சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான "சர்வே'யில் வி.ஐ.டி., பல்கலை.8-ம் இடம்

சென்னை : நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி மையங்கள் குறித்து தனியார் நிறுவனம் நடத்திய "சர்வே'யில், வேலூர் வி.ஐ.டி., பல்கலைக் கழகம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது."இந்தியா டுடே' இதழ், ஏ.சி., நீல்சன் ஓ.ஆர்.ஜி., மார்க் நிறுவனமும் இணைந்து நாட்டின் சிறந்த பொறியியல், மருத்துவம், சட்டம், கலை, அறிவியல் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி உள்ளன. இந்த ஆண்டு சிறந்த பொறியியல் கல்வி மையங்களுக்கான தரவரிசையில், வேலூர் வி.ஐ.டி., பல்கலைக் கழகம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சிறந்த பொறியியல் கல்வி மையங்களில் கான்பூர் ஐ.ஐ.டி., முதல் இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் டில்லி எய்ம்ஸ் முதல் இடத்தையும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.சிறந்த சட்டக் கல்லூரிகளில் பெங்களூரு தேசிய சட்ட கல்லூரி முதல் இடத்தை பிடித்துள்ளது."வி.ஐ.டி., பல்கலைக் கழகம், கடந்த 25 ஆண்டுகளாக கல்வித் துறையில் சிறந்து விளங்குவதற்காக பாடுபட்டு வருகிறது.இந்தியா டுடே ரேங்கிங்கில், கடந்த இரண்டு ஆண்டுகளாக டாப் 10 இடத்தில் இருந்து வருகிறது.இந்த ஆண்டு ஆராய்ச்சித் திட்டங்களில் வி.ஐ.டி., பல்கலைக் கழகம் அதிக கவனம் செலுத்தியதன் மூலம், "ரேங்கிங்'கில் வி.ஐ.டி., பல்கலைக் கழகம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது' என அப்பல்கலைக் கழக துணைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.


 

0 comments: