தன்னம்பிக்கையே லட்சியங்களின் அஸ்திவாரம்

மஞ்சூர்,ஜூலை 30: மாணவர்களின் தன்னம்பிக்கையே அவர்களின் உயர்ந்த லட்சியங்களுக்கு அடித்தளம் அமைத்துத் தரும் என்று மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி முப்பெரும் விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) லட்சுமணன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

   கடந்த 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் களுக்கு பரிசளிப்பு விழா, முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்க விழா, முன்னாள் மாணவர்களை கெüரவிக்கும் விழா என முப்பெரும் விழா மஞ்சூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவிற்கு தலைமையாசிரியர் தேவன் தலைமை வகித்தார். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் கே.என்.மூர்த்தி, ராமநாதபுர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் போஸ், முன்னாள் தலைமையாசிரியர் சங்கர், வழக்கறிஞர் கே.விஜயன், உதவிப் பொறியாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் (பொ) எல். இலட்சுமணன் மஞ்சூர் பள்ளியில் பயின்று தற்போது மருத்துவம், நீதித்துறை உள்பட பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்களை பாராட்டி பேசியது:

 இப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் இன்று பலவேறு துறைகளில் உயர் பதவிகளில் இருப்பது பாராட்டத்தக்கது. அதற்கு அவர்களின் தன்னம்பிக்கை, உழைப்பு, விடா முயற்சி போன்றவையே முக்கியக் காரணங்களாகும். எதையும் சாதிக்கும் ஆற்றலும், அசாதாரணத் துணிவும் இந்த மாணவப் பருவத்தில்தான் உருவாகும். அதை நல்வழியில் பயன்படுத்தும் விதமாக தன்னம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் செயல்பட்டால் உயர்ந்த லட்சியங்களை அடைய முடியும்.

  எனவே மாணவர்கள் தங்கள் லட்சியப் பயணங்களுக்கு இன்றே அடித்தளங்களை அமைத்து செயல்பட உறுதி கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் கடந்த கல்வி ஆண்டு பொதுத் தேர்வில் 10, 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

 

0 comments: