மாணவர் அனைவரும் சத்தியசோதனை புத்தகத்தைப் படிப்பது அவசியம்

மதுரை, ஜூலை 30: மாணவ, மாணவியர் அனைவரும் சத்தியசோதனை புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும் என அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் கே.குழந்தைவேல் வலியுறுத்தினார்.


   மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமத்தில் அதன் நிறுவனர் கோ.வேங்கடாசலபதியின் 101-வது பிறந்த நாள் விழா, ஆசிரமத்தின் 70-வது ஆண்டு விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

   இதில் அவர் பேசியது:

   கிராம மக்களின் முன்னேற்றத்தின் சேவைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டவர்தான் கோ.வேங்கடாசலபதி. 1930 கிராமங்கள் முன்னேற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கிராம சேவை சங்கம் என்பதை தொடங்கினார். அதன் மூலமாக முதியோர் கல்வி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

   எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற லட்சியம் இருப்பதுடன் அதனை அடைய கடினமாக உழைப்பதன் மூலமே குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும்.

அதேபோல் மாணவர்கள் அனைவரும் கடினமாக உழைத்து குறிப்பிட்ட இலக்கை அடைய முயற்சி செய்தல் வேண்டும். அதற்கு மாணவ, மாணவியராகிய நீங்கள் அனைவரும் காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

   மேலும், அவர்களை ஊக்கமளிக்கும் வகையில் கேள்விகள் கேட்டும் மற்றும் கட்டுரைகள் எழுதவும் தூண்டுதல் வேண்டும். அதில் நிர்வாகத்தினர் தேர்வு வைத்து பரிசுகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றார்.

   இந்த நிகழ்ச்சியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார். விழாவுக்கு ஆசிரமத் தலைவர் ஆர்.வெங்கடசாமி தலைமை வகித்தார். செயலர் டாக்டர் ரகுபதி முன்னிலை வகித்தார். காந்திகிராமம் பல்கலைக்கழக மேலாண்மை குழு உறுப்பினர் கெüசல்யா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

0 comments: