இளைய தலைமுறையினருக்கு நாட்டுப்பற்று வேண்டும்

ஈரோடு, ஜூலை 30: நாட்டுப்பற்று மிக்கவர்களாக இளைய தலைமுறையினர் திகழ வேண்டும் என்று தியாகி ஐ.மாயாண்டிபாரதி கூறினார்.


    மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை துவங்கியது. ஈரோடு மாநகராட்சி மேயர் க.குமார்முருகேஷ் தலைமை வகித்தார். துணை மேயர் பா.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் அறிமுக உரையாற்றினார். ஈரோடு கட்டுனர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பி.பெரியசாமி, யுஆர்சி பழனியம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் சி.தேவராஜன், தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கச் செயலர் இரா.லெட்சுமணன் வாழ்த்துரை வழங்கினர்.

   புத்தகத் திருவிழா அரங்கைத் திறந்து வைத்து 93 வயதான தியாகி

ஐ.மாயாண்டிபாரதி பேசியது:

 சுதந்திரத்திற்கு முன்னர் பல துறைகளிலும் நாம் பின்தங்கியிருந்தோம். வெள்ளையரை எதிர்த்து கடுமையாகப் போராடினோம். "படுகளத்தில் பாரததேவி’ என்ற நூலை எழுதியதற்காக நான் கைது செய்யப்பட்டேன். சுமார் 14 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறேன். அதன்பலனை இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

 விஞ்ஞான வளர்ச்சி, பெண் விடுதலை, கல்வி மேம்பாடு என அனைத்துமே  கிடைத்தது சுதந்திரம் பெற்றதால்தான். சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியது சுதந்திர இந்தியாதான். முன்பெல்லாம் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். இப்போது பேரக் குழந்தையை பள்ளிக்கு தூக்கிச் செல்லும் தாத்தாக்களைப் பார்க்க முடிகிறது.

சுதந்திரம்தான் நமது பெரிய சொத்து.

 பாழாய்க் கிடந்த பாரத நாட்டைப் பண்படுத்தியது சுதந்திரம்தான். அத்தகு சுதந்திரத்தைப் பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை. எனவே இளைஞர்கள் நாட்டுப்பற்று மிகுந்தவர்களாகத் திகழ வேண்டும் என்றார்.

   காந்தி ஆஸ்ரமத் தலைவர் தியாகி கி.லட்சுமிகாந்தன்பாரதி பேசியது:

  காந்தியின் கொள்கைகளைப் பேசும் நாம், அதை எந்த அளவுக்குக்  கடைப்பிடிக்கிறோம் என்பது கேள்விக்குறியே. கள்ளுக்கடைகளை மூடுதல், உள்ளாட்சிகளுக்கு முழு அதிகாரங்கள் வழங்குதல் ஆகிய காந்தியின் கனவுகள் இப்போதும் கனவாகத்தானே உள்ளன.

 கோடீஸ்வரர்கள் மோதிக் கொள்ளும் போட்டியாகத்தான் தேர்தல்கள் உள்ளன. சாதாரண மக்களுக்கும், தேர்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.

  கதருக்குக் கொடுத்து வரும் தள்ளுபடி மானியத்தைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே கதரின் விலை அதிகரித்து, கதர்  நிறுவனங்கள் மூடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தள்ளுபடி மானியமும்  குறைக்கப்பட்டு விட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

 எனவே காந்தியக் கொள்கைகளைக் காக்க பல்வேறு அமைப்புகளும் பாடுபட வேண்டும். நான் பல பதவிகள் வகித்தாலும், காந்தி ஆஸ்ரமத் தலைவராக இப்போது பொறுப்பு வகிப்பதை மட்டுமே பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

  பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ-மாணவியருக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக தனி அலுவலர் ஆவுடையப்பன் பரிசுகளை வழங்கிப் பேசினார். முன்னதாக தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் ஆக. 10-ம் தேதி வரை புத்தகத் திருவிழா  நடைபெறுகிறது

 

0 comments: