சங்க கால கோவில்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: ரீச் பவுண்டேஷன் நிறுவனர் பேச்சு

சென்னை : சங்க கால கோவில்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என ஓய்வுப் பெற்ற தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி. சத்தியமூர்த்தி பேசினார்.ஓய்வு பெற்ற தொல்லியல் துறை கண்காணிப்பாளரும், "ரீச் பவுண்டேஷன்' நிறுவனருமான  டி.சத்தியமூர்த்தி,  சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி ஐயர் பவுண்டேஷன்  அரங்கத்தில், "தமிழகத்தில் பல்லவர் காலத்திற்கு முந்தைய கோவில்கள்' என்ற தலைப்பில் பேசியதாவது: நம் நாட்டில் பழங்காலம் தொட்டே ஏராளமான கோவில்களும், சிற்பங்களும் கட்டடகலை அமைப்புகளும் நமது கலாசார பண்பாட்டின் சிறப்பு இயல்புகளை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவதாக அமைந்து உள்ளது.அந்த வகையில் வேம்பத்தூர், "வீற்றிருந்த பெருமாள் கோவில்' எங்களது ரீச் பவுண்டேஷனால் கண்டறியப்பட்டுள்ளது.இந்த கோவில் செங்கற்களால்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் சங்க காலத்தை சேர்ந்தது என்றும் இதே போன்ற கட்டட அமைப்பை கொண்ட புத்தர் கோவில் ஒன்று காவேரிப்பட்டிணத்தில் இருந்ததாக தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்."வீற்றிருந்த பெருமாள் கோவில்' சங்க காலத்திற்கு முன்பு நிகழ்ந்த சுனாமி தாக்குதலுக்கு உள்ளானதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.இக்கோவிலில் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்திருந்தாலும் தற்போதும் அதன் பழமையான கட்டமைப்பு உள்ளது.இங்கு குரவை கூத்து சிற்பம் தற்போதும் உள்ளது. அங்கு உள்ள ஓவியங்களும், செங்கலால் கட்டப்பட்ட கோபுரமும் அப்பகுதியினரால்  பாதுகாக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.

இதே போன்று சென்னை அடுத்த சாலுவான் குப்பத்தில்  அமைந்திருந்த சுப்ரமணியர் கோவிலிலும் பாதுகாக்க படாமல் இருந்தது.அக்கோவிலை நான் தொல்லியல் துறையில் பணிபுரிந்த போது கண்டறிந்தேன். தற்போது அக்கோவிலின் பழமையான அடையாளமாக சிதிலமடைந்த அதன் அடிப்படை அம்பசங்கள் அப்படியே உள்ளன.இது போன்று தமிழகத்தில் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், கட்டட அமைப்புகளை கண்டறிந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.இவ்வாறு சத்தியமூர்த்தி பேசினார். விழாவில், ஏராளமான தொல்லியல் துறை ஆர்வலர்கள்  பங்கேற்று தங்கள் சந்தேகங்களுக்கான பதில்களை சத்தியமூர்த்தியிடம் கேட்டறிந்தனர்.

 

0 comments: