சிறந்த தொழில் முனைவோராக தேவை என்ன?: மேலாண்மை இயக்குனர் பேச்சு

ஓசூர்: ""மாணவர்கள் எதிர் காலத்தில் சிறந்த தொழில் முனைவோராக விளங்க புதுமையான எண்ணங்களையும், தொழில்நுட்ப ஆற்றலையும் வளர்த்து கொள்ள வேண்டும்,'' என, பெங்களூரு சர்வதேச மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனர் டாக்டர் மனோகர் தெரிவித்தார்.

ஓசூர் எம்.ஜி.ஆர்., நகர் அதியமான் இன்ஜினிரிங் கல்லூரியில் இந்திய தொழில்நுட்ப சங்கம் சார்பில் தேசிய அளவிலான தொழில்முனைவோருக்கான இரு நாள் கருத்தரங்கு நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை வகித்தார். இந்திய தொழில்நுட்ப சங்க ஆலோசகர் அறிவுடைநம்பி வரவேற்றார்.

பெங்களூரு சர்வதேச மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனர் டாக்டர் மனோகர் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். பின், அவர் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி பேசியதாவது: தற்போது உலகத்தில் தொழில் முனைவோர் துறையில் புதிய தொழில்கள் துவங்கி சாதனை படைக்க இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கு விடா முயற்சி, ஊக்கம், புதிய அறிவாற்றல் அவசியம் இருக்க வேண்டும். ஒரு தொழில் துவங்கும் முன், அதற்கு தேவையான தொழில் நுட்பம், உற்பத்தி செய்யும் முறை மற்றும் அவற்றை விற்பனை செய்யும் திறன் ஆகியவை வளர்த்து கொள்ள வேண்டும். இதற்கு தற்போது மேலாண்மை படிப்பு முடிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்ததும் தொழில் முனைவோரிடம் சேர்ந்து நன்று பயிற்சி பெற வேண்டும்.

நீண்ட பயிற்சியும், தொழில்நுட்பங்களையும் கற்றுகொண்டால் மட்டுமே தொழில்துறையில் சாதிக்க முடியும். பயோ டெக்னாலஜி துறையில் நல்ல தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதே போல், ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு தகுந்தாற்போல் மார்க்கெட்டில் வரவேற்பு உள்ள தொழில்களை துவக்கினால் தொழில்துறையில் வெற்றி பெறலாம். டாக்டர் அப்துல்கலாம், விப்ரோ பிரேம்ஜி, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, ரிலையன்ஸ் அம்பானி ஆகியோர் சிறந்த தலைமை பண்பு, புதிய சிந்தனை மற்றும் விடா முயற்சியுடன் செயல்பட்டதால் தான், அவரவரர் துறையில் சாதிக்க முடிந்தது. அதே போல், மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் முனைவோராக விளங்க படிப்போடு புதுமையான எண்ணங்களையும், தொழில்நுட்ப ஆற்றல்களையும் வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை தொழில்முனைவோர் மைய ஆலோசகர் முரளி, "தொழில்முனைவோருக்கான தலைசிறந்த 15 பண்புகள்' என்ற தலைப்பில் செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்தார். கல்லூரி மேலாண்மை துறை இயக்குனர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

0 comments: