மாணவர்களுக்கு ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டு

சென்னை : பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவ, மாணவியருக்கு துணை முதல்வர் ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து, இந்த ஆண்டு நடந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களில், மாநில அளவில் தலா முதல் 25 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, துணை முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் சார்பில் பாராட்டு பத்திரமும், தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் நேற்று வழங்கினார்.இதில், 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 30 பேருக்கு பரிசுத் தொகையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது. இவர்களில் 27 பேர் மாணவியர், மூன்று பேர் மாணவர்கள்.அதேபோல, பிளஸ் 2 தேர்வில் முதலாவதாக வந்துள்ள 25 பேரில், 24 பேர் மாணவியர், ஒருவர் மாணவர்.
இவர்களுக்கு பரிசுத் தொகையுடன், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பட்டப்படிப்பு மேற்கொள்ள உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியின் போது, நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் அசோக் வரதன் ஷெட்டி, நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோல, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர், மாணவி ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மாணவி ஒருவர், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மாணவி ஒருவர் என ஆறு முதல் பரிசுகள், ஆறு இரண்டாம் பரிசுகள், ஆறு மூன்றாம் பரிசுகளை தமிழக அரசு வழங்குகிறது.இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு முறையே 50 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு 25 ஆயிரம், 20 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் என பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டு தேர்வில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 57 மாணவ, மாணவியருக்கு 12 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மொத்த பரிசுத் தொகையை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.நிகழ்ச்சியின் போது, பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், செயலர் ராமநாதன், ஆணையர் பஷீர் முகமது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை ஆணையர் அண்ணாமலை மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

0 comments: