"போட்டிகள் நிறைந்த உலகில், சாதனைப் படைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர்,''

குன்னூர்:""போட்டிகள் நிறைந்த உலகில், சாதனைப் படைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர்,'' என, மாவட்ட கலெக்டர் நம்பிக்கை தெரிவித்தார்.குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், நேற்று பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் மரிய கொரட்டி வரவேற்றார்.மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், சிறப்பு அழைப்பாளராக, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில், ""பட்டம் பெறும் மாணவியர், தங்கள் எதிர்கால வாழ்க்கையை திறம்பட நிர்ணயம் செய்து கொள்ள, சிறந்த துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினர், தோல்விகளை ஒப்புக் கொள்வதில்லை; இந்த மனநிலையை தவிர்த்து, எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி பயில வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில், சாதனைப் படைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர். கல்வியோடு பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.பாரதியார் பல்கலைக் கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவியர் எழிலரசி, சாம்சன் லஹார், வத்சலா, சரண்யா, நித்யா, கிருத்திகா, ÷ஷாபா உட்பட 240 மாணவியர் சான்றிதழ் பெற்றனர். கல்லூரி துணை முதல்வர் ஷீலா நன்றி கூறினார்.



மீனாட்சி ராமசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஜயங்கொண்டம், ஜூலை 31: அரியலுர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க  விழா அண்மையில் நடைபெற்றது.

    தொடக்க விழாவுக்கு, மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர்  எம்.ஆர். ராகுநாதன் தலைமை வகித்தார்.

    இயக்குநர் ஆர். ராஜமாணிக்கம், எம்.ஆர். கல்வியல் கல்லூரி முதல்வர் எல்.  வரதராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.   முன்னதாக, எம்.ஆர். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பி. ராமராஜ்   வரவேற்றார். முதல்வர் ஆர். நீலாயதட்சி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை இரண்டாம் ஆண்டு ஆசிரியரி பயிற்சி நிறுவன மாணவ,  மாணவிகள் செய்திருந்தனர்

நிலவொளிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நிலவொளிப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் கைத்தறி மற்றும் உப தொழில்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பல குழந்தைகள் விடலை பருவத்தை கடந்து நின்றனர். அவர்கள் கல்வியைத் தொடர ஆர்வமாக இருந்தனர். அவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் நிலவொளிப் பள்ளிகளை துவக்கியது. இந்த திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் காரணமாக நூறு சதவீதம் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கல்வியை தொடர முடியாமல் இடை நின்றவர்களுக்காக நிலவொளிப் பள்ளியை நடப்பாண்டிலும் தொடர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.நிலவொளிப் பள்ளியில் சேர காஞ்சிபுரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பத்தை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அறிவொளி இயக்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நிலவொளிப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள், பயிற்சி குறிப்பேடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நிலவொளிப் பள்ளிகள் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகாந்தன் தெரிவித்தார்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ரோவர் கல்லூரி மாணவர்களை தாளாளர் வரதராஜன் பாராட்டினார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ரோவர் கல்லூரி மாணவர்களை தாளாளர் வரதராஜன் பாராட்டினார்.தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.இதில், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி மாணவர் சூரியபிரகாஷ் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சூரியபிரகாஷ், தீரன், விக்னேஷ், சபுரிதீன் ஆகிய மாணவர்கள் மூன்றாமிடம் பெற்றனர்.மாணவி சங்கீதா 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், வட்டெரிதல் போட்டியில் மாணவி பிரேமா மூன்றாமிடத்தையும், 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் மாணவி தமிழ்மணி இரண்டாமிடத்தையும் பெற்றனர்.மாணவிகள் தமிழ்மணி, லலிதா, மணிமேகலை, சங்கீதா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம், நீச்சல் போட்டியில் லலிதா, பிரியா, கவிதா. உமா ஆகிய மாணவிகள் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி தாளாளர் வரதராஜன் பாராட்டினார். இயக்குநர் சுவாமிநாதன், முதல்வர் ஜோசப், துணை முதல்வர் லீமா பீட்டர், பி.ஆர்.ஓ., ராஜீ, அலுவலக மேலாளர் ஆனந்தன், உடற்கல்வி இயக்குநர் மகாலெட்சுமி உடனிருந்தனர்.

அரசு மாமன்னர் கல்லூரியில்கணினி அறிவியல் ஆய்வு மையம் திறப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் ஆய்வு மையத்தை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.புதுக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மாமன்னர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.கம்ப்யூட்டர் பாடப் பிரிவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன கம்ப்யூட்டர்கள் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அறிவியல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஷ்வநாதன் தலைமை வகித்தார். முதல்வர் சேதுராமன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின் கம்ப்யூட்டர் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார். பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணிவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.கல்லூரிக்கு வந்த துணை முதல்வரை மாணவ, மாணவிகள் வரிசையாக அணிவகுத்து நின்று மலர்தூவி வரவேற்றனர். என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி

தர்மபுரி: தர்மபுரி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது.வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் எம்.எல்.ஏ., இன்பசேகரன் வெளியிட்ட அறிக்கை:போட்டிகள் வரும் 7ம் தேதி காலை 8.30 மணிக்கு தர்மபுரி ஒட்டப்பட்டி அவ்வைநகர் ஸ்ரீ ராஜகணபதி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பங்கøள் தர்மபுரி குமாரசாமிபேட்டை வடக்கு மாவட்ட தி.மு.க., கட்சி அலுவலகத்தில் கிடைக்கும்.மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விண்ணப்பங்கள் அனுப்ப வைக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 5,000 ரூபாயும், இரண்டாம் பரிசு 3,000 ரூபாயும், மூன்றாம் பரிசு 2,000 ரூபாயும், ஆறுதல் பரிசு ஐந்து பேருக்கு தலா 1,500 ரூபாய் வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா செப்டம்பர் 3ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கிறது.

பாபநாசத்தி இட்லி மாவு வாங்கினால்சட்னி இலவசம்

பாபநாசம்: பாபநாசத்தில் இட்லி மாவு வாங்கினால் சட்னி இலவசமாக வழங்கப்படுகிறது.ஆடி மாதம் வந்தால் ஜவுளி, நகை, பாத்திரக்கடைகளில் தள்ளுபடி என்று அறிவித்து மக்களை தங்கள் கடைக்கு தள்ளிக்கொண்டு போய் பணத்தை அள்ளும் காலம் தற்சமயம் பட இடங்களிலும் நடந்து வருகிறது. ஆனால், இட்லி மாவு வாங்கினால் சட்னி இலவசம் என்பதை கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் உழவர் சந்தை அருகே இட்லி மாவு விற்பனை செய்பவர் சேதுராமன் (66). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர். இவர் கடந்த ஓராண்டாக இட்லி மாவு விற்பனை செய்து வருகிறார். இவர் வியாபார போட்டியை சமாளிக்க ஆடி மாதத்தில் இவரிடம் வாங்கும் இட்லி மாவு பாக்கெட்டுடன் ஒரு பாக்கெட் தக்காளி சட்னி இலவசம் என்று அறிவித்துள்ளார். எந்திர உலகத்தில் அனைத்தும் ரெடிமேடாக கிடைப்பதால் இப்போது சட்னி அரைக்கும் வேலையும் மிச்சம் என்று பலரும் போட்டி போட்டுக் கொண்டு இட்லி மாவு வாங்கி வருன்றனர்.

மண்டல அளவில் துப்பாக்கி சுடும் போட்டி: ஈரோடு போலீசாருக்கு சாம்பியன் பட்டம்

கோவை: கோவையில் நடந்த மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், ஈரோடு மாவட்ட போலீசார் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். போலீசாருக்கான, மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மதுக்கரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி களத்தில் நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பங்கேற்றனர். போட்டியில், 100 யார்டு பிரிவில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் முருகன் முதல் இடம் பிடித்தார். திருப்பூரைச் சேர்ந்த முதல் நிலைக்காவலர் முருகேசன் இரண்டாவது இடத்தையும், ஈரோடு முதல் நிலைக் காவலர் சிவக்குமார் மூன்றாவது இடமும் பிடித்தனர். 

200 யார்டு பிரிவில் தர்மபுரியைச் சேர்ந்த எஸ்.ஐ.,சவுந்தரராஜன் முதல் இடத்தையும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு இரண்டாவது இடத்தையும், கோவை மாநகரில் பணியாற்றும் முதல் நிலைக்காவலர் சரவணன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

அடுத்ததாக 300 யார்டு பிரிவில் நீலகிரி மாவட்ட எஸ்.ஐ.,ஹேமலதா முதல் இடத்தையும், ஈரோடு மாவட்ட காவலர் சுப்பிரமணி இரண்டாம் இடத்தையும், ஏட்டு ராதாகிருஷ்ணன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 300 யார்டு(ஸ்நாப்)பிரிவில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏட்டு சித்தேஸ்வரன் முதல் இடத்தையும், நாமக்கல் மாவட்ட ஏடு மணி இரண்டாம் இடத்தையும், ஈரோடு மாவட்ட முதல் நிலைக்காவலர் சுப்பிரமணி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பிஸ்டல், ரிவால்வர் மற்றும் கார்பன் ரக துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. மூன்று நாட்கள் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று மதுக்கரை துப்பாக்கி சுடும் பயிற்சி களத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் உமாநாத், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

கோவை கமிஷனர் சாம்பியன்: கோவையில் நடந்த மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில், பிஸ்டல் மற்றும் ரிவால்வர் பிரிவில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு சாம்பியன் பட்டம் பெற்றார்.

 பிஸ்டல், ரிவால்வர் மற்றும் கார்பன் ரக துப்பாக்கி பிரிவுகளில் போட்டிகளில் ஈரோட்டைச் சேர்ந்த ரமேஷ், இன்ஸ்பெக்டர் குணசேகரன், சேலத்தைச் சேர்ந்த ஆனந்தன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோர் முதல் மூன்று இடங்களை தொடர்ந்து பிடித்தனர். ரிவால்வர், பிஸ்டல் பிரிவில் தனி நபர் சாம்பியனாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டார்.

""இளைஞர்கள் எங்கிருந்தாலும் தாய்நாட்டையும், பெற்றோரை மறக்கக்கூடாது,'' : பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன்

பெ.நா.பாளையம்:""இளைஞர்கள் எங்கிருந்தாலும் தாய்நாட்டையும், பெற்றோரை மறக்கக்கூடாது,'' என, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தினார்.கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசியதாவது:அறமும், ஒழுக்கமும் நேர்மையான வாழ்க்கைக்கு அடிப்படை. தனிமனிதனை சிறந்த குடிமகனாக மாற்றுவதே தாய்மொழி கல்வியின் நோக்கம். தாய்மொழியே பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென ஐ.நா., சபையின் "யுனெஸ்கோ' கடந்த 1953ல் அறிவித்தது. 

அந்நிய மொழி வாயிலாக கற்பதை காட்டிலும், மிக விரைவாக கல்வி பெற தாய்மொழியே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளது. அறிவியல் துறையில் குறிப்பாக கம்ப்யூட்டர் துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கலைச்சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், ஆங்கில அறிவும் அவசியம் தான்; அதற்காக ஆங்கில மோகம் தேவையில்லை.

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிரிடையே வாழ்வியல் சிந்தனைகள் தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்கள் அறிவு ஜீவிகளாக இருப்பதோடு, ஆன்மிகம் கலந்த அறிவுப்பாதையில் செல்ல வேண்டும். இளைஞர்கள் எங்கிருந்தாலும் பிறந்த நாட்டையும், பெற்றோரையும் மறக்கக் கூடாது. "சத்தியம், தூய்மை, துப்புரவு, குடியுரிமை, இரக்கம், பொதுநலம், பணிவு, ஆர்வம், சுயசிந்தனை, உடலுழைப்பு, அறிவின் தாகம், எளிமை, தன்னம்பிக்கை, தன்னடக்கம், தன்மானம்,சுயமரியாதை, சுய கட்டுப்பாடு உள்ளிட்ட 82 மனிதாபிமான சமூக, ஒழுக்க நன்னெறிகளை இளைஞர்களிடம் பயிற்றுவிக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் கூறுகிறது.

இந்த நன்னெறிகள் திருக்குறளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோரே முதல் ஆசிரியர்கள். குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை அடிப்படையாய் கொண்டது என்ற கருத்து பழங்கதை. அறிவுத் திறனே முக்கிய காரணி என்ற கருத்து உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தை பெருக்கி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே 21ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும். 

உலக அளவில் விண்வெளித்துறை, பாதுகாப்புதொழில் நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் மேம் பாடு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. வரும் 2020ல் இந்தியா வளமான தேசமாக மலர ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.விழாவில், கல்லூரி தாளாளர் லட்சுமணன், செயலாளர் ஆறுச்சாமி, முதல்வர் தேவி உள்பட பலர் பங்கேற்றனர்; 792 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.


அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் கடைசி தேதி ஆக.,10

கோவை:2010-2011ம் ஆண்டில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம், கோவை அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் நேற்று முதல் வழங்கப்படுகிறது.கோவை மணிக்கூண்டு பகுதியில் உள்ள அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் பி.எட்., படிப்புக்கு 125 இடங்களும், எம்.எட்., படிப்புக்கு 25 இடங்களும் உள்ளன. இதில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் நேற்று முதல் கல்லூரியில் வழங்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 300 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 175 ரூபாயும் கொடுத்து விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள் சான்றொப்பமிட்ட ஜாதிச் சான்றிதழை காண்பித்து சலுகை கட்டணத்தில் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். தினமும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை விண்ணப்ப படிவம் வழங்கப்படும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். கவுன்சிலிங் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பி.எட்., கல்லூரிகளில் சேர விரும்புபவர்கள் மட்டும் இந்த விண்ணப்ப படிவத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அரசியல் அறிவியல், தர்க்கவியல், சமூகவியல், உளவியல், இந்திய கலாச்சாரம் ஆகிய பாடங்களை பட்டப் படிப்பில் படித்த மாணவர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்படுவதில்லை. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "செயலாளர், தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை(2010-2011), வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்(தன்னாட்சி), காமராஜர் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை-5' என்ற முகவரிக்கு ஆக., 10ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இத்தகவலை, கல்லூரி முதல்வர் மேரி லில்லி புஷ்பம் தெரிவித்தார்.

மருத்துவ ஆராய்ச்சி பயிற்சி மையம் கே.டி.வி.ஆர். குழுமம் துவங்குகிறது

கோவை:கே.டி.வி.ஆர். விஜயதீபா குரூப் சார்பில் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி, பயிற்சி வகுப்பு மையம் துவக்கப்படவுள்ளது.இது பற்றி கே.டி.வி.ஆர். குரூப் மருத்துவமனை இயக்குனர் சுந்தரமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் முன்னோடியாக திகழும் "கிளினிமைன்ட்ஸ்' அமைப்புடன் இணைந்து, ஆக.,14ம் தேதி புதிய பயிற்சி மையம் துவக்கப்படவுள்ளது. வேலாண்டிபாளையம் கே.டி.வி.ஆர். கார்டனில் இம்மையம் துவக்கப்படுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவக்கப்படவுள்ள இந்த பயிற்சி மையத்தில், ஆன்லைன் மற்றும் வகுப்பறைகள் வாயிலாக பயிற்சிகள் அளிக்கப்படும். இது தொடர்பாக கிளினிமைன்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விரைவில் சென்னையிலும் ஒரு மையத்தை துவக்கவுள்ளோம். வரும் 2014ல் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படுவர். இதற்கான பயிற்சி பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற கிளினிமைன்ட்ஸ் நிறுவனம் உதவும். மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி, பார்மசி, பயோடெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி மற்றும் அறிவியலைப் பாடமாக படித்த மாணவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம். தேர்வு செய்யும் துறையின் அடிப்படையில், பயிற்சி வகுப்புகளின் காலம் மூன்று மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை மாறுபடும். சான்றிதழ்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வழங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


கல்லூரிகளுக்கிடையேயான குழு விளையாட்டு போட்டிகள்

தேனி:குழு விளையாட்டு போட்டிகளில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி அணி மூன்று போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்தியது. மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் கலை- விளையாட்டு விழா தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.கலெக்டர் முத்துவீரன் தலைமை வகித்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்லதுரை வரவேற்றார். தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் வள்ளிநாயகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தேனி என்.எஸ். பெண்கள் கல் லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.நேற்று நடந்த குழு விளையாட்டு போட்டிகளில் கபாடியில் ஆண்கள் பிரிவில் உத்தமபாளையம் காஜி கருத்த ராவுத்தர் கல்லூரியும், பெண்கள் பிரிவில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியும், வாலிபால் போட்டியில் ஆண் கள் பிரிவில் தேனி கம்மவார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெண்கள் பிரிவில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல் லூரி, கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பாரத் நிகேதன் இன்ஜினியரிங் கல்லூரி, பெண்கள் பிரிவில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி அணிகளும் வெற்றி பெற்றன. இன்று தடகள போட்டிகள் நடக்கின்றன.

திண்டுக்கல்லில் மாநில கால்பந்து போட்டி

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கிடையேயான மாநில கால்பந்து போட்டி துவங்கியது.எஸ்.எம்.பி.எம்., மேல் நிலை பள்ளியில் நாக்-அவுட் முறையில் நடக்கும் போட்டியில் 10 அணிகள் பங்கேற் கின்றன. துவக்க விழாவிற்கு பள்ளி தலைவர் மோகன்ராஜன் தலை மை வகித்தார். மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ராஜா முன்னிலை வகித்தார். தாளாளர் கனகசபை, மாவட்ட கால் பந்து கழக செயலாளர் சண்முகம், மாவட் ட நடுவர் சங்க செயலாளர் ராஜேந்திரபிரசாத் உட்ப பலர் பங்கேற்றனர்.முடிவுகள்: முதல் போட்டியில் நெய் வேலி என். எல்.சி., ஆண்கள் மேல்நிலைபள்ளி அணி எஸ்.எம். பி.எம்., அணியை 3:0 என்ற கோல்கணக்கில் வென்றது.* மற்றொரு போட்டியில் காரைக்குடி சுப்பையா அம்பாலன் மெட்ரிக் பள்ளி அணி கோவை சுவாமி சிவானந்தா மேல்நிலைபள்ளி அணியை 6:0 என்ற கோல்கணக்கில் வென்றது. போட்டிகள் இன்றும் நாளையும் நடக்கிறது. இறுதி போட்டி நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது.

பள்ளி நேரங்களில் மாணவருக்கு உதவும் போக்குவரத்து பணியாளர்

மதுரை:மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, அரசு போக்குவரத்து அதிகாரிகள் பள்ளி அருகில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் 605 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 10 லட்சம் பேர் பயணிக்கின்றனர். பள்ளி மாணவ, மாணவியருக்கு 1.68 லட்சம் இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது.மாணவ, மாணவியர் பஸ்சில் ஏற முயற்சிக்கும் போது சிரமங்களை தவிர்க்க போக்குவரத்து அதிகாரிகள், பணியாளர்களைக் கொண்டு ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர், போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக அனைத்து கிளை மேலாளர் களும், ஒவ்வொரு பள்ளியை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் உதவியாளர்களுடன் சென்று, பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் பஸ்ஸ்டாப்புகளில் நின்று மாணவர்களை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். மேலும் இந்த நடவடிக்கைகளை தொடர பள்ளியில் உள்ள என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஸ்கவுட் இயக்கத்தையும் ஈடுபடுத்த தலைமை ஆசிரியர்களை வலியுறுத்தி உள்ளனர்.

பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்குசறுக்குப்பாதை, கழிப்பறை வசதிகள்

மதுரை:பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென சறுக்குப்பாதை, கழிப்பறை அமைப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.மதுரையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்ட கூடுதல் இயக்குனர் கருணாகரன் தலைமை வகித்தார். இணை இயக்குனர்கள் கார்மேகம் (அனைவருக்கும் இடைநிலை கல்வி), பழனிச்சாமி (மேல்நிலை கல்வி), ராமேஸ்வர முருகன் (பணியாளர் தொகுதி), தர்மராஜேந்திரன் (இடைநிலை கல்வி), ராஜராஜேஸ்வரி (தொழிற்கல்வி), உஷாராணி (என்.எஸ்.எஸ்.,) உட்பட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், பள்ளிகளில் வசதிகள், மாதிரி பள்ளிகள் அமைப்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த ஆண்டு பள்ளிச் சீரமைப்பு மாநாட்டை தேனி, விருதுநகர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 6, 7, 8ம் வகுப்புகளில் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் "இன்ஸ்பயர் அவார்டு' வழங்கப்பட உள்ளது. இதுதவிர மாற்றுத் திறனாளிகளுக்காக பள்ளிகளில் சறுக்குப் பாதை அமைக்கப்படும். இதற்காக பள்ளிகளுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும்.

கழிப்பறை வசதிக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். இவற்றை எந்தெந்த பள்ளிகளில் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் பணிக்காலத்தில் இறந்த ஆசிரியர்கள், ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை விரைவுபடுத்துவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். விரைவில் 200க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கலை பண்பாட்டு விருது: பத்து கலைஞர்கள் தேர்வு

விருதுநகர்:மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கான விருதுக்கு பத்து கலைஞர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். 2008-09க்கான கலை இளமணியாக ஸ்ரீவில்லிப்புத்தூர் தபேலா கலைஞர் முருகலட்சுமி, கலை வளர்மணியாக மம்சாபுரம் தப் பாட்டக்கலைஞர் உமாராணி, கலை சுடர்மணியாக மேட்டமலை ராஜாராணி ஆட்ட கலைஞர் அ.ஆறுமுகம், கலை நன்மணியாக தொப்பலாக்கரை குறவன் குறத்தி ஆட்ட கலைஞர் எஸ்.கருணாநிதி, கலை முதுமணியாக ராஜபாளையம் மிருதங்க கலைஞர் ஏ.கே.கழுகுமலைராஜா ஆகியோர் தேர்வு பெற்றனர்.

2009-10க்கான கலை இளமணியாக ஸ்ரீவில்லிப்புத்தூர் குரலிசைக் கலைஞர் வெ.கிருத்திகா, கலை வளர் மணியாக ராஜபாளையம் கரகாட்ட கலைஞர் மு.அகத்தியன், கலை சுடர் மணியாக விருதுநகர் கிராமிய நடன கலைஞர் ஏ.கே.ரவி வர்மன், கலை நன்மணியாக ஏழாயிரம்பண்ணை உறுமிக்கலைஞர் எம்.ஆர்.கணேசன், கலைமுதுமணியாக ராஜபாளையம் குரலிசைக் கலைஞர் பெ.முத்துலட்சுமி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.

இன்ஜி., தமிழ் வழி கல்வியில் 600 மாணவர்: துணைவேந்தர் தகவல்

அரியலூர்: அரியலூர்  இன்ஜினியரிங் கல்லூரிக்கு  திருச்சி அண்ணா பல்கலை துணை வேந்தர் தேவதாஸ் மனோகரன் வருகை புரிந்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்சி அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 56 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளான திருச்சி, திருக்குவளை, அரியலூர், பட்டுக்கோட்டை, பன்ருட்டி ஆகிய ஐந்து இன்ஜினியரிங் கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் உள்ளிட்ட இரண்டு பாடப்பிரிவுகளிலும் தலா 60 இடங்கள் வீதம் மொத்தம் 600 இடங்களுக்கு தனியே மாணவர் சேர்க்கை நடப்படுகிறது.தமிழக முதல்வர் உத்தரவுப்படி அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் அந்தந்த பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்து, கிராம மேம்பாட்டுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ளும். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அரியலூர் அண்ணா பல்கலைகழக இன்ஜினியரிங்  கல்லூரியின் நிர்வாகம் உள்கட்டமைப்பு மற்றும் லேப் வசதி மேம்பாட்டுக்காக தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் முதல் கட்டமாக 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். மேற்கண்ட பணிகள் ஓராண்டில் செய்து முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் அண்ணா பல்கலை  இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதுக்கு கவுன்சிலிங் மூலம் உத்தரவு பெற்று வந்த மாணவ, மாணவிகள் சேர்க்கையை, துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் துவக்கி வைத்தார். காவனூர் கிராமத்தில் அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லூரிக்கு கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.ஆய்வின் போது கல்லூரி முதல்வர் கந்தசாமி, தனி அலுவலர் பால்சிங் மோசஸ், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் பலர் உடனிருந்தனர்

இளைஞர்களுக்கு குறுகிய கால தொழிற்பயிற்சி தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்குஅழைப்பு

திருப்பூர்:இளைஞர்களுக்கு குறுகிய கால தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பங்கேற்க, தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.கலெக்டர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகிய கால தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. எலக்ட்ரிக்கல், பிளம்பிங், கார்பெண்டரி, பேப்ரிக்கேசன், பெயின்டிங் துறைகளில் குறுகிய கால பயிற்சி அளிக்க, உரிய அங்கீகாரம் பெறப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள், திட்ட அலுவலர், திட்ட செயலாக்க அலகு (மகளிர் திட்டம்), கலெக்டர் அலுவலக வளாகம், காமராஜ் ரோடு, திருப்பூர் என்ற முகவரிக்கு ஆக., 13க்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயிற்சி வகுப்பில் பல்வேறு நாடுகளில் இருந்து 250 மருத்துவர்கள் பங்கேற்பு :

மணப்பாக்கம் : இந்தோ - ஜெர்மன் எலும்பியல் அறக்கட்டளை சார்பில் சென்னை, மியாட் மருத்துவமனையில் நேற்று துவங்கிய மூன்று நாள் பயிற்சி வகுப்பில் 250 மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் வகுப்பில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை குறித்து டாக்டர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.இந்தோ - ஜெர்மன் முடநீக்கியல் அறக்கட்டளை, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை, விபத்து அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்து டாக்டர்களுக்கு முதுநிலை படிப்பை மூன்று நாட்கள் நடத்துகிறது.

 இதில், முதல் நாளான நேற்று முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை குறித்தும், இந்த அறுவை சிகிச்சையில் சமீபத்திய தொழில்நுட்பம் குறித்தும் டாக்டர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்தும் 350க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்.இந்த முதுநிலை படிப்பு குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன்தாஸ், இந்தோ - ஜெர்மன் முடநீக்கியல் அறக்கட்டளை செயலர் பிருத்வி மோகன்தாஸ், அறுவை சிகிச்சை நிபுணர் தேவதாஸ் ஆகியோர் கூறியதாவது:கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் எலும்பு முறிவு சிகிச்சை அளிக்க, நோயாளிகள் அசைவுகள் இன்றி தங்கள் மூட்டுக்களை எப்படி நிலையாக வைத்திருக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அதுபோன்ற சிகிச்சை தேவையில்லை. மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, அறுவை சிகிச்சைகள் எளிமையாகவும், வெகு விரைவில் நோயாளிகள் சகஜ நிலைக்கு திரும்பவும் வழிவகுக்கிறது.

இந்தோ - ஜெர்மன் எலும்பியல் அறக்கட்டளை 1992ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆர்தோ பிரிவில் சிறப்பு பயிற்சி பெற இதுவரை 200க்கும் மேற்பட்ட இந்திய டாக்டர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.  இந்த அறக்கட்டளை சார்பில் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு சர்வதேச முதுநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் சமீபத்திய எலும்பியல் தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகிறது. இப்படிப்புகள் மூலம் எலும்பியல் சிகிச்சை தரத்தில் இந்தியா வெகு விரைவாக முன்னேறியுள்ளது.இந்த ஆண்டு, தற்போது துவங்கப்பட்டுள்ள முதுநிலை படிப்பில், முதுகுத்தண்டு நிலைப்படுத்துதல், விபத்துகளின் போது மீட்டாபிசீஸ் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் எலும்பு முறிவுகள், இடுப்பு மற்றும் மூட்டு பகுதிகளில் செயற்கை மூட்டுக்களை வாழ்நாள் முழுவதும் செயல்பட வைப்பது எப்படி என்பது குறித்து மூன்று நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தினமும் காலை வகுப்புகளும், பின்னர் நேரடி அறுவை சிகிச்சைகளும் நடக்கும். இதில், 15க்கும் மேற்பட்ட சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர்களும், 250 இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்களும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வர்.பொதுவாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சிதைவினை ஏற்படுத்தாத மூட்டுக்கள் மிக அவசியம்.மிக குறைவான உராய்தலுடன், சிரமம் இல்லாத நகர்வினை ஏற்படுத்தும் வகையிலும், சிதைவு ஏற்படாத வகையிலும் செயற்கை மூட்டுக்களை உருவாக்க வேண்டும்.புதிதாக உருவாகியுள்ள "டெல்டா செராமிக்' வகை மூட்டுக்கள் மிக அதிக வலுபெற்றது. கப்பல் கட்டுமானம், ஆட்டோமொபைல் தொழிற்துறையில் இவை பயன்படுத்தப்படுகின்றன. டெல்டா செராமிக் பந்துகள், டெல்டா செராமிக் சாக்கெட்டிற்குள் அசையும் போது, எந்த ஒரு சிதைவுகளும் ஏற்படவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவில் முதல் முறையாக டெல்டா செராமிக் மூலம் மியாட் மருத்துவமனை 372 இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளது. குறிப்பாக, 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இது பொருத்தப்பட்டது. இந்த செயற்கை மூட்டு, விளையாட்டு வீரர்கள், இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.பேட்டியின் போது வெளிநாட்டு டாக்டர்கள் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துறை நிபுணர்கள் உடனிருந்தனர்.

சங்க கால கோவில்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: ரீச் பவுண்டேஷன் நிறுவனர் பேச்சு

சென்னை : சங்க கால கோவில்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என ஓய்வுப் பெற்ற தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி. சத்தியமூர்த்தி பேசினார்.ஓய்வு பெற்ற தொல்லியல் துறை கண்காணிப்பாளரும், "ரீச் பவுண்டேஷன்' நிறுவனருமான  டி.சத்தியமூர்த்தி,  சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி ஐயர் பவுண்டேஷன்  அரங்கத்தில், "தமிழகத்தில் பல்லவர் காலத்திற்கு முந்தைய கோவில்கள்' என்ற தலைப்பில் பேசியதாவது: நம் நாட்டில் பழங்காலம் தொட்டே ஏராளமான கோவில்களும், சிற்பங்களும் கட்டடகலை அமைப்புகளும் நமது கலாசார பண்பாட்டின் சிறப்பு இயல்புகளை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவதாக அமைந்து உள்ளது.அந்த வகையில் வேம்பத்தூர், "வீற்றிருந்த பெருமாள் கோவில்' எங்களது ரீச் பவுண்டேஷனால் கண்டறியப்பட்டுள்ளது.இந்த கோவில் செங்கற்களால்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் சங்க காலத்தை சேர்ந்தது என்றும் இதே போன்ற கட்டட அமைப்பை கொண்ட புத்தர் கோவில் ஒன்று காவேரிப்பட்டிணத்தில் இருந்ததாக தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்."வீற்றிருந்த பெருமாள் கோவில்' சங்க காலத்திற்கு முன்பு நிகழ்ந்த சுனாமி தாக்குதலுக்கு உள்ளானதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.இக்கோவிலில் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்திருந்தாலும் தற்போதும் அதன் பழமையான கட்டமைப்பு உள்ளது.இங்கு குரவை கூத்து சிற்பம் தற்போதும் உள்ளது. அங்கு உள்ள ஓவியங்களும், செங்கலால் கட்டப்பட்ட கோபுரமும் அப்பகுதியினரால்  பாதுகாக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.

இதே போன்று சென்னை அடுத்த சாலுவான் குப்பத்தில்  அமைந்திருந்த சுப்ரமணியர் கோவிலிலும் பாதுகாக்க படாமல் இருந்தது.அக்கோவிலை நான் தொல்லியல் துறையில் பணிபுரிந்த போது கண்டறிந்தேன். தற்போது அக்கோவிலின் பழமையான அடையாளமாக சிதிலமடைந்த அதன் அடிப்படை அம்பசங்கள் அப்படியே உள்ளன.இது போன்று தமிழகத்தில் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், கட்டட அமைப்புகளை கண்டறிந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.இவ்வாறு சத்தியமூர்த்தி பேசினார். விழாவில், ஏராளமான தொல்லியல் துறை ஆர்வலர்கள்  பங்கேற்று தங்கள் சந்தேகங்களுக்கான பதில்களை சத்தியமூர்த்தியிடம் கேட்டறிந்தனர்.

கோவை செம்மொழிப் பூங்கா பணி 18 மாதங்களில் முடியும்:மேலாண் இயக்குனர் தகவல்

கோவை:""கோவையில் முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி 18 மாதங்களில் முடியும்,'' என, தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி நிறுவன மேலாண் இயக்குனர் பனீந்திர ரெட்டி தெரிவித்தார்.
கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நினைவாக, கோவை மத்திய சிறை அமைந்துள்ள இடத்தில் சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். செம்மொழி மாநாட்டிலும் இது முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இந்த பூங்கா அமைப்பது தொடர்பாக, அரசால் ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு, முதல் கட்டப் பூங்கா அமைப்பதற்காக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த பூங்கா அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த"ராஜேந்திரன் அசோசியேட்ஸ்' இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இது தொடர்பான ஒருங்கிணைப்புக்கூட்டம், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி நிறுவன மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பனீந்திரரெட்டி தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், அசோசியேட்ஸ் சார்பில் ரூப்மதி ஆனந்த் பங்கேற்று, செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை "பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலமாக விளக்கினார். பூங்காவிற்குள் அமையவுள்ள பகுதிகள், தாவர வகைகள், தண்ணீர்த் தேவை உள்ளிட்ட பல விஷயங்களையும் அவர் விளக்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் பனீந்திரரெட்டி கூறியதாவது:செம்மொழிப் பூங்கா அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறை அமைந்துள்ள 165 ஏக்கர் பரப்பில், செம்மொழிப் பூங்கா அமைப்பது தொடர்பான முழுமைத் திட்டத்தை (மாஸ்டர் பிளான்) தயாரிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.இதைத் தயாரிக்கவுள்ள நிறுவனத்துக்கு, பிரதான வாயில், மல்டி லெவல் கார் பார்க்கிங், மாநாட்டுக்கூடம் ஆகியவற்றை எங்கே அமைப்பது, தண்ணீர்த் தேவையை எப்படி நிறைவேற்றுவது என்று "கன்சல்டன்ஸி' நிறுவனத்துக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அதுபற்றியும் இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது.
ஒரு நாளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுமென கணக்கிடப்பட்டுள்ளது. 
அதேபோல, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் பற்றியும் இருக்கும் என்றும் முடிவு செய்ய வேண்டியுள்ளது. முதல் கட்டமாக, காலியாகவுள்ள 45 ஏக்கர் பரப்பில் பூங்காவை அமைப்பதற்காக நில அளவை செய்யப்பட்டுள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரை ஏற்கப்பட்ட பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இந்த பணி, இன்னும் 20 நாட்களில் முடியும். அதன்பின் "டெண்டர்' உள்ளிட்ட பணிகள் நடக்கும். முதற்கட்ட பூங்கா அமைக்கும் பணி துவங்கி 18 மாதங்களில் முடிவடையும்.அடுத்த கட்டமாக, சிறை வளாகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான இடம் தேர்வு செய்து, கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட வேண்டும். அதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். இவ்வாறு, பனீந்திரரெட்டி தெரிவித்தார்.


எங்கேயும், எப்போதும் மொபைல்போ

புதுடில்லி : இந்தியாவில் மொபைல்போன் சேவை தொடங்கி பதினைந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அப்போதைய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சுக்ராமும், மறைந்த கம்யூ. (மா) கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசும் முதன்முதலாக மொபைல்போனில் பேசி இந்த சேவையை இந்தநாளில் துவக்கிவைத்தனர். ஒவ்வொரு மனிதனுக்கும் அவசிய தேவையான சொந்த வீடு, ஆரோக்கியமான உணவு, உடை இருக்கிறதோ இல்லையோ மொபைல்போன் அவசியமாக இருக்கிறது. அந்த அளவிற்கு தகவல் தொடர்புத்துறையில் புதிய புரட்சியை மொபைல்போன் ஏற்படுத்திவிட்டது. க்ஷ



15 ஆண்டுகளில் 63.5 சதவீத மக்கள் மொபைல்போன்களை சொந்தமாக வைத்துள்ளது வியக்கத்தக்க செய்தியாகும். டி.ஆர்.ஏ.ஐ. என்றழைக்கப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தியாவில் 635.51 மில்லியன் மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மாதாமாதம் 10 மில்லியன் புதிய மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் அல்லது சிம்கார்ட் வாங்குபவர்கள் அதிகரித்து உள்ளனர். சிம்கார்ட் நிறுவனங்களும் புதிய புதிய வசதிகளையும், விலை குறைப்பு, இலவசசேவை என கவர்ச்சிகரமான விளம்பரங்களை புகுத்தி வாடிக்கையாளர்களின் எல்லையை விரிவுபடுத்துகின்றன.



பேசுவதற்கு போன் என்ற நிலைமாறி, விளையாட்டு, இணையதள பயன்பாடு என்ற அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பேசுபவரின் முகத்தை பார்த்து பேசும் வசதி உள்ள 3ஜி இணைப்பு தான் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிக அளவில் 3ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவையை பெற 74 மில்லியன் உபயோகிப்பாளர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



எங்கிருந்தும் எப்போதும் தகவல்களை தெரிவிக்கும் வகையில் இருப்பதால், மொபைல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும் மக்களுக்கு அது ஒரு கூடுதல் சுமையாக இருப்பதில்லை. மொபைல்போன் சுமையே சுகமாக இருக்கிறது என்று கூறும் அளவுக்கு அது நம் வாழ்க்கையில் ஒன்றி விட்டது என்றால் அது மிகையாகாது.

பெண்களுக்கு முன்னுதாரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

புதுக்கோட்டை, ஜூலை 30:  இன்றைய பெண்களுக்கு முன்னுதாரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் என்று புகழாரம் சூட்டினார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.


  புதுக்கோட்டையில் உள்ள திலகவதியார் ஆதீன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 125-வது பிறந்த நாள் விழாவில், அவருடைய முழு உருவச் சிலையைத் திறந்துவைத்து, அவருடைய வாழ்க்கை வரலாறான "மாதர் குல மாணிக்கம்' நூலை வெளியிட்டு, அவர் பேசியது:

  ""பெண்கள் படிப்பது பாவம் எனக் கருதப்பட்ட காலச்சூழலில் தனது மகள் முத்துலெட்சுமியின் அறிவாற்றலை வெளிக்கொணரும் விதமாக தனது வீட்டுத் திண்ணையில் அவருக்கு கல்வி கற்பித்தார் அவருடைய தந்தை. புதுக்கோட்டையில் மெட்ரிக் தேர்வு எழுதியவர்களில் அப்போது தேர்ச்சிப் பெற்றவர்கள் 10 பேர்தான். அவர்களில் ஒருவர் முத்துலட்சுமி.

  அவருடைய வெற்றியை அந்நாளில் புதுக்கோட்டை நகரமே கொண்டாடியது. இதைத் தொடர்ந்து மன்னர் கல்லூரியில் சிறப்பு அனுமதி பெற்று முத்துலட்சுமி படிக்கச் சென்றார். தனக்கு நேர்ந்த பல சோதனைகளையும் தன் மீது வீசப்பட்ட விமர்சனங்களையும் பொருள்படுத்தாமல் தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார்.  அப்போது, முத்துலட்சுமியின் தாய் நோய்வாய்ப்பட்டு போதிய மருத்துவ வசதியின்றி வாடிக்கொண்டிருந்தார். இந்தச் சூழல்தான் முத்துலட்சுமியிடத்தில் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

  இதைத் தொடர்ந்து சென்னையில் மருத்துவப் பட்டம் பெற்று "இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்' என்ற பெருமையைப் பெற்றார். அதன் பின் எழும்பூர் மருத்துவமனை, புதுக்கோட்டை மருத்துவமனைகளில் பணியாற்றினார். தொடர்ந்து, சென்னையில் ஒரு  மருத்துவமனையையும்  ஆதரவற்ற பெண்களுக்காக "அவ்வை இல்ல'த்தையும் நிறுவினார்.

  மருத்துவச் சேவையோடு மட்டும் அவர் திருப்தியடைந்துவிடவில்லை. பெண்கள் முன்னேற்றத்தில் தனது கவனத்தைச் செலுத்தியதால், மருத்துவக் கல்லூரியில் மகளிருக்கென்று தனி ஒதுக்கீடு கிடைத்தது. மேலும், தேவதாசி முறையை ஒழித்த பெருமையும் அவரையே சேரும்.

  தொடர்ந்து சட்டப்பேரவையிலும் சட்ட மேலவையிலும் உறுப்பினரானார். 1930-ல் காந்தி கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியைத் துறந்தார். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் போராடினார். இத்தனைப் பெருமைக்குரிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைவிட பெண்கள் உதாரணமாகக் கொள்ள சிறந்தவர் எவரும் இல்லை என்றார் ஸ்டாலின்

ரோவர் வேளாண் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூரில் உள்ள ரோவர் வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


   தொடக்க விழாவுக்கு, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி. ஜான் அசோக், வேளாண்  கல்லூரி டீன் ஜி. ஜேம்ஸ் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் பி. சுப்பையா பேசியது:

    அறிமுக விழா என்பது, நமக்குள் உள்ள நட்பையும், குடும்ப உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரி வாழ்க்கையை பயன்படுத்தி சாதனையாளராக வர வேண்டும் என்றார் அவர்.

   இதில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் டி.ராஜு மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, பேராசிரியர் சவிதா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் வி.எம். சீனிவாசன் நன்றி கூறினார்.

ரோவர் கல்லூரியில் பேரவைத் தொடக்கம்

பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பில், பேரவைத் தொடக்க விழா அண்மையில்  நடைபெற்றது.


    விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பி.எஸ். ஜோசப் தலைமை வகித்தார். கல்லூரி  இயக்குநர் இரா. சுவநாமிநாதன், துணை முதல்வர் டி. லீமா பீட்டர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

     பேரவையைத் தொடக்கிவைத்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி எம்.சி.ஏ. துறை இயக்குநர் ஜார்ஜ் அமரத்தினம், கணினித் துறையில் தற்போது ஏற்பட்டு வரும்  தொழில்நுட்ப மாற்றங்கள், வேலைவாய்ப்புகள், படித்து முடித்தவுடன் வேலையில் சேர்வதற்கான தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதலின் அவசியம் குறித்து பேசினார்.

     இந்நிகழ்ச்சியில், கணினித் துறைத் தலைவர் ஜி. ரவி, அலுவலக மேலாளர்  ஆர். ஆனந்தன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவி ஜாஸ்பர்கிங் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

     முன்னதாக, மாணவி கோகிலா வரவேற்றார். மாணவர் கனி நன்றி கூறினார்.

தன்னம்பிக்கையே லட்சியங்களின் அஸ்திவாரம்

மஞ்சூர்,ஜூலை 30: மாணவர்களின் தன்னம்பிக்கையே அவர்களின் உயர்ந்த லட்சியங்களுக்கு அடித்தளம் அமைத்துத் தரும் என்று மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி முப்பெரும் விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) லட்சுமணன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

   கடந்த 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் களுக்கு பரிசளிப்பு விழா, முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்க விழா, முன்னாள் மாணவர்களை கெüரவிக்கும் விழா என முப்பெரும் விழா மஞ்சூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவிற்கு தலைமையாசிரியர் தேவன் தலைமை வகித்தார். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் கே.என்.மூர்த்தி, ராமநாதபுர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் போஸ், முன்னாள் தலைமையாசிரியர் சங்கர், வழக்கறிஞர் கே.விஜயன், உதவிப் பொறியாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் (பொ) எல். இலட்சுமணன் மஞ்சூர் பள்ளியில் பயின்று தற்போது மருத்துவம், நீதித்துறை உள்பட பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்களை பாராட்டி பேசியது:

 இப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் இன்று பலவேறு துறைகளில் உயர் பதவிகளில் இருப்பது பாராட்டத்தக்கது. அதற்கு அவர்களின் தன்னம்பிக்கை, உழைப்பு, விடா முயற்சி போன்றவையே முக்கியக் காரணங்களாகும். எதையும் சாதிக்கும் ஆற்றலும், அசாதாரணத் துணிவும் இந்த மாணவப் பருவத்தில்தான் உருவாகும். அதை நல்வழியில் பயன்படுத்தும் விதமாக தன்னம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் செயல்பட்டால் உயர்ந்த லட்சியங்களை அடைய முடியும்.

  எனவே மாணவர்கள் தங்கள் லட்சியப் பயணங்களுக்கு இன்றே அடித்தளங்களை அமைத்து செயல்பட உறுதி கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் கடந்த கல்வி ஆண்டு பொதுத் தேர்வில் 10, 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தரமான கல்வி அளிக்க திறமையான ஆசிரியர்கள் தேவை

திருச்செங்கோடு, ஜூலை 30: தரமான தொழில் நுட்பக் கல்வியை அளிக்க திறமையான ஆசிரியர்கள தேவை என்று கோவை அண்ணா பல்கலை. துணைவேந்தர்  கருணாகரன் கூறினார்.


  திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்த பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத் திட்டம் எதுவும் இந்த வருடம் அறிமுகப்படுத்தவில்லை.  தேர்வுகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சுமார் 500 பொறியில் கல்லூரிகள் உள்ளன. கோவை அண்ணா பலகலைக்கழகத்தின் கீழ்  மட்டும்  165 கல்லூரிகள் இருக்கின்றன.

தமிழகத்தின் மக்கள்தொகை அடிப்படையில் தேவையை மீறி  பொறியியல் கல்லூரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு காரணம் தமிழக மாணவர்கள்  மட்டுமின்றி, பிற மாநிலங்களைச்  சேர்ந்தவர்களும்,  வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து படிப்பதே காரணம்.

  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொறியியல் துறையே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வளவு கல்லூரிகள் தமிழகத்தல் இருப்பதால் திறமையான, தகுதியான ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.  

தகுதியான ஆசிரியர்களை  உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் முயற்சிகள்  மேற்கொள்ளும். லட்சக்கணக்கான பொறியாளர்கள் ஆண்டு தோறும் வெளிவருவதால்  அவர்களுக்கு நல்லவேலை கிடைப்பது மிக முக்கியம். அதற்காக அண்ணா பல்கலை.  பல்வேறு தொழில் துறையினரை வரவழைத்து வளாகத் தேர்வுகள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 தமிழ் வழியில் படிக்க ஆர்வம் கூடி வருகிறது. அதற்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன என்றார் 

நாமக்கல்லில் தேசிய புத்தகத் திருவிழா துவக்கம்

நாமக்கல், ஜூலை 30: நாமக்கல்லில் 26-வது தேசிய புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கியது.


÷மத்திய அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை இணைந்து நாமக்கல் குளக்கரைத் திடலில் இந்த கண்காட்சி திருவிழாவை நடத்துகின்றன. போரற்ற உலகையும், பேதங்களற்ற சமுதாயத்தையும், அறிவியல் கண்ணோட்டத்தையும் உருவாக்க உதவும் நூல்களை மக்களிடம் பரப்பும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

÷இக் கண்காட்சியில் 10 ஆயிரம் தலைப்புகளில் 20 லட்சம் மதிப்புள்ள தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

குழந்தை நூல்கள், அறிவியல் நூல்கள், மருத்துவம், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், இலக்கியம், திறனாய்வு நூல்கள், வரலாறு, கதைகள், கட்டுரைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, சட்ட நூல்கள், வேளாண்மை என பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. உலகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், விடுதலைப் போராட்டம், பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரது படைப்புகளும், வாழ்க்கை வரலாறும் இடம்பெற்றுள்ள புத்தகங்களும் உள்ளன.

÷இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் கண்காட்சியை திறந்து வைத்தார். நியு செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் அ. கணேசன், மேலாளர் எஸ். குணசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களுக்கு 10 சத தள்ளுபடியும், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. 2 மாதங்ளுக்கு இக் கண்காட்சி திருவிழா நடைபெறும்.

மாணவர் மன்ற துவக்க விழா

ராசிபுரம்,ஜூலை 30: ராசிபுரம் பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில்  மின்னணுவியல் மற்றும் தொடர்பியில் துறை சார்பில் 2010-11ம் ஆண்டிற்கான மாணவர் மன்ற துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் நிர்வாகம். திரு. கே.கே. இராமசாமி தலைமை வகித்தார். பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் வி.முரளிபாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

 மாணவர் டி.எல்.கெüதம வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியின் துறைத் தலைவர் ஆர்.எஸ்.டி. வகிதாபானு பங்கேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்

தார்.

காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி

காரைக்கால், ஜூலை 30: வீட்டில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு, வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.

   காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து நேரடி செயல் விளக்கத்தை வெள்ளிக்கிழமை அளித்தனர்.

    வீட்டில் காய்கறித் தோட்டம் அமைக்க இடம் தேர்வு செய்தல், நாளொன்றுக்கு தேவைப்படும் காய்கறிகளின் அளவுக்கேற்ப செடிகள் அமைப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்தல், நடவு செய்தல், காய்கறி செடிகளின் வாழ்நாள், காய்கறிகளை அறுவடை செய்தல் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர்.

    மேலும், தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, பீன்ஸ், வெண்டைக்காய், கத்தரி, மிளகாய், கொத்தவரை, பூசணி, கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறிகளின் வளர்ப்புப் பருவங்கள் குறித்தும், காய்கறித் தோட்டத்தின் மூலம் பெறும் பொருளாதார ஆதாயங்கள், தோட்டம் அமைப்புடன் கால்நடை வளர்ப்பு குறித்து விளக்கினர்.

  ஓஎன்ஜிசி பள்ளி முதல்வர் பி. சிவக்குமார், ஆசிரியை நந்தினி ஆனந்தகுமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

மதுரை மருத்துவக் கல்லூரியில் செல்போன் பேசத் தடை

மதுரை, ஜூலை 30:    மதுரை மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் செல்போன் பேசத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், கல்லூரி வளாகத்தினுள் 6 இடங்களில் ஜாமர் சாதனம் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்லூரி டீன் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.


    அவர் செய்தியாளர்களிடம் கூறியது:   மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் வரும் 2-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளன. அப்போது, முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு வரவேற்பு அளிக்கப்படும்.    கல்லூரியின் மனநலத் துறை பேராசிரியர், மாணவ, மாணவியர் மூலம் கல்லூரிக்கு வரும் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு மனநல மேம்பாட்டு சிறப்பு கவுன்சில் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  ராகிங் தடுப்புக் குழு:   முதலாமாண்டு மாணவ, மாணவியரை கேலி, கிண்டல் செய்வதைத் தடுக்க, ராகிங் தடுப்பு சிறப்புக் குழுக்களை நியமித்துள்ளோம். இருந்தபோதிலும், சாதாரணமாக பிறரின் செயல்களை மனரீதியாக எதிர்கொள்ளும் வகையில், முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு உளவியல் பயிற்சி முக்கியமாகும். அதன்படியே, கவுன்சிலிங் நடைபெற உள்ளது.   இதன் அடுத்த கட்டமாக 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு மாணவ, மாணவியர் வரையில் ராகிங் கூடாது என வலியுறுத்தும் கவுன்சிலிங் நடத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற உளவியல் ரீதியான அணுகுமுறையால், எதிர்காலத்தில் ராகிங் என்பதே மாணவர்கள் மத்தியில் இருக்கக்கூடாது என்பதே எங்களது நோக்கமாகும்.

  செல்போன் பேசுவதன் மூலம் மாணவ, மாணவியரின் கவனம் கல்வி பெறுவதிலிருந்து திசை திரும்பும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, கல்லூரிக்குள் வகுப்பறை, தேர்வறை மட்டுமின்றி நூலகம் போன்ற இடங்களிலும் செல்போன் பேச தடைவிதிக்கப்பட உள்ளது.

  அத்துடன், கல்லூரி வளாகத்தில் 6 இடங்களில் செல்போன்களைச் செயலிழக்கச் செய்யும் ஜாமர் சாதனங்களையும் பொருத்த உள்ளோம். கல்லூரியில் உள்ள அனைத்து பாடத் துறைகளையும் கம்ப்யூட்டர்மயமாக்கவும், ஆராய்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தவும் சிறப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்

மாணவர் அனைவரும் சத்தியசோதனை புத்தகத்தைப் படிப்பது அவசியம்

மதுரை, ஜூலை 30: மாணவ, மாணவியர் அனைவரும் சத்தியசோதனை புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும் என அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் கே.குழந்தைவேல் வலியுறுத்தினார்.


   மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமத்தில் அதன் நிறுவனர் கோ.வேங்கடாசலபதியின் 101-வது பிறந்த நாள் விழா, ஆசிரமத்தின் 70-வது ஆண்டு விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

   இதில் அவர் பேசியது:

   கிராம மக்களின் முன்னேற்றத்தின் சேவைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டவர்தான் கோ.வேங்கடாசலபதி. 1930 கிராமங்கள் முன்னேற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கிராம சேவை சங்கம் என்பதை தொடங்கினார். அதன் மூலமாக முதியோர் கல்வி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

   எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற லட்சியம் இருப்பதுடன் அதனை அடைய கடினமாக உழைப்பதன் மூலமே குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும்.

அதேபோல் மாணவர்கள் அனைவரும் கடினமாக உழைத்து குறிப்பிட்ட இலக்கை அடைய முயற்சி செய்தல் வேண்டும். அதற்கு மாணவ, மாணவியராகிய நீங்கள் அனைவரும் காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

   மேலும், அவர்களை ஊக்கமளிக்கும் வகையில் கேள்விகள் கேட்டும் மற்றும் கட்டுரைகள் எழுதவும் தூண்டுதல் வேண்டும். அதில் நிர்வாகத்தினர் தேர்வு வைத்து பரிசுகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றார்.

   இந்த நிகழ்ச்சியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார். விழாவுக்கு ஆசிரமத் தலைவர் ஆர்.வெங்கடசாமி தலைமை வகித்தார். செயலர் டாக்டர் ரகுபதி முன்னிலை வகித்தார். காந்திகிராமம் பல்கலைக்கழக மேலாண்மை குழு உறுப்பினர் கெüசல்யா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

"பொறியியல் துறை மாணவர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்'

ஒசூர், ஜூலை 29: பொறியியல் துறை மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என பெங்களூர் சர்வதேச வர்த்தக மேலாண்மை கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சி.மனோகரன் கூறினார்.


 ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்திய தொழில்நுட்ப சங்கம் சார்பில் இரு நாள் கருத்தரங்கை வியாழக்கிழமை தொடங்கி வைத்து, மனோகரன் பேசியது:

 2030-ல் உலகத்தை வழிநடத்திச் செல்லும் நாடாக இந்தியா விளங்கும். இதற்கு முக்கியக் காரணம் இந்திய இளைஞர்களே. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இங்கு  அதிகமான இளைஞர்கள் உள்ளனர். இதுவே இந்தியாவின் மூலதனமாகத் திகழும்.

 1995-ல் தமிழகத்தின் வரி வருவாய் ரூ.3,300 கோடியாக இருந்தது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ரூ.33 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாகும்.

 மைசூரைச் சேர்ந்த நாராயணமூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கி, பல ஆயிரம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.

 இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ பிரேம்ஜி, ரத்தன் டாடா, அம்பானி, மிட்டல் போன்றவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சிறந்து விளங்கும் தொழிலதிபர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய தேசிய சிந்தனை மற்றும் ஆற்றல் மிக்க நிர்வாகத் திறமையே காரணம்.

 மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு, கிடைக்கும் வாய்ப்பை செம்மையாக பயன்படுத்திப் புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க வேண்டும். புதுமையான எண்ணங்களை, மக்களின் தேவைகளாக மாற்றி புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து தொழில்துறையில் சாதனைகளைப் படைக்க வேண்டும்.  

 மாணவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இணைய தளத்தில் உள்ளன. இதனைப் பயன்படுத்தி வாழ்வில் சிறந்த பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்தி, சிறந்த தொழில் முனைவர்களாக உருவாக வேண்டும் என்றார்.

 விழாவில் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை வகித்தார். பேராசிரியர் அறிவுடைநம்பி, மாணவர் தலைவர் அசோக்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நூலகப் போட்டியில் போட்டியில் குளித்தலை மாணவர்சிறப்பிடம்

குளித்தலை, ஜூலை 31: "நமது உலகம் நூலகம்' போட்டியில் குளித்தலை மாணவர் மெ. ஷேக்ரஹ்மான் 3-வது பரிசைப் பெற்றார்.

  தமிழ்நாடு பொது நூலக இயக்ககம் சார்பில் நமது உலகம் நூலகம் என்ற தலைப்பில் மாநில அளவிலான போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

  இந்தப் போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாட்டிற்கும், 2 ஆம் இடம் பெறுவோர் இந்திய அளவிலும், 3 ஆம் இடம் பெறுவோர் தமிழக அளவிலும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  கரூர் மாவட்ட அளவிலான தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்ற குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் மெ. ஷேக்ரஹ்மான் கரூர் மாவட்டம் சார்பில் பேச்சுப் போட்டியில் 3-வது இடத்தைப் பெற்றார். இதன் மூலம், தமிழகச் சுற்றுலாவிற்கும் இவர் சென்று வந்தார்.

  இந்த மாணவனுக்கான பாராட்டு விழா குளித்தலை கிளை நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி தலைமை வகித்து மாணவருக்குச் சான்றிதழ், நினைவுப்பரிசுகளை வழங்கிப் பேசினார்.

  கிளை நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கருப்பையா வாழ்த்தினார். மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவகுமார் நிகழ்ச்சியை தொகுத்தார்.

  நிகழ்ச்சியில் குளித்தலை கோட்டாட்சியர் எஸ். பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் எம். ஜெயமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் எம். லீலாகுமார், தமிழாசிரியர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மாவட்ட நூலக அலுவலர் ஜெ. கார்த்திகேயன் வரவேற்றார். கிளை நூலகர் அ. தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

கரூர் புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்பக் கருத்தரங்கு

கரூர், ஜூலை 29: கரூர் புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்பக் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.


   செட்டிநாடு சிமென்ட் ஆலை நிறுவனத் தலைமை இயக்குநரும், கல்லூரியின் உதவித் தலைவருமான எம்.ஏ.எம்.ஆர். முத்தையா தலைமை வகித்தார்.

  அமெரிக்க ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமஸ் எச். லீ கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.  வடக்கு டெக்ஸôஸ் பல்கலைக்கழக எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங் பிரிவுப் பேராசிரியர் சுமேஷ்நமுதுரை, லாஸ்ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக கணினி அறிவியல் பிரிவுத் தலைவர் எஸ். சீத்தாராமன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேப்பிங்சூ, வடக்கு டெக்ஸôஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பில்.பி. பக்ல்ஸ், சியாஹூய்யுவான், ஆர்கன் ஸ்டேட் பல்கலைக்கழக பெல்லாபோஸ் உள்ளிட்டோர் பேசினர்.

  இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.பி. கபிலன் தெரிவித்தது:

  இந்தக் கருத்தரங்கில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த சுமார் 1000 ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து 250 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

  இவற்றை அளித்தோர் நேரடியாகவும், விடியோ கான்பரன்ஸிங் மூலமாகவும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்களின் ஆற்றலை மேம்படுத்த வாய்ப்பாக அமையும். இந்தக் கருத்தரங்கு ஜூலை 30,31 ஆகிய நாள்களிலும் நடைபெறுகிறது என்றார் அவர்.

  கல்லூரி முதல்வர் ஏ.பி. கபிலன் வரவேற்றார். செட்டிநாடு சிமென்ட் ஆலையின் செயலர் ஏ. சுப்பிரமணியன் நன்றி கூறினார்

துளிர் வினாடி வினா போட்டிகள்

காஞ்சிபுரம், ஜூலை 30:  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துளிர் வினாடி-வினா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துளிர் வினாடி வினா போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு காஞ்சிபுரம் கிளை சார்பில் ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் துளிர் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. இவ் விழாவுக்கு இயக்கத்தின் துணைத் தலைவர் ஆர்.ஜெயந்தி தலைமை தாங்கினார். துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் ஜி.வெங்கடேசன் வரவேற்றார்.

இப் போட்டிகளில் 29-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை தலைவர் பரமசிவம், ஆசிரியர்கள் சரவணன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கல்லூரியில் விமான பொறியியல் பயிற்சி தொடக்க விழா

செங்கல்பட்டு, ஜூலை 30: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விமான பொறியியல் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.


இப்பயிற்சி இக்கல்லூரியில் முதல்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, இக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

தென்னிந்தியப் பிரிவு ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் சொசைட்டித் தலைவர் ஆசிட் கே.பர்மா, சாயின்டியா ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் சொசைட்டி அமைப்பை கல்லூரியில் குத்துவிளக்கிகேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

விமான பொறியியல் படிப்பினால் ஏற்படக்கூடிய அனுபவம், பயன், தன்னார்வத் திறமையை வளர்த்துக் கொள்ளும் திறன் குறித்து மாணவர்களுக்கு கருத்துகள் வழங்கப்பட்டன.  

கல்லூரி முதல்வர் பொன்ராஜ், நிறுவன பிராந்திய பொது மேலாளர் ராஜேஷ்குமார், சாயின்டியா விற்பனை மேலாளர் சேஷாத்ரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

விமான பொறியியல் பிரிவு ஹெச்ஓடி சரவணன் வரவேற்று பேசினார்.

இளைய தலைமுறையினருக்கு நாட்டுப்பற்று வேண்டும்

ஈரோடு, ஜூலை 30: நாட்டுப்பற்று மிக்கவர்களாக இளைய தலைமுறையினர் திகழ வேண்டும் என்று தியாகி ஐ.மாயாண்டிபாரதி கூறினார்.


    மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை துவங்கியது. ஈரோடு மாநகராட்சி மேயர் க.குமார்முருகேஷ் தலைமை வகித்தார். துணை மேயர் பா.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் அறிமுக உரையாற்றினார். ஈரோடு கட்டுனர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பி.பெரியசாமி, யுஆர்சி பழனியம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் சி.தேவராஜன், தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கச் செயலர் இரா.லெட்சுமணன் வாழ்த்துரை வழங்கினர்.

   புத்தகத் திருவிழா அரங்கைத் திறந்து வைத்து 93 வயதான தியாகி

ஐ.மாயாண்டிபாரதி பேசியது:

 சுதந்திரத்திற்கு முன்னர் பல துறைகளிலும் நாம் பின்தங்கியிருந்தோம். வெள்ளையரை எதிர்த்து கடுமையாகப் போராடினோம். "படுகளத்தில் பாரததேவி’ என்ற நூலை எழுதியதற்காக நான் கைது செய்யப்பட்டேன். சுமார் 14 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறேன். அதன்பலனை இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

 விஞ்ஞான வளர்ச்சி, பெண் விடுதலை, கல்வி மேம்பாடு என அனைத்துமே  கிடைத்தது சுதந்திரம் பெற்றதால்தான். சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியது சுதந்திர இந்தியாதான். முன்பெல்லாம் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். இப்போது பேரக் குழந்தையை பள்ளிக்கு தூக்கிச் செல்லும் தாத்தாக்களைப் பார்க்க முடிகிறது.

சுதந்திரம்தான் நமது பெரிய சொத்து.

 பாழாய்க் கிடந்த பாரத நாட்டைப் பண்படுத்தியது சுதந்திரம்தான். அத்தகு சுதந்திரத்தைப் பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை. எனவே இளைஞர்கள் நாட்டுப்பற்று மிகுந்தவர்களாகத் திகழ வேண்டும் என்றார்.

   காந்தி ஆஸ்ரமத் தலைவர் தியாகி கி.லட்சுமிகாந்தன்பாரதி பேசியது:

  காந்தியின் கொள்கைகளைப் பேசும் நாம், அதை எந்த அளவுக்குக்  கடைப்பிடிக்கிறோம் என்பது கேள்விக்குறியே. கள்ளுக்கடைகளை மூடுதல், உள்ளாட்சிகளுக்கு முழு அதிகாரங்கள் வழங்குதல் ஆகிய காந்தியின் கனவுகள் இப்போதும் கனவாகத்தானே உள்ளன.

 கோடீஸ்வரர்கள் மோதிக் கொள்ளும் போட்டியாகத்தான் தேர்தல்கள் உள்ளன. சாதாரண மக்களுக்கும், தேர்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.

  கதருக்குக் கொடுத்து வரும் தள்ளுபடி மானியத்தைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே கதரின் விலை அதிகரித்து, கதர்  நிறுவனங்கள் மூடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தள்ளுபடி மானியமும்  குறைக்கப்பட்டு விட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

 எனவே காந்தியக் கொள்கைகளைக் காக்க பல்வேறு அமைப்புகளும் பாடுபட வேண்டும். நான் பல பதவிகள் வகித்தாலும், காந்தி ஆஸ்ரமத் தலைவராக இப்போது பொறுப்பு வகிப்பதை மட்டுமே பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

  பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ-மாணவியருக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக தனி அலுவலர் ஆவுடையப்பன் பரிசுகளை வழங்கிப் பேசினார். முன்னதாக தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் ஆக. 10-ம் தேதி வரை புத்தகத் திருவிழா  நடைபெறுகிறது

இயற்கை பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

தருமபுரி, ஜூலை 30: தருமபுரி அரசு அதியமான் மேல்நிலைப்பள்ளியில் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ரெட்கிராஸ் அலுவலர்களுக்கு இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.


சங்கச் செயலர் கந்தசாமி தலைமை தாங்கினார். இயற்கை பேரிடர் காலங்களில் சேவையாற்றுவது குறித்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி என தலைமை ஆசிரியர்களுக்கும், ரெட்கிராஸ் அலுவலர்களுக்கும் விளக்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் அரங்கநாதன், ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன், பாலக்கோடு மருத்துவர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

ஐ.டி.ஐ. தேர்வு: வினாத்தாளை மாநில மொழிகளில் தர வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 30: ஐ.டி.ஐ. தொழிற்கல்வி பொதுத் தேர்வு வினாத்தாள்களை மாநில மொழியில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் ஐ.டி.ஐ. மற்றும் தொழிற்பள்ளிகள் கூட்டமைப்புத் தலைவர் கே. சிவக்குமார் வலியுறுத்தினார்.

  இது குறித்து அவர் வியாழக்கிழமை கூறியது:

  தமிழ் வழியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வரும் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கில மொழியில் அமைந்த வினாத்தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வினாத்தாள்களை மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொண்டு விடையளிக்கும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் வழங்க வேண்டும்.

  ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் ஐ.டி.ஐ. இரண்டாமாண்டு கருத்தியல் தேர்வு வினாத்தாள்கள் வெளியானதால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள 662 தனியார் ஐடிஐ, 60 அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தேர்வுக்கு இரண்டு வினாத்தாள்கள் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் வினாத்தாள் வெளியாகிவிட்டால், மாற்று வினாத்தாள்களை பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்றார் அவர்.

அண்ணாமலைப் பல்கலையில் பன்னாட்டு கருத்தரங்கு

சிதம்பரம், ஜூலை 30: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை மற்றும் தொலைதூரக்கல்வி மைய மேலாண்மைத்துறை இணைந்து நிலையான வளர்ச்சிக்கான மேலாண்மை நடைமுறைகள் என்ற பன்னாட்டு கருத்தரங்கத்தை நடத்தின.

பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் கருத்தரங்கினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். புதுச்சேரி பிரெஞ்ச் மைய இயக்குநர் பேராசிரியர் மாரிமுத்து வேலாயுதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். துறைத் தலைவர் ந.பஞ்சநதம் தலைமை வகித்தார். தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், இலங்கை ஈஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கனகசிங்கம் வாழ்த்துரையாற்றினர்.

பல்கலைக்கழக யோகா மைய இயக்குநர் டாக்டர் விஸ்வநாதன், பன்னாட்டு மேலாண்மை பயிற்சியாளர் விஷ்ணுகுமார் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். பேராசிரியர் பிரகதீஸ்வரன் வரவேற்றார். விரிவுரையாளர் சுதா நன்றி கூறினார். கருத்தரங்கில் இலங்கை, இந்தோனேஷியா, ஈரான் நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் உள்ளிட்ட 500 பேர் பங்கேற்றனர்

"காமராஜரின் தியாகங்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கும்'

உடுமலை, ஜூலை 30: காமராஜரின் தியாகங்கள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என காங்கயம் எம்எல்ஏ விடியல் சேகர் கூறினார்.


÷காமராஜர் சிலை பராமரிப்புக் குழு சார்பில் காமராஜரின் பிறந்த நாள் விழா உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காமராஜர் சிலை பராமரிப்புக் குழு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உடுமலை வெ.வித்யாசாகர் தலைமை வகித்துப் பேசினார். நிர்வாகிகள் கே.என்.வெங்கடேசன், டி.ரத்தினவேல், கே.சுந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

÷விழாவில் கலந்து கொண்டு காங்கயம் எம்எல்ஏ விடியல் சேகர் பேசியது:

÷காமராஜரின் தியாகம் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். அவரின் தியாகங் களை வருங்கால சந்ததிகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் சொல்லித் தர வேண்டு ம். தனக்கென எந்த சொத்தையும் சேர்த்துக் கொள்ளாதவர், தமிழகத்தில் மூவாயிரம் பள்ளிகளுக்கு மேல் உருவாக்கியவர், மதிய உணவு, சீருடைத் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர். குறிப்பாக கல்வியில் புரட்சி செய்தவர் காமராஜர். இந்தியாவில் பிரதமர்களை உருவாக்கிய அவருக்கு எந்தத் தலைவரும் ஈடு இணை இல்லை என்றார்.

÷சிறப்பு விருந்தினராக பங்கேற்று சோ.சத்தியசீலன் பேசியது: காமராஜரின் வாழ்க்கையை பின்பற்றினாலே ஒவ்வொரு மனிதனும் சிகரத்தை அடையலாம். சமுதாயத்தில் மக்களுக்காக என்ன தேவை என்பதை வாழ்நாள் முழுவதும் சிந்தித்த மாமனிதர். காமராஜரின் வரலாற்றை அச்சிட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவில் காமராஜரைப் போல் ஒரு மனிதர் இன்னமும் பிறக்கவில்லை என்றார்.

÷தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் யுகேபி முத்துக்குமாரசாமி மற்றும் உடு மலை வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், சார்பு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சங்கர் பாலிடெக்னிக் நண்பர்கள் தின விழா

சென்னை, ஜூலை 30: திருநெல்வேலி சங்கர் பாலிடெக்னிக் நண்பர்கள் சங்கத்தின் நண்பர்கள் தின சிறப்புக் கூடுகை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறவுள்ளது.


 உலகம் முழுவதும், ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமமாகக் கொண்டாடப்படுகிறது.

 இச்சிறப்பு நாளில் திருநெல்வேலி சங்கர் பாலிடெக்னிக் நண்பர்கள் சங்கத்தின் கூட்டமும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

 இவ்வாண்டும்  ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) தி.நகர், செவாலியே சிவாஜி சாலையில் உள்ள, ஸ்ரீ மகாலட்சுமி திருமண மண்டத்தில் காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு:

sipfriends.org​