கை ஒளியினை
புதுப்பித்துக்கொண்டு
புத்துணர்வுடன்
ஞான தீப ஒளி ஏற்றுவோம்!

சிறு சேமிப்பு திட்டத்தில் மாணவர்கள் ஈடுபாடு : மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு

ஊட்டி : "தபால் துறையின் சிறுசேமிப்பு திட்டத்தில், மாணவ, மாணவியரை அதிகளவில் பங்குபெறச் செய்து, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்' என, அழைப்பு விடப்பட்டுள்ளது. ஊட்டி அருகே, அணிக்கொரை அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக சிக்கன நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜு பேசுகையில், ""சிறு சேமிப்பு, வாழ்வின் ஊன்றுகோல்; போலியான ஆடம்பரமாக வாழ்பவன், தன்னை சீரழித்துக் கொள்வதோடு, சமூகத்துக்கு ஆபத்தாக உள்ளான்,'' என்றார்.

தலைமை தபால் நிலைய அதிகாரி ராமன், சிறப்பு அழைப்பாளராக பேசுகையில், ""தபால் துறையின் சேமிப்பு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவ, மாணவியர், குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகளவிலான தொகை வரை, சேமிப்புத் திட்டங்களில் சேரலாம். தபால் துறையின் சேமிப்பு, நாட்டின் உள் கட்டமைப்பில் பயன்படுத்துவதால், இதில் முதலீடு செய்து தேச வளர்ச்சியில் பங்கு பெறலாம். கூடலூர், பந்தலூரில், செப்டம்பர் வரை 96 கோடியே 40 லட்சம் வரை, சிறு சேமிப்பு மூலம் பெற்றுள்ளோம்,'' என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள், அவசரத் தேவைக்கு தங்க நகைகளை அடகு வைத்து, அபராத வட்டி செலுத்தி நகையை இழப்பது, அன்றாடம் நடந்து வருகிறது. மது அருந்த செலவழிப்பது, கந்துவட்டியில் சிக்குவது, 10 சதவீதம் மட்டும் குடும்ப செலவுக்கு ஒதுக்குவது போன்ற அவலங்கள் மாற வேண்டும்.  அரசு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய, மக்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.


விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""சேமிப்பு, நமது கலாச்சாரத்துடன் இணைந்தது; குடும்பத் தலைவிகள் சேமிப்பின் அடித்தளம். உலகப் பொருளாதார வீழ்ச்சியில் தாக்குப் பிடித்தோம் என்றால், அதற்கு சேமிப்பு தான் காரணம். டெபிட், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றில் நூதன மோசடி நடந்து வருகிறது; இந்த ஆபத்தின் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும். தபால் துறையில் மாணவ, மாணவியரை, ஆசிரியர்கள் பங்கேற்கச் செய்து, ஊக்கத் தொகை வழங்கி மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்,'' என்றார்.
"நெஸ்ட்' அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில்,""மழைநீர் சேகரிப்பு, உலக வெப்பமயமாதலை தடுக்கும் வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்; காகிதப் பயன்பாட்டை குறைக்கும் பட்சத்தில், மரங்களை பாதுகாக்க முடியும்,'' என்றார்.


குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சங்கரன் பேசுகையில், ""எரிபொருள் சிக்கனம், சமையல் காஸ் சிக்கனம் அவசியம். உடற்பயிற்சி மூலம், மருத்துவச் செலவுகளை குறைக்கலாம்,'' என்றார். கம்ப்யூட்டர் ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசுகையில், ""நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பயன்பாடு பார்வையை பாதிக்கும்; தேவைக்கு மட்டும் கம்ப்யூட்டர் பயன்பாடு, மின் சிக்கனத்துக்கு வழி வகுக்கும்,'' என்றார்.எல்லநள்ளி உதவி மின் பொறியாளர் சந்தீஷ், மின் சிக்கன வழிமுறைகள் குறித்து விளக்கினார். பள்ளி மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.

பேஸ்புக்கை பயனுள்ள தளமாக மாற்றிய தமிழர்கள்

சென்னை : முகநூல் எனப்படும் பேஸ்புக் மூலம் கருத்து போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்து முகநூலை பயனுள்ள தளமாக தமிழர்கள் மாற்றியிருக்கிறார்கள். இன்றைய தினம் ‌பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை என்கிற அளவுக்கு ஆண் - பெண் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது பேஸ்புக்.
சிலபல சட்டவிரோத சம்பவங்களை அரங்கேற்றியிருக்கும் இந்த பேஸ்புக் தளத்தை பயனுள்ள தளமாக மாற்றிக்காட்டியிருக்கிறார் தமிழர் ஒருவர். வசந்தகுமார் கிராபிக் டிசைனர் என்ற பெயருடைய பேஸ்புக் பயனாளர் தனது தளத்தில் நண்பர்களுக்கிடையே போட்டி நடத்தி பரிசுகளை வழங்க முடிவு செய்தார். அதன்படி சென்னை கிரியேட்டர்ஸ் என்கின்ற நிறுவனத்தின் துணையுடன் இணையத்தின் மூலம் “குடும்பத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணாம் ஆண்களா? பெண்களா?” என்ற ஒரு கருத்து மன்றத்தை உருவாக்கினார். இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த போட்டிக்கு நடுவர்களாக ஷண்முக மூர்த்தி, சரவணன், வசந்தகுமார் ஆகியோர் இருந்தனர். துபாயை சேர்ந்த தமிழரான சாதிக் அலியும் ‌அங்கிருந்தபடியே போட்டிக்கான ஏற்பாடுகளை கவனித்தார்.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் நடந்தது. முதல் பரிசை வென்ற முனுஸ்வாமி முத்துராமனுக்கு ரூ.2000 மதிப்புள்ள பரிசுப்பொருளும், இரண்டாவது பரிசினை வென்ற கௌதம் மற்றும் புவனேஷ்குமாருக்கு தலா ரூ.1250 மதிப்புள்ள பரிசுப்பொருளும் மூன்றாவது பரிசு வென்ற செல்வி மற்றும் வெங்கட் ஆகியோருக்கு ரூ.750 மதிப்புள்ள பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டன. ‌மேலும் 12 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது

பரிசளிப்பு விழாவின் ஒருகட்டமாக பேஸ்புக் நண்பர்கள் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளியின் குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

கல்வி உதவித்தொகை திட்டம் : விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை : "கல்லூரி மற்றும் பல்கலையில் பட்டப் படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: கல்லூரி மற்றும் பல்கலையில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 1,000 ரூபாயையும், அவர்கள் தொடர்ந்து முதுகலை படிப்பு படிக்கும்போது மாதம் 2,000 ரூபாயையும் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசு அளித்து வருகிறது.
மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பயில்பவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 1,000 ரூபாயும், நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டிலிருந்து மாதம் 2,000 ரூபாயும் வழங்குகிறது. இந்த உதவித்தொகை பெற, மேற்கண்ட மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பதுடன், பெற்றோரின் ஆண்டு வருமானம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.tn.gov.in/dge) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தொழில் பழகுனர் பயிற்சி வாரிய வேலைவாய்ப்பு முகாம்

சென்னை : தொழில் பழகுனர் பயிற்சி வாரியம், தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. தொழில் பழகுனர் பயிற்சி வாரிய தென்மண்டல இயக்குனர் அய்யாகண்ணு நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று, 2009-10 கல்வியாண்டில், பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., மற்றும் எம்.சி.ஏ., பட்டப்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக, வரும் 13, 14ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளோம்.
புதுக்கோட்டை மாவட்டம், புலன்குளத்தில் உள்ள கிங்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர்,careers.cognizant.com என்ற இணையதளத்தில், தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தகுதியானவர்களுக்கு 13ம் தேதி எழுத்துத் தேர்வையும், 14ம் தேதி நேர்காணலையும், முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான சி.டி.எஸ்., நடத்தும்.
மாநில அளவிலான இம்முகாமில் பங்கேற்போருக்கு, தஞ்சை புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் மற்றும் கந்தர்வகோட்டையிலிருந்து பஸ் வசதியும், தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 200 பேர், டி.சி.எஸ்., மற்றும் சி.டி.எஸ்., நிறுவனங்களில் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொழில் பயிற்சி பெறுவோர் வசதிக்காக துவக்கப்பட்டுள்ளhttp://www.boatsrp.com  என்ற இணையதளத்தை, வரும் ஜனவரி முதல் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 04362-282474, 282395 / 96 எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அய்யாகண்ணு கூறினார்.

வழி தவறும் மாணவச் செல்வங்கள்


-என்.நடராஜன்



சுமார் 14 வருடங்களாக பொரியியல் படித்த மாணவர்களுக்கு  பயிற்சியா 
ளராக இருந்தபோது கவனித்த ஒரு கவலைக்கிடமான பிரச்சனை இன்றும் தொடர்கிரது. 
முக்கியமாக, கிராமப்புரம் மற்றும் நகர்ப்புர  மக்கள் தங்கள் பிள்ளைகள்
தங்களைவிட வெல்வமும் சிறப்புமாக வாழ வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணத்தில் தங்கள் வாழ்வில் பல தியாகங்கள் செய்கிறார்கள். 
ஆனால் 50 சதவிகிதத்திற்கும்  அதிகமான மாணவர்கள், கல்வியில்  தீவிர கவனம் செலுத்தாமல்  கேளிக்கைகளில் செலவழிப்பதும்  ஒரு உண்மை.
பிற்காலம், அதுவும் போட்டிகள் நிறைந்த  உலகத்தில் பெற்றோரின் தியாகங்கள் பயன் இல்லாமல் போகும் என்பதை இந்த வகை  மாணவர்கள் சிறிதும் உணர்வதில்லை. ் 
கல்விக் காலம்  முடிந்தபின், குறைந்த மதிப்பெண்களுடன், சில வருடங்கள் வேலைக்காக  அலைவதும். பிறகு மேலும் மேலும் பயிற்சிகள் பெறுவதற்கு நேரம் மற்றும் பெற்றோரின் உழைப்பை நாசம் செய்யும் மக்களை என்ன சொல்ல? 
நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள், ஒரு மாதிரியாக, கல்விக்  காலத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருப்பதால்  அவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதுடன்., கல்லூரி நாட்களுக்குப் பிறகு தனி[ பயிற்சிகளில் பண விரையம் செய்வதில்லை.
கல்லூரிப் படிப்பு  முடித்தவுடனே, வேலையில் சேர்ந்து வாழ்க்கையில்; செட்டிலாவது  கண்கூடு. 
இதற்கு  வழி தவறிய மாணவர்கள்  உதவியுடன் தற்போதைய மாணவர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்துவது  கல்வியாளர்களின்
தலையாய  கடமை. இப்படிப்பட்ட பல மாணவர்களை  பயிற்சி தந்து
வேலையில்  அமர்ந்திட முகச் சமீப உதவியதுண்டு. வழிதவறிய மாணவர்களை
பிரித்துக்காட்டுவது அவர்கள் தேர்வுகளில் பெறும் மிகக் குறைந்த மதிப்பெண்கள். 

பொதுப்பிரச்னையில் மாணவர்களை ஈடுபடுத்தாமல் தவிர்க்க "அட்வைஸ்'

திருப்பூர்: ""பள்ளி மாணவர்கள் தொடர்புடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண மாணவர்களை நேரடியாக ஈடுபடுத்த தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக்கூடாது,'' என முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 925 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், 294 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. 125 உயர்நிலை மற்றும் 138 மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. பள்ளி மற்றும் மாணவர்கள் தொடர்புடைய பிரச்னைகளில் ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களை ஈடுபடுத்தி, தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியை மேற்கொள்கின்றனர். சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போரட்டங்களிலும், மாணவர்களை ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, சிறு பிரச்னைகளுக்கும் போராட்டத்தில் ஈடுபடும் குணத்தை இதுபோன்ற சம்பவங்கள் மாணவர்கள் மனதில் ஏற்படுத்துகிறது. இதேபோல், கடந்த வாரம் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதை கலெக்டர் சமயமூர்த்தி கண்டித்தார். இதையடுத்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொடக்க கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கவும், தலைமை ஆசிரியர் கூட்டங்களிலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கவும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில்,""பள்ளிகளில் இருந்து மாணவர்களை இதுபோல் வெளியே அனுமதிக்கக் கூடாது என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பிரச்னையாக இருந்தாலும், தலைமை ஆசிரியரோ, பெற்றோரோ அல்லது பொதுமக்கள் தான், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து மாணவர்களை பள்ளி சீருடையில் அழைத்து வருவதை பெற்றோரும் தவிர்க்க வேண்டும். கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

மாணவரை தங்கள் கண்ணாக ஆசிரியர்கள்நினைக்க வேண்டும்: கரூர் கலெக்டர் பேச்சு

கரூர்: ""மாணவர்களை தங்கள் கண்ணாக நினைத்து ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும்,'' என்று கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் கரூரில் நடந்தது.தேசிய விருது பெற்ற அரவக்குறிச்சி உஸ்வதுன்ஹசானா ஓரியண்டல் துவக்கப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆசியாபேகம், மாநில் விருது பெற்ற குப்புரெட்டிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கோவிந்தராஜ், சீத்தப்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மலர்க்கொடி, சிவாயம் மேற்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தாரகேஸ்வரி, தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கந்தசாமி, அவரக்குறிச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பூபதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.


விழாவில், 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற 31 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த 550 ஆசிரியர்களுக்கும், ஓய்வு பெற்ற 38 ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கலெக்டர் பேசியதாவது:வணக்கத்துக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களை தங்கள் கண்ணாக நினைத்து ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டு ம். தாயாகவும் மாறி அன்பு, க ண்டிப்பு காண்பிக்க வேண்டு ம். முக்கியமாக மாணவர்கள் 100 சதவீதம் மனமகிழ்வோடு, மனநிறைவோடு வாழ ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சி.இ.ஓ., கந்தசாமி, கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர். விழா முடிவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

டிச.3 மாற்றுத் திறனாளிகள் தினம் : மாநில விருதுகளுக்கு வரவேற்பு

சென்னை : டிச., 3 ல் மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுவதால், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியவர்கள் மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் டிச., 3 ல், "அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் தமிழகத்தில் டிச., 3 ல் மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத் திறன் படைத்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களும், அவர்களுக்காக சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகளும் வழங்கப்படும். மிகச் சிறப்பாக பணியாற்றி சுயதொழில் புரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள், மிகச் சிறந்த முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், மிகச் சிறப்பாக மறுவாழ்வு உதவிகளை அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். இவ்விருதுகளுக்காக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நவ., 10 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது சென்னையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்திலோ கிடைக்கும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரூவில் முதல் விமான பல்கலை.,


http://img.dinamalar.com/data/large/large_118833.jpg

மெல்போர்ன்: உலகின் முதல் விமான பல்கலை மற்றும் பயிற்சி மையம் பெங்களூரூவில் அமைய உள்ளது. 125 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகும் இந்த மையம் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட சென்டர் பார் ஆசிய பசிபிக் ஏவியேசன் நிறுவனமும்(சிஏபிஏ) பெங்களூரூவை சேர்ந்த சுப்ரமண்ய கன்ஸ்ட்ரக்ஷன் டெவலப்மென்ட் கம்பெனியும்(எஸ்சிடிசி) இணைந்து நடத்த உள்ளது.


வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் விமான போக்குவரத்துக்கு உள்ள தேவைப்பாடு அதிகரித்து வருவதை முன்னிட்டும், அடுத்த பத்தாண்டுகளில் 200 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் விமான போக்குவரத்திற்கு முதலீடு செய்யக்கூடும் என்று எதிர்பார்ப்பதாலும் இந்த பல்கலைகழகம் துவங்கப்படஉள்ளதாக சிஏபிஏ குரூப்பை சேர்ந்த எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் பீட்டர் ஹார்பின்சன் தெரிவித்தார்.


எஸ்சிடிசியின் சேர்மன் பாலசுப்ரமணியம் மேலும் கூறியதாவது: பெங்களூருவை தொடர்ந்து மும்பை ,டில்லி போன்ற நகரங்களில் செயற்கை கோள் கல்வியுடன் இந்த பயிற்சியை அளிக்கப்பட உள்ளதாக கூறினார். தொடர்ந்து இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்,தெற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் இது போன்ற பல்கலைகழகம் துவங்கப்பட உள்ளதாக கூறினார்.


பல்கலைகழகத்தில் சர்வதேச தரத்திலான பைலட்டுகள் இன்ஜினியர்கள்,டிராபிக் கண்ட்ரோலர்கள் மற்றும் பணிமனைகள், ஆய்வகங்கள் ,ஆராய்ச்சிமையம், போன்றவற்றை உருவாக்குவதே எங்களின் நோக்கம். இதற்காக சிஏபிஏ அமைப்பினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் ,சிவில் ஏர் நேவிகேஷன் சர்வீஸ் ஆர்கனைசேஸன்,பிளைட் சேப்டி பவுண்டேசன் போன்ற அமைப்புகளிடம் பேச்சுவார்த்தைநடத்தி வருகின்றனர்.


இந்த பல்கலை கழகம் அமைப்பதற்கு பெங்களூரூவை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் பெங்களுரூவில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆராய்ச்சிமையம் வடிவமைப்பு மையம்,மற்றும் பெரியளவிலான தொழில்நுட்ப மையங்கள் போன்றவையும் மக்களின் காஸ்மோ பாலிடன் வாழ்க்கைதரமும் ஒரு காரணம் என தெரிவித்தனர்.

"கடவுளின் குழந்தைகளுக்கு கெட்ட எண்ணங்கள் இருக்காது'

ஊட்டி : ""பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு, கெட்ட எண்ணங்களும், பிறருக்கு கெடுதல் செய்யும் மனோபாவமும் இருக்காது; அவர்கள் கடவுளின் குழந்தைகள்,'' என, புலிகள் காப்பக கள இயக்குனர் நெகிழ்ச்சி தெரிவித்தார். நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) சார்பில், தீபாவளி திருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி தாவரவியல் பூங்கா அருகேயுள்ள, காது கேளாதோர் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நடத்தப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ""பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு, எவ்வித கெட்ட எண்ணங்களும், பிறருக்கு கெடுதல் செய்யும் மனோபாவமும் இருக்காது; அவர்கள் கடவுளின் குழந்தைகள். அவர்களிடம் அன்பு செலுத்தும் பட்சத்தில், கடவுளின் ஆசியை நாம் நேரடியாக பெறலாம்.


மாற்றுத் திறனாளிகளிடம் அன்பு செலுத்துவதற்கு, அனைவரும் முன்வர வேண்டும்; அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதை தொடர வேண்டும்; அப்போது, நிச்சயமாக நம் வாழ்வு சிறக்கும்,'' என்றார். "நெஸ்ட்' அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் பேசியதாவது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள பாதுகாப்பு செயல் திட்டங்களை கடைபிடிக்க வேண்டும்; அதீதமான ஒலிகள், செவிகளின் கேட்கும் திறனை பாதிக்கும். வனம் சூழ்ந்த பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்காமல், வன விலங்குகளுக்கும் வனத்துறை சார்ந்து வசிக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் பயமற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும்.


தொடர் வெடிகள், சிறு குழந்தைகளுக்கு பய உணர்வை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள், இருதயம் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களை, அதிக வெடிச்சத்தம், நச்சுப் புகை பாதிக்கச் செய்யும். மின்சார உபகரணங்கள் உள்ள இடங்கள், மருத்துவமனை, அமைதி காக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள் பட்டாசு கொளுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; திறந்தவெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் உடைகளை அணிந்து, பட்டாசு கொளுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளை பயமுறுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளியை, பாரம்பரிய தன்மையோடு, வண்ணமயமான ஆனந்த திருநாளாக கொண்டாட வேண்டும். இவ்வாறு, சிவதாஸ் பேசினார். ஊட்டி உதவும் கரங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், கிரசன்ட் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கிரசன்ட் பள்ளி, நிர்மலா மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியரின் ஓவியம், பார்வையாளர்களை கவர்ந்தது.

கவர்ச்சி விளம்பரங்களில் ஏமாறக் கூடாது!

குன்னூர் : "இலவசம், பரிசு, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற விளம்பரங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து பொருள் வாங்குவது நுகர்வோரின் கடமை' என, நுகர்வோர் மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றக் கூட்டம் நடத்தப்பட்டது.


குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சபாபதி, சிறப்பு விருந்தினராக பேசியதாவது: ஒவ்வொரு நுகர்வோருக்கும் பாதுகாப்பு, தகவல் பெறுவது, தேர்வு செய்வது, முறையிடுவது, குறை தீர்ப்பது, நுகர்வோர் கல்வி பெறுவது, தூய்மையான சுற்றுச்சூழலை பெறுவது, அடிப்படை தேவைகளை பெறுவது என பல உரிமைகளை, 1986ம் ஆண்டைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழங்கியுள்ளது.


அன்றாட வாழ்வில் நமக்குள்ள பாதுகாப்பு உரிமைகளை, நுகர்வோர் அறியாமல் இருப்பதால், "டிவி' மற்றும் ஊடகங்களில் வரும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், தள்ளுபடி போன்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, உடலுக்கு கேடு விளைவிக்கும் மற்றும் பாதுகாப்பற்ற பொருட்களை வாங்குகின்றனர்.


தேவையற்ற செலவுகளை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்; தேவைக்கு மீறி பொருள் சேர்க்கக் கூடாது; கவர்ச்சி விளம்பரங்களை நம்பக் கூடாது; பொருட்களை வாங்கும் போது, தரம், எடை, வீரியம், விலை, காலாவதி ஆகும் நாள் ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்; ஐ.எஸ்.ஐ., மற்றும் "அக்மார்க்' முத்திரையுள்ள தரமானப் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்; எந்தவொரு பொருள் வாங்கினாலும், ரசீது பெற வேண்டும்.


இலவசம், பரிசு, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற விளம்பரங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, ஒரு பொருளை வாங்குவதும், ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருப்பதும் நுகர்வோரின் கடமை. இவ்வாறு, சபாபதி பேசினார்.


கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியை சுஜாதா, ஊட்டி - குன்னூர் சாலையில் காணிக்கராஜ் நகர் சாலையில் ஏற்பட்ட பாதிப்பு, வழித்தடத்தில் "எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது, நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.


நுகர்வோர் சங்க செயலாளர் சபாபதி, ""கடந்தாண்டு நவம்பரில் பொழிந்த மழையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட காணிக்கராஜ் நகர் சாலையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது; அதை கட்டிய கான்ட்ராக்டர் குறித்த விபரம், தரமானப் பொருட்களை கொண்டு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதா? என்ற விளக்கம், நீர் தேங்காமல் வடிகால் வசதியுடன் தடுப்புச் சுவர் அமைக்கப்படாததற்கான காரணம் என பல விளக்கங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின் கீழ் கேட்கப் பட்டுள்ளது.


ஊட்டி - குன்னூர் வழித்தடத்தில் "எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தில் பஸ் இயக்கக் கூடாது என்ற கோரிக்கையை, போக்குவரத்து கழக அதிகாரிகள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என்றார்.

இந்தியாவின் எதிர்காலம் மாணவர் கையில்: வங்கி அதிகாரி பேச்சு

ராசிபுரம்: ""இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் கையில்தான் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன,'' என, ஞானமணி கல்லூரியில் நடந்த விழாவில், கரூர் வைஸ்யா வங்கி முதன்மை பொது மேலாளர் சுகுமார் பேசினார்.ராசிபுரம் ஞானமணி கல்லூரி வணிக மேலாண் துறை சார்பில், மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது.


கல்லூரி நிறுவன தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார். தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். முதன்மை செயல் அதிகாரி விவேகானந்தன், நிர்வாக அதிகாரி பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் மாலாலீனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கரூர் வைஸ்யா வங்கி முதன்மை பொது மேலாளர் சுகுமார் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்கி பேசியதாவது:நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. அதுபோல் மாணவ, மாணவியர் தங்கள் அறிவுத்திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் உங்களை போன்ற மாணவர்களால் உருவாக்கப்பட்டது தான். தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் மாணவர்களே. இது இந்தியர்களின் அறிவாற்றலையும், தொழில் நுட்ப வளர்ச்சிøயும் காட்டுகிறது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி மாணவர் கையில்தான் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாமலை பல்கலையில் புதிய படிப்புகள் அறிமுகம்

சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வியில் புதிய படிப்புகளை மத்திய அமைச்சர் வாசன் அறிமுகம் செய்து வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில், 2010 -11 ஆண்டின் புதிய படிப்புகளான டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் செக்யூரிட்டி அனாலிசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதை, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் அறிமுகப்படுத்தி பேசுகையில், "பப்ளிஷிங் மற்றும் டிஜிட்டல் புத்தகங்களின் அபரிமிதமான தொழில் நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் நூலகங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது. வருங்காலத்தில் இத்தகைய டிஜிட்டல் புத்தகங்கள் படிப்படியாக நூலகங்களில் அமையப்பெறும்' என்றார்.அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் பேசுகையில், "சென்னையில் உள்ள டிஜிஸ் கேப் கேலரி மற்றும் பிலாய் நிறுவனமான ஸ்டைலஸ் அகடமியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பி.எஸ்சி., டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் டிப்ளமோ படிப்பான செக்யூரிட்டி அனாலிசிஸ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்' என்றார்.

பள்ளிகளில் கட்டாய காமிரா : போலீஸ் உத்தரவு

http://img.dinamalar.com/data/large/large_118148.jpg

சென்னை: சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருவதால் நகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும் என்றும் பள்ளிகளில் குழந்கைள் கடத்தலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் கூறியுள்ளார்.


தீபாவளியையொட்டி சென்னை பூக்கடை பகுதியில் 28 இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு, 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் துவக்க விழா இன்று நடந்தது. கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது; பூக்கடையில் பத்திரியன் தெரு, பந்தர்தெரு, மலைய பெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, அமரசன் தெரு, பிராட்வே பஸ்நிலையம் உள்ளிட்ட 28 இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை அமைத்துள்ளோம். தீபாவளி முடிந்த பிறகும் தொடர்ந்து இயங்கும். 24 மணி நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.


கோயம்பேடு பஸ்நிலையத்தில் போலீசார் மாறு வேடத்தில் நின்று ஆய்வு செய்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பவர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்படுவார்கள். தி.நகரில் நேற்று ஒரு நாளில் 10 லட்சம் பேர் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்கி சென்றுள்ளனர். கோவையில் 2 குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து பள்ளிகளின் வாசல்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறோம்.


ஆனால் பல பள்ளிகளில் இன்னும் கண்காணிப்பு காமிரா பொருத்தவில்லை. எனவே கட்டாயம் கேமரா பொருத்த வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் பெற்றோர் சங்கங்களை அழைத்து பேச இருக்கிறோம். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பும் ஆட்டோ, வேன் டிரைவர்கள் பற்றிய முழு விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

தென்தமிழகத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க நல்ல வாய்ப்பு

தூத்துக்குடி : ""தென்தமிழகத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இதைப் பயன்படுத்தி, சூரிய ஒளி மூலம் அதிக மின்சாரம் தயாரிக்க நல்ல வாய்ப்பு உள்ளதாக,'' தமிழக அரசின் எரிசக்தி வளர்ச்சி முகமை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர், கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்தார். தூத்துக்குடியில் நேற்று, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக, "சூரிய சக்தியின் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் எட்வின் சாமுவேல் வரவேற்றார். அதன், சூரிய சக்தி பிரிவு தலைவர் ரமேஷ் கைமல் தலைமை வகித்தார்.


கருத்தரங்கில், கிறிஸ்துதாஸ் காந்தி பேசியதாவது: இன்னும் 20 முதல் 50 ஆண்டுகளில் நிலக்கரி இல்லாமல் போகலாம். எனவே, சூரியன் மற்றும் காற்றிலிருந்து அதிகளவு மின்சாரம் தயாரிப்பது அவசியம். தமிழகத்தில் நிலக்கரி, எரிபொருள் உள்ளிட்டவை மூலம், தற்போது 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், காற்றாலை மூலம் 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய ஒளிமூலம் இந்தாண்டு 1,000 மெகாவாட் மின்சாரமும், அடுத்த 10 ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது குறைவாக உள்ளது. இம்முறை, பெங்களூரில் அதிகம் உள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழகத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவுள்ளதால், இங்கு சூரியஒளியை பயன்படுத்தி அதிக மின்சாரம் தயாரிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.


இதுதவிர சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் , சூரிய நீராவி மூலம் சமைப்பது உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இயங்கும் பிரிஜ்ட்கள் தற்போது, தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளன. அங்கு, அவை மருந்துகளை பாதுகாக்க பயன்படுகின்றன. சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து அதை வீட்டு விளக்குகள், தெருவிளக்குகளில் பயன்படுத்தலாம். தேவையான உபகரணங்களைஅமைத்து சூரிய ஒளிமூலம், குறைந்தளவு 50 கிலோ வாட், 100 கிலோ வாட் முதல் ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கலாம். இதுபோல, ஊராட்சியில் ஐந்து ஏக்கர் நிலத்தில் 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இவற்றிக்காக, குறிப்பிட்ட அளவு தொகை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம், என்றார்.

இருபதாயிரம் பெண்களுக்கு இலவச கல்வி : துணைவேந்தர் கல்யாணி தகவல்

மதுரை : ""தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 20 ஆயிரம் பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட உள்ளது,'' என துணைவேந்தர் ஏ.கல்யாணி தெரிவித்தார்.


மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எட்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், தற்போது மூன்று லட்சம் பேர் படிக்கின்றனர். இப்பல்கலையில் 133 சமுதாயக் கல்லூரிகள் உள்ளன. 90 படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்பல்கலைக்கு சென்னை சைதாப்பேட்டையில் 11 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் உருவாகிறது. டிசம்பர் முதல் பல்கலை அங்கு இயங்கும். இப்பல்கலையின் டிப்ளமோ தொழிற் படிப்புகளில் 50 ஆயிரம் பேர் படிக்கின்றனர். முடிதிருத்துவோர் ஐந்தாயிரம் பேருக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்துள்ளோம். விரைவில் சான்றிதழ், கருவிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.


பல்கலையின் 90 படிப்புகளுக்கும் பாடத்திட்டங்களை குறுந்தகடுகளில் தயாரித்துள்ளோம். பதினோறு பல்கலைகளின் ஒத்துழைப்புடன் 11 மையங்கள் செயல்படுகின்றன. விரைவில் டெலிகான்பரன்சிங் முறையில் இம்மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவோம். தமிழில் படிப்போருக்கு 25 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச கல்வி அளிக்கிறோம். இந்த ஆண்டே விதவைகள், பெற்றோர் ஆதரவை இழந்த 20 ஆயிரம் பெண்களுக்கு சமுதாய கல்லூரிகள் மூலம் இலவச கல்வி அளிக்க உள்ளோம். தொலைநிலைக் கல்வி கவுன்சில் நிதியின் கீழ் இது செயல்படுத்தப்படும். இவ்வாறு கல்யாணி கூறினார்.

மனிதனின் பெருமை பதவியில் இல்லை: ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பேச்சு

http://img.dinamalar.com/data/large/large_117667.jpg

கோவை : ""ஒரு மனிதனின் பெருமை, அவன் வகிக்கும் பதவியில் இல்லை; அந்த பதவியை கொண்டு அவன் சேவையில் இருக்கிறது,'' என, ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் பேசினார்.

பணியில் சிறந்த போலீசாருக்கு விருது வழங்கும் விழா கோவை ரோட்டரி கிளப் சார்பில், தொழில் மற்றும் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. போலீசாருக்கு விருது வழங்கி, தேசிய மின், ஆற்றல் மற்றும் இயற்கை வாயு தீர்ப்பாயம் தலைவரும், ஜார்க்கண்ட் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுமான கற்பகவிநாயகம் பேசியதாவது:ஐ.ஜி., அந்தஸ்தில் இருப்பவர்கள், "ஏசி' அறையில் இருந்து கொண்டு உத்தரவு பிறப்பிக்கலாம். களத்தில் பணியாற்றுவது கீழ்நிலை காவலர்கள்தான். அவர்கள் நினைத்தால் சிவில் வழக்கை கிரிமினல் வழக்காகவும், கிரிமினல் வழக்கை சிவில் வழக்காகவும் மாற்ற முடியும். சாதாரண கான்ஸ்டபிளாக இருந்தாலும், சிறந்த கான்ஸ்டபிள் என்ற பெயர் பெற முயற்சிக்க வேண்டும்.போலீசார் நினைத்தால் ஒரு பிரச்னையை சுமுகமாக தீர்க்கவும் முடியும்; ஒரு பிரச்னையை உருவாக்கவும் முடியும். நேர்மையாக பணியாற்றினால், ஓய்வு காலம் நிம்மதியாக இருக்கும். போலீசாரின் குழந்தைகள் மதிக்கப்படுவார்கள்; சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் மதிப்பையும் பெற முடியும்.காற்றை எதிர்த்து போராடியே காற்றாடி சுழல்கிறது; விண்ணை எதிர்த்து போராடியே விமானம் பறக்கிறது. மண்ணை எதிர்த்துப் போராடியே விதை முளைக்கிறது;


அலைகளை எதிர்த்துப் போராடியே ஓடம் நகர்கிறது. அநியாயத்துக்கு எதிராக போராடினால்தான் உலகம் அங்கீகரிக்கும். போராடும் குணம் என்பது, நம் உணர்வோடு ஒன்றித்திருக்க வேண்டும். குடும்பங்களை சேர்க்கவும், பிரிக்கவும் போலீசாரால் முடியும். அதற்காக கட்ட பஞ்சாயத்து செய்யாதீர்கள்; கனிவான பஞ்சாயத்து செய்யுங்கள். இன் றைக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் பணிக்கு செல்லுங்கள். இன்று வீட்டுக்கு ஏதாவது கொண்டு போக வேண்டுமென்று பணியாற்றாதீர்கள். எங்கே, எந்த சூழலில் பணியாற்றினாலும் நேர்மையாக இருங்கள்.நமது கரங்கள், பாறையை தூக்கும்போது பாறையாகவும், மலர்களை தூக்கும்போது மலர்களாகவும் இருக்க வேண்டும்; அதேபோல, ரவுடிகளைக் கையாளும்போது நீங் கள் ரவுடிகளாக மாறுவதில் தவறில்லை. சாதாரண மனிதர்களை கையாளும்போது, சாதாரண மனிதராக மாற வேண்டும். காக்கிச்சட்டை அணியும் போது, இதயத்தை கழற்றி வைக்க வேண்டுமென்ற வாக்கை நீங் கள் பொய்யாக்க வேண்டும்.


போலீசார் நேர்மையாய் இருப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால், நீங்கள் நேர்மையாக இருப்பது தெரிந்தால் உங்கள் மேலதிகாரியே உங்களை நிர்ப்பந்திக்க மாட்டார். சட்டத்தையும், மனசாட்சியையும் விட யாரும் பெரியவர் இல்லை. ஓய்வு பெறுவதற்கு முன், "எப்ப போவான்' என்று யாரும் நினைக்காமல், "நீங்க போறீங்களா...' என்று கவலையோடு கேட்டால், அதுதான் உண்மையான விருது.காவல்துறையில் கெட்ட விஷயங்களைச் செய்யும் சூழல் நிறைய வரும். நல்லவர்களை கைது செய்ய வேண்டியிருக்கும். எல்லா வழக்குகளும் ஜெயித்து விடாது; அதற்காக நம் முயற்சியைக் கை விட்டு விடக்கூடாது. முயற்சி மட்டுமே நம் கையில்; முடிவு ஆண்டவன் கையில். குறிக்கோள், உழைப்பு, முயற்சி, ஒழுக்கம், அடக்கம் இருந்தால் எந்தத் துறையிலும் தலைமையிடத்துக்கு வர முடியும்.சான்றிதழுக்காக வேலை செய்தால் அந்த வேலையை நன்றாக செய்ய முடியாது; வேலையை நன்றாகச் செய்தால், சான்றிதழ் தானாக வரும். ஒரு மரத்தின் பெருமை, உயரத்தில் இல்லை; அதன் பலனில் இருக்கிறது. ஒரு மலரின் பெருமை, அதன் நிறத்தில் இல்லை; மணத்தில் இருக்கிறது. ஒரு மனிதனின் பெருமை, பதவியில் இல்லை; பதவியைக் கொண்டு அவன் சேவை செய்வதில் இருக்கிறது.இவ்வாறு, நீதிபதி கற்பகவிநாயகம் பேசினார்.


ரோட்டரி மாவட்ட இயக்குனர் (வொகேஷனல் சர்வீஸ்) விஸ்வநாதன், திட்ட தலைவர் சுந்தரவடிவேலு, ரோட்டரி கிளப் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், எஸ்.ஐ.,க்கள் சந்திரமோகன், ஸ்ரீமதி, சுரேஷ் உள்ளிட்ட போலீசார் விருது பெற்றனர்.


அந்த மாணவன்...!முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் பேசுகையில், ""அந்தக் காலத்தில், எஸ்.ஐ., ஆக இருப்பவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் ஊரே அவரை வணங்கும். அதைப் பார்த்து எஸ்.ஐ., ஆக வேண்டுமென்று பள்ளி பருவத்திலேயே நினைத்த ஒரு மாணவன், அதற்காக முயற்சித்து எஸ்.ஐ., தேர்வுக்கு போனபோது மார்பளவில் ஒரு இன்ச் குறைவாக இருந்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் மேலும் படித்து வக்கீலாக, தலைமை நீதிபதியாகி இன்று உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறான்,'' என்றார். அப்போது, அரங்கிலிருந்த போலீசார், ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரும் அரங்கம் அதிர கரவோசை எழுப்பினர்.

2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : வரும் மூன்று மாதங்களில் உருவாகும்

http://img.dinamalar.com/data/large/large_117699.jpg

புதுடில்லி : "உணவுப் பொருள் விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வு போன்ற பிரச்னைகள் இருந்த போதிலும், இந்தியாவில் வேலைவாய்ப்புத் துறையில் திருப்திகரமான நிலைமை இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் சுகாதாரம், ஐ.டி., உள்ளிட்ட ஆறு துறைகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன' என்று பிரபல தொழிற்சேவை ஏஜன்சியான, "எர்னஸ்ட் அண்ட் யங்' நம்பிக்கை தெரிவித்துள்ளது.


அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வுகள் அவ்வப்போது வெளியிடப்படுவதை வைத்து, அங்கே மொத்த வளர்ச்சி குறித்த மதிப்பீடு செய்யப்படும்.மேலும், ரிசர்வ் வங்கி அடுத்த இரு நாட்களில் அறிவிக்க இருக்கும் வட்டி விகிதம் கடன் வசதிக் கொள்கையில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அதை பிரதிபலிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் பிரணாப், நேற்று தன் சொந்த ஊரான ஜாங்கிபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும், அதே சமயம் வளர்ச்சி தொடரும் வகையிலும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை அமையும்' என்று கூறியுள்ளார்.மேலும், வேலைவாய்ப்பு இனி நாட்டில் அடுத்த மூன்று மாதங்களில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதற்கு பதிலளிக்கும் விதமாக இத்துறையில் வல்லுனரான, "எர்னஸ்ட் அண்ட் யங்' அமைப்பின் இந்தியப் பிரிவின் தலைவர் என்.எஸ்.ராஜன் கூறியதாவது: இந்தியாவில் பொருளாதாரம் நிலையாக உள்ளது. அதன் அடையாளமாக மொத்த வளர்ச்சி அதிகரித்து வருகிறது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இந்திய நிறுவனங்கள், அதிகளவில் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளன.சுகாதாரம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) மற்றும் அதைச் சார்ந்த துறைகள், கல்வி மற்றும் பயிற்சி, உற்பத்தி, வங்கி நிதிச் சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் (பி.எப்.எஸ்.ஐ.,) என ஆறு துறைகளில் மொத்தம் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் இன்னும் மூன்று மாதங்களில் உருவாகும் .சுகாதாரத் துறையில் 60 ஆயிரம், ரியல் எஸ்டேட்டில் 50 ஆயிரம், கல்வி மற்றும் பயிற்சித் துறையில் 30 ஆயிரம், உற்பத்தி மற்றும் பி.எப்.எஸ்.ஐ., துறைகளில் தலா 20 ஆயிரம் என மொத்தம் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இதனால் கிடைக்கும்.


அடுத்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு ஐந்து லட்சம் பணியாளர்கள் தேவை.பொதுத் துறை நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளன. இந்த அளவு வேலைவாய்ப்பு ஏற்படும் என்பதற்கு காரணம், இந்திய மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம், கிராமங்களில் அரசுத் திட்டங்களால் ஏற்பட்ட வளர்ச்சி ஆகும். அதே சமயம், கல்வித் துறையில் அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

சுற்றுலா தகவல்களுக்கான வலைப்பூ - தங்களது பார்வைக்காக..

அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்!
வலைப்பூ உலகில் கல்வித் தகவல் மூலம் பல்வேறு செய்திகளை வழங்கி வருகிறோம்.
அத்துடன் தற்பொழுது சுற்றுலா குறித்த தகவல்கள் மற்றும் செய்திகளை வழங்கும் விதமாக


என்னும் வலைப்பூவினை துவங்கியுள்ளோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பார்வையிட்டு தங்களது கருத்துக்களையும் பதிவுசெய்திட வேண்டுகிறோம்!
நன்றி!