செம்மொழி மையப் பாடலில் பாதி திருக்குறள் ஏன்? தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் விளக்கம்

திருச்சி: செம்மொழி மையப்பாடலில் திருக்குறளின் முதல் அடியை மட்டும் முதல்வர் கருணாநிதி பயன்படுத்தியதற்கான காரணத்தை, தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் ராசேந்திரன் விளக்கினார்.

திருச்சி புனித வளனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில், வளவனார் தமிழ்ப் பேரவை துவக்கவிழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ராசரத்தினம் தலைமை வகித்தார். துறைத்தலைவர் குழந்தைச்சாமி வரவேற்றார். பேராசிரியர் திரவியம் எழுதிய, "கல்வி, கலாச்சாரம்-இன்றைய நிலவரம், ஓர் பின் நவீனத்துவ நோக்கு' என்ற நூல் வெளியிடப்பட்டது. விழாவில், "செம்மொழியாம் தமிழ்மொழி' என்ற தலைப்பில், தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் ராசேந்திரன் பேசியதாவது: மொழி என்பது ஒலியாக மட்டுமல்லாது உடல்மொழி, மனமொழியாகவும் உள்ளது. உடல் அசைவுகளால் தெரிவிக்க முடியாததை மட்டுமே குரலுடன் சேர்த்து கூறுகிறோம். இவை எல்லாற்றையும் விட கண்களால் பேசும் மனமொழியே உன்னதமானது. இன்றைய இளைஞருக்கு மொழியின் தேவையை உணர்த்தவேண்டும். மொழி இல்லாமல் வாழ்க்கை இல்லை. அந்தளவுக்கு வாழ்க்கையோடு மொழி பின்னி பிணைந்து இருக்கிறது. இயல்பாக உள்ளதை மூடி மறைக்கும் அனைத்தும் செயற்கைதான்.  அவ்வகையில், கலை, இலக்கியம் அனைத்தும் செயற்கைதான்.

செம்மொழி மாநாட்டு பாடலாக, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் குறளை முதல் வரியாக முதல்வர் கருணாநிதி பயன்படுத்தினார். "பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லை' என்பது அர்த்தம். அந்த குறளின் அடுத்த அடி, "சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்பதை அவர் பயன்படுத்தாமல், "பிறந்தபின் யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று நேர்த்தியாக வார்த்தையை நெசவு செய்திருக்கிறார். மனிதருள் ஏற்றத்தாழ்வுக்கு காரணம் அவர்கள் செய்யும் தொழிலா? அல்லது செய்தொழிலில் உள்ள நேர்த்தியா? என்ற உரைநடை சர்ச்சை காரணமாகவே, குறளின் அடுத்த வரியை அவர் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார். "செம்மொழி தமிழ்' என்று தமிழகளவில் பரிதிமாற்கலைஞர் துவங்கிய பணியை, இந்திய அளவில் முதல்வர் கருணாநிதி கொண்டு சென்று, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தார். உலகளவில் செம்மொழியாக அரசு அறிவித்த ஒரே மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்கும். அதனால்தான், எல்லா செம்மொழியையும் தமிழுக்கு கொண்டு வந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலையில் ஆராய்ச்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

0 comments: