"சுய மரியாதை மொழிக்கும் அவசியம்'

திருச்சி, ஜூலை 29: சுய மரியாதை மண்ணுக்கும், மனிதனுக்கு மட்டுமல்ல, மொழிக்கும் அவசியம் என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன்.

  திருச்சி தூய வளனார் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், வளனார்  தமிழ்ப் பேரவையைத் தொடக்கிவைத்து, "செம்மொழியான தமிழ்மொழி' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:

     மரம், செடி, கொடிகள்கூட தங்களுக்கு இணக்கமானவற்றைத்தான் பக்கத்தில் வைத்துக் கொள்ளும். மரம், செடி, கொடி பேசும் மொழி நமக்குத் தெரியாது; கேட்கவும் முடியாது. ஆனால், அவை மனதோடு பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.

     மொழி ஒளியால், உடல் அசைவுகளால் மட்டுமல்லாது; மனதாலும் பேசப்படுகிறது. மனதால் உங்களால் பேச முடிந்தால் அதற்கு மனமொழி என்று பெயர்.

  சமூகத்தில் நடக்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அது மொழி வழியாகத்தான் இருக்க வேண்டும். வீடு முதல் அரசியல் வரை எல்லா இடங்களிலும் மொழிதான் பயன்படுகிறது. மொழி இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

   ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நிர்பந்தம் இருக்கிறது. ஆனால், பொய் சொல்வதற்கு நிர்பந்திக்காத வாழ்க்கைத்தான் நமக்கு தேவை. அந்த வாழ்க்கையை நோக்கித்தான் நாம் பயணம் செய்ய வேண்டும்.

  சுய மரியாதை மண்ணுக்கும், மனிதனுக்கும் மட்டுமல்ல; மொழிக்கு அவசியம்.

பெரியாரின் உழைப்பால், அண்ணாவின் வழிகாட்டுதல் ஆகியவற்றால் தமிழர்கள் சுய மரியாதையை பெற்றனர்.

    ஆனால், தமிழகத்தில் தமிழ் மொழிக்கு சுய மரியாதை கிடைக்கவில்லை. தமிழர்கள் ஆட்சி செய்யலாம். ஆனால், தமிழ் ஆட்சி மொழியாக இல்லை.  இந்த நிலையைப் போக்கி, தமிழ் மொழியின் சுய மரியாதை மீட்கப்பட்டதன் வெளிபாடுதான் தமிழுக்குச் செம்மொழித் தகுதியும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும்.

    தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி வேண்டும் என்று பரிதிமாற் கலைஞர் தொடக்கி வைத்ததை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று முடித்திருக்கிறார்.

    உலகளவில் தகுதியும், பெருமையும் தமிழுக்குக் கிடைத்திட வேண்டும்என்ற நோக்கில்தான் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

     பிற செம்மொழியின் சிறப்புகளை அறியவும், தமிழ்ச் செம்மொழியின் சிறப்புகளைப் பிறர் அறிந்து கொள்ளும் வகையிலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செம்மொழிகளுக்கான ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு மையத்துக்குத் தமிழ்தான் தலைமை தாங்குகிறது. இந்த ஆய்வு மையத்தின் மூலம் பல ஆய்வு முடிவுகள் வெளிவரும் என்றார் ராசேந்திரன்.

       முன்னதாக, தஞ்சை பரிசுத்தம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வாழ்வியல், அறிவியல் துறையின்  புலத் தலைவர் ஏ.எஸ்.டி. பிள்ளை எழுதிய "கல்வி, கலாசாரம், இலக்கியம் - இன்றைய நிலவரம் ஓர் பின் நவீனத்துவ நோக்கு' என்ற நூலை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன் வெளியிட, பரிசுத்தம் அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் எஸ்.பி. அந்தோனிசாமி பெற்றுக் கொண்டார்.

   இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் இர. ராசரத்தினம் தலைமை வகித்தார்.

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறைத் தலைவர் கா. செல்லப்பன், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ்த் துறைத் தலைவர் தமிழவன், எழுத்தாளர் பிரேமா நந்தகுமார், தமிழ் இலக்கியக் கழகத்தின் முன்னாள் செயலர் அமுதன் அடிகள் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

    முடிவில், நூலாசிரியர் முனைவர் ஏ.எஸ்.டி. பிள்ளை ஏற்புரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர் மணிவளன், இணை முதல்வர் செபாஸ்டின் ஆனந்த், வளனார் தமிழ்ப் பேரவைத் தலைவர் ஆரோக்கிய தன்ராஜ், பேராசிரியர் செல்வக்குமரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    தூய வளனார் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த் துறைத் தலைவர்  அ. அந்தோனி குருசு நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். முன்னதாக, கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் அ. குழந்தைசாமி வரவேற்றார். தமிழாய்வுத் துறைப் பேராசிரியர்  உ. ராசு நன்றி கூறினார்.

 

0 comments: