திருச்சி "பெல்'லுக்கு தேசிய விருது

திருச்சி: திருச்சி பெல் நிறுவனத்துக்கு உற்பத்தி செலவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஐ.சி.டபுள்யூ.ஏ.ஐ., (இந்திய உற்பத்தி செலவு மற்றும் முதலீட்டு கணக்காயர் கழகம்) சார்பில் வழங்கப்படும் 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

டில்லியில் உள்ள ஐ.சி.டபுள்யூ.ஏ.ஐ., நிறுவனம் சார்பில் கடந்த 2003ம் ஆண்டு முதல் பொதுத்துறையில் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனத்துக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையிலான குழுவானது திருச்சி பெல் நிறுவனத்தை உற்பத்தி செலவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்து அறிவித்தது.

அண்மையில் டில்லியில் நடந்த விழாவில் நிறுவனங்கள் விவகாரத்துறை மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இவ்விருதை திருச்சி பெல் நிறுவனத்துக்கு வழங்கினார். விருதை பெல் நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பிரசாத் ராவ் மற்றும் திருச்சி பெல் நிதித்துறை பொதுமேலாளர் ஜம்புநாதன் கூட்டாக பெற்றுக் கொண்டனர். இதுதவிர பெல் நிறுவனத்தின் பெங்களூரு மின்னணு பிரிவு மற்றும் எலக்ட்ரோ போர்சலைன் பிரிவு, ஜான்சி, ஹரித்துவார் மற்றும் ராணிப்பேட்டை பெல் நிறுவனங்களும் பல்வேறு பிரிவுகளில் விருது வென்றுள்ளது. தேசிய அளவில் வழங்கப்படும் விருதை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகப்படியான எண்ணிக்கையில் பெல் நிறுவனம் வென்றுள்ளது. உற்பத்தி செலவு மேலாண், தரம் மற்றும் வழங்குதல் ஆகியவற்றில் சிறப்புடன் செயல்பட்டதால் திருச்சி பெல் நிறுவனத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

பெல் நிறுவனம் கடந்த 30 ஆண்டாக தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது. இந்நிறுவன வளர்ச்சியானது 34 ஆயிரத்து 154 கோடி ரூபாய் விற்றுமுதலை அடைந்து 21 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி திட்டத்தில் பெல் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது ஆண்டுக்கு 15 ஆயிரம் மெகாவாட் அளவில் தனது உற்பத்தித் திறனை வளர்த்துள்ள பெல் நிறுவனம், அதை ஆண்டுக்கு 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

0 comments: