""இளைஞர்கள் எங்கிருந்தாலும் தாய்நாட்டையும், பெற்றோரை மறக்கக்கூடாது,'' : பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன்

பெ.நா.பாளையம்:""இளைஞர்கள் எங்கிருந்தாலும் தாய்நாட்டையும், பெற்றோரை மறக்கக்கூடாது,'' என, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தினார்.கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசியதாவது:அறமும், ஒழுக்கமும் நேர்மையான வாழ்க்கைக்கு அடிப்படை. தனிமனிதனை சிறந்த குடிமகனாக மாற்றுவதே தாய்மொழி கல்வியின் நோக்கம். தாய்மொழியே பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென ஐ.நா., சபையின் "யுனெஸ்கோ' கடந்த 1953ல் அறிவித்தது. 

அந்நிய மொழி வாயிலாக கற்பதை காட்டிலும், மிக விரைவாக கல்வி பெற தாய்மொழியே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளது. அறிவியல் துறையில் குறிப்பாக கம்ப்யூட்டர் துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கலைச்சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், ஆங்கில அறிவும் அவசியம் தான்; அதற்காக ஆங்கில மோகம் தேவையில்லை.

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிரிடையே வாழ்வியல் சிந்தனைகள் தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்கள் அறிவு ஜீவிகளாக இருப்பதோடு, ஆன்மிகம் கலந்த அறிவுப்பாதையில் செல்ல வேண்டும். இளைஞர்கள் எங்கிருந்தாலும் பிறந்த நாட்டையும், பெற்றோரையும் மறக்கக் கூடாது. "சத்தியம், தூய்மை, துப்புரவு, குடியுரிமை, இரக்கம், பொதுநலம், பணிவு, ஆர்வம், சுயசிந்தனை, உடலுழைப்பு, அறிவின் தாகம், எளிமை, தன்னம்பிக்கை, தன்னடக்கம், தன்மானம்,சுயமரியாதை, சுய கட்டுப்பாடு உள்ளிட்ட 82 மனிதாபிமான சமூக, ஒழுக்க நன்னெறிகளை இளைஞர்களிடம் பயிற்றுவிக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் கூறுகிறது.

இந்த நன்னெறிகள் திருக்குறளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோரே முதல் ஆசிரியர்கள். குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை அடிப்படையாய் கொண்டது என்ற கருத்து பழங்கதை. அறிவுத் திறனே முக்கிய காரணி என்ற கருத்து உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தை பெருக்கி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே 21ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும். 

உலக அளவில் விண்வெளித்துறை, பாதுகாப்புதொழில் நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் மேம் பாடு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. வரும் 2020ல் இந்தியா வளமான தேசமாக மலர ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.விழாவில், கல்லூரி தாளாளர் லட்சுமணன், செயலாளர் ஆறுச்சாமி, முதல்வர் தேவி உள்பட பலர் பங்கேற்றனர்; 792 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.


 

0 comments: