தாய்ப்பால்: பிஞ்சுகளின் டாக்டர் > ஆகஸ்ட் 1 முதல் தாய்ப்பால் வாரம்

சென்னை,ஜூலை 28: குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நோயின்றி குழந்தை நன்றாக வாழும் என ராயப்பேட்டை அரசுமருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவர் டாக்டர் டி.குணசிங் தெரிவித்தார்.

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி, விழிப்புணர்வு முகாம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து குழந்தைகள் டாக்டர் டி.குணசிங் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கே.தியாகராஜன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தாய்ப்பாலின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள் ரத்த சோகை, வைட்டமின்-டி குறைபாடு போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஏழு நாள்களுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிகள் குறித்த விவரம்:

ஆகஸ்ட் 1- மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம். ஆகஸ்ட் 2- செவிலியர்களுக்கு தாய்ப்பால் மேலாண்மை குறித்த கருத்தரங்கம்.

ஆகஸ்ட் 3- ராயப்பேட்டை ஆதர்ஷ் வித்யாலயத்தில் தாய்ப்பாலூட்டுதல் குறித்த விழிப்புணர்வு முகாம், ஆகஸ்ட் 4- மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாய்மார்களுடனான கூட்டம்.

ஆகஸ்ட் 5-அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம், ஆகஸ்ட் 6- தாய்ப்பால் குறித்து இளங்கலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி, ஆகஸ்ட் 7- விவாதம் மற்றும் தாய்ப்பால் வாரம் நிறைவு விழா நடைபெறும் என்றார் குணசிங்

 

0 comments: