"பொறியியல் துறை மாணவர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்'

ஒசூர், ஜூலை 29: பொறியியல் துறை மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என பெங்களூர் சர்வதேச வர்த்தக மேலாண்மை கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சி.மனோகரன் கூறினார்.


 ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்திய தொழில்நுட்ப சங்கம் சார்பில் இரு நாள் கருத்தரங்கை வியாழக்கிழமை தொடங்கி வைத்து, மனோகரன் பேசியது:

 2030-ல் உலகத்தை வழிநடத்திச் செல்லும் நாடாக இந்தியா விளங்கும். இதற்கு முக்கியக் காரணம் இந்திய இளைஞர்களே. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இங்கு  அதிகமான இளைஞர்கள் உள்ளனர். இதுவே இந்தியாவின் மூலதனமாகத் திகழும்.

 1995-ல் தமிழகத்தின் வரி வருவாய் ரூ.3,300 கோடியாக இருந்தது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ரூ.33 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாகும்.

 மைசூரைச் சேர்ந்த நாராயணமூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கி, பல ஆயிரம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.

 இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ பிரேம்ஜி, ரத்தன் டாடா, அம்பானி, மிட்டல் போன்றவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சிறந்து விளங்கும் தொழிலதிபர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய தேசிய சிந்தனை மற்றும் ஆற்றல் மிக்க நிர்வாகத் திறமையே காரணம்.

 மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு, கிடைக்கும் வாய்ப்பை செம்மையாக பயன்படுத்திப் புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க வேண்டும். புதுமையான எண்ணங்களை, மக்களின் தேவைகளாக மாற்றி புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து தொழில்துறையில் சாதனைகளைப் படைக்க வேண்டும்.  

 மாணவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இணைய தளத்தில் உள்ளன. இதனைப் பயன்படுத்தி வாழ்வில் சிறந்த பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்தி, சிறந்த தொழில் முனைவர்களாக உருவாக வேண்டும் என்றார்.

 விழாவில் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை வகித்தார். பேராசிரியர் அறிவுடைநம்பி, மாணவர் தலைவர் அசோக்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

0 comments: