மூன்று நாள் பயிற்சி வகுப்பில் பல்வேறு நாடுகளில் இருந்து 250 மருத்துவர்கள் பங்கேற்பு :

மணப்பாக்கம் : இந்தோ - ஜெர்மன் எலும்பியல் அறக்கட்டளை சார்பில் சென்னை, மியாட் மருத்துவமனையில் நேற்று துவங்கிய மூன்று நாள் பயிற்சி வகுப்பில் 250 மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் வகுப்பில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை குறித்து டாக்டர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.இந்தோ - ஜெர்மன் முடநீக்கியல் அறக்கட்டளை, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை, விபத்து அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்து டாக்டர்களுக்கு முதுநிலை படிப்பை மூன்று நாட்கள் நடத்துகிறது.

 இதில், முதல் நாளான நேற்று முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை குறித்தும், இந்த அறுவை சிகிச்சையில் சமீபத்திய தொழில்நுட்பம் குறித்தும் டாக்டர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்தும் 350க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்.இந்த முதுநிலை படிப்பு குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன்தாஸ், இந்தோ - ஜெர்மன் முடநீக்கியல் அறக்கட்டளை செயலர் பிருத்வி மோகன்தாஸ், அறுவை சிகிச்சை நிபுணர் தேவதாஸ் ஆகியோர் கூறியதாவது:கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் எலும்பு முறிவு சிகிச்சை அளிக்க, நோயாளிகள் அசைவுகள் இன்றி தங்கள் மூட்டுக்களை எப்படி நிலையாக வைத்திருக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அதுபோன்ற சிகிச்சை தேவையில்லை. மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, அறுவை சிகிச்சைகள் எளிமையாகவும், வெகு விரைவில் நோயாளிகள் சகஜ நிலைக்கு திரும்பவும் வழிவகுக்கிறது.

இந்தோ - ஜெர்மன் எலும்பியல் அறக்கட்டளை 1992ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆர்தோ பிரிவில் சிறப்பு பயிற்சி பெற இதுவரை 200க்கும் மேற்பட்ட இந்திய டாக்டர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.  இந்த அறக்கட்டளை சார்பில் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு சர்வதேச முதுநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் சமீபத்திய எலும்பியல் தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகிறது. இப்படிப்புகள் மூலம் எலும்பியல் சிகிச்சை தரத்தில் இந்தியா வெகு விரைவாக முன்னேறியுள்ளது.இந்த ஆண்டு, தற்போது துவங்கப்பட்டுள்ள முதுநிலை படிப்பில், முதுகுத்தண்டு நிலைப்படுத்துதல், விபத்துகளின் போது மீட்டாபிசீஸ் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் எலும்பு முறிவுகள், இடுப்பு மற்றும் மூட்டு பகுதிகளில் செயற்கை மூட்டுக்களை வாழ்நாள் முழுவதும் செயல்பட வைப்பது எப்படி என்பது குறித்து மூன்று நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தினமும் காலை வகுப்புகளும், பின்னர் நேரடி அறுவை சிகிச்சைகளும் நடக்கும். இதில், 15க்கும் மேற்பட்ட சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர்களும், 250 இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்களும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வர்.பொதுவாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சிதைவினை ஏற்படுத்தாத மூட்டுக்கள் மிக அவசியம்.மிக குறைவான உராய்தலுடன், சிரமம் இல்லாத நகர்வினை ஏற்படுத்தும் வகையிலும், சிதைவு ஏற்படாத வகையிலும் செயற்கை மூட்டுக்களை உருவாக்க வேண்டும்.புதிதாக உருவாகியுள்ள "டெல்டா செராமிக்' வகை மூட்டுக்கள் மிக அதிக வலுபெற்றது. கப்பல் கட்டுமானம், ஆட்டோமொபைல் தொழிற்துறையில் இவை பயன்படுத்தப்படுகின்றன. டெல்டா செராமிக் பந்துகள், டெல்டா செராமிக் சாக்கெட்டிற்குள் அசையும் போது, எந்த ஒரு சிதைவுகளும் ஏற்படவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவில் முதல் முறையாக டெல்டா செராமிக் மூலம் மியாட் மருத்துவமனை 372 இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளது. குறிப்பாக, 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இது பொருத்தப்பட்டது. இந்த செயற்கை மூட்டு, விளையாட்டு வீரர்கள், இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.பேட்டியின் போது வெளிநாட்டு டாக்டர்கள் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துறை நிபுணர்கள் உடனிருந்தனர்.

 

0 comments: