"இளவட்டம்-2010' இளைஞர் திருவிழா போட்டிகள் தொடக்கம்

தஞ்சாவூர், ஜூலை 29: மாநில அளவில் நடைபெறவுள்ள இளவட்டம் - 2010 இளைஞர் திருவிழாவில் பங்கேற்பதற்கான தேர்வுப் போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கின.

   தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், மாநில அளவில் 18 முதல் 29 வயது வரையுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள், திருமணமாகாத இளைஞர்கள் ஆகியோரை இணைத்து, இளவட்டம்-2010 (இளைஞர் திருவிழா) என்ற நிகழ்ச்சி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 10, 11, 12-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.

   இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பால்வினை நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வாழ்வியல் திறன்களை மேம்படுத்தி இளைய சமுதாயத்தை சரியான திசையில் வழிகாட்டுதல் மற்றும் இளைஞர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொணர்தல் போன்றவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.

  தஞ்சையில் நடைபெற்ற தேர்வுப் போட்டிகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இந்திரஜித் கொடியசைத்து தொடக்கிவைத்தார். மேலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் அவர் தொடக்கிவைத்தார்.

   இந்த வாகனம் தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளதாகக் கண்டறியப்பட்ட 10 மாவட்டங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும். முதல்கட்டமாக இந்த வாகனம் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு நாமக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு சென்றது.

  மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், பல்கலைக்கழகங்கள் அளவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறவுள்ள நிறைவுப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

   தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட 26 கலை, அறிவியல் கல்லூரிகள், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட 4 பாலிடெக்னிக் கல்லூரிகள், சென்னை தொழில்கல்வி இயக்ககத்திற்கு உள்பட்ட 4 பாலிடெக்னிக் கல்லூரிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றன.

  தஞ்சாவூரில் தொடங்கிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் நாளில் 18 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகள் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

  பல்கலைக்கழக அளவிலான கலை நிகழ்ச்சிகளுக்கான போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமையும் (ஜூலை 31) நடைபெறும்.

   மாவட்ட விளையாட்டு அலுவலர் த.அ. செல்வக்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் ப. கனகசுந்தரம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு அலுவலர் கே. மதிவாணன் உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

 

0 comments: