அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் அனைத்து மன்றத் தொடக்க விழா

கருங்கல், ஜூலை 29: கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் அனைத்து மன்றத் தொடக்க விழா கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

 விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமாரோஸ் தலைமை வகித்தார். பேராசிரியை பிருந்தா முன்னிலை வகித்தார்.  முட்டம் கல்வியியல் கல்லூரித் தாளாளர் அருள்தந்தை ஸ்டான்லி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.

 கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்சிகள் நடைபெற்றன. பேராசிரியை சுஜா, பேராசிரியர் சேம்சன் மற்றும் கல்லூரி அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 3-ம் ஆண்டு மாணவி நிஷாராணி நன்றி கூறினார்.

கல்படி குளக் கரைகளில் கழிவுப் பொருள்களை அகற்ற கோரிக்கை

தக்கலை, ஜூலை 29: வெள்ளிமலை கோயில் சந்திப்பிலுள்ள கல்படி குளத்தின் கரையில் உள்ள கழிவுப் பொருள்களை அகற்ற வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இரணியல்-முட்டம் சாலையில் வெள்ளிமலை கோயில் செல்லும் சாலையைச் சுற்றியுள்ளது கல்படிகுளம். காருபாறையில் இருந்து மூங்கில்விளை வரை 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்குளத்தால் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.  மேலும் மூங்கில்விளை, காருபாறை, குசவிளை, கல்படி, குன்னத்துகுளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடிப்படைத் தேவைகளுக்கு இக் குளத்தைப்  பயன்படுத்தி வருகின்றனர்.

  இக் குளத்தில் பாதிப்பகுதி பாசிகள் அகற்றப்படவில்லை. இரவு நேரங்களில் பாலிதீன் பேக், பணிமனைக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுத் துணிகள், உடைந்த கண்ணாடித் துண்டு மூட்டைகள் ஆகியவை மினி லாரிகளில் கொண்டுவரப்பட்டு, குளக்கரையில் கொட்டப்படுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.   தற்போது குளத்தின் கரையோரங்களில் 25-க்கும் மேற்பட்ட உடைந்த கண்ணாடித் துண்டுகள் அடங்கிய கோணிப்பைகள் கிடப்பதாகவும், இதுகுறித்து வெள்ளிமலை பேரூராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும், கழிவுப் பொருள்களை அகற்ற நடவடிக்கை இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  தற்போது பலத்த காற்று வீசுவதால் கரையில் உள்ள கழிவுப் பொருள்களும், கழிவுத் துணிகளும் குளத்தில் விழுந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகின்றன.

 எனவே, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு கழிவுகளை அகற்றுவதுடன், குளக்கரையில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 

0 comments: