மதுரை மருத்துவக் கல்லூரியில் செல்போன் பேசத் தடை

மதுரை, ஜூலை 30:    மதுரை மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் செல்போன் பேசத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், கல்லூரி வளாகத்தினுள் 6 இடங்களில் ஜாமர் சாதனம் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்லூரி டீன் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.


    அவர் செய்தியாளர்களிடம் கூறியது:   மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் வரும் 2-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளன. அப்போது, முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு வரவேற்பு அளிக்கப்படும்.    கல்லூரியின் மனநலத் துறை பேராசிரியர், மாணவ, மாணவியர் மூலம் கல்லூரிக்கு வரும் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு மனநல மேம்பாட்டு சிறப்பு கவுன்சில் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  ராகிங் தடுப்புக் குழு:   முதலாமாண்டு மாணவ, மாணவியரை கேலி, கிண்டல் செய்வதைத் தடுக்க, ராகிங் தடுப்பு சிறப்புக் குழுக்களை நியமித்துள்ளோம். இருந்தபோதிலும், சாதாரணமாக பிறரின் செயல்களை மனரீதியாக எதிர்கொள்ளும் வகையில், முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு உளவியல் பயிற்சி முக்கியமாகும். அதன்படியே, கவுன்சிலிங் நடைபெற உள்ளது.   இதன் அடுத்த கட்டமாக 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு மாணவ, மாணவியர் வரையில் ராகிங் கூடாது என வலியுறுத்தும் கவுன்சிலிங் நடத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற உளவியல் ரீதியான அணுகுமுறையால், எதிர்காலத்தில் ராகிங் என்பதே மாணவர்கள் மத்தியில் இருக்கக்கூடாது என்பதே எங்களது நோக்கமாகும்.

  செல்போன் பேசுவதன் மூலம் மாணவ, மாணவியரின் கவனம் கல்வி பெறுவதிலிருந்து திசை திரும்பும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, கல்லூரிக்குள் வகுப்பறை, தேர்வறை மட்டுமின்றி நூலகம் போன்ற இடங்களிலும் செல்போன் பேச தடைவிதிக்கப்பட உள்ளது.

  அத்துடன், கல்லூரி வளாகத்தில் 6 இடங்களில் செல்போன்களைச் செயலிழக்கச் செய்யும் ஜாமர் சாதனங்களையும் பொருத்த உள்ளோம். கல்லூரியில் உள்ள அனைத்து பாடத் துறைகளையும் கம்ப்யூட்டர்மயமாக்கவும், ஆராய்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தவும் சிறப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்

 

0 comments: