வேதத்தை பாதுகாக்க இல்லறமே சிறந்த வழி: கல்லூரி விழாவில் தகவல்


மயிலாப்பூர் : ""நம் நாட்டின் சொத்தான வேதத்தை பாதுகாக்க இல்லறமே சிறந்த வழி,'' என பாலசுப்ரமணிய சாஸ்திரிகள் பேசினார். மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி, கிருஷ்ணசாமி ஐயர் சமஸ்கிருத கல்வி அறக்கட்டளை சார்பில், பிரம்ம ஸ்ரீ டி.வி. ராமசந்திர தீட்சிதர் நூற்றாண்டு நினைவு சொற்பொழிவு விழா நேற்று நடந்தது. விழாவில், மயிலை சமஸ்கிருத கல்லூரி முன்னாள் பேராசிரியர் பாலசுப்ரமணிய சாஸ்திரிகள் பேசியதாவது:எப்படி பாசிட்டிவும் - பாசிட்டிவும், நெகட்டிவும் - நெகட்டிவும், பாசிட்டிவும் - நெகட்டிவும் இணைந்தால் என்ன கிடைக்கும் என்பது உடனடியாக தெரிகிறதோ, அதே போல் வேதம் படித்தால், எப்படி வாழ்வது, வாழ்வில் நாம் நினைத்ததை எப்படி அடைவது என்பதை அது நமக்கு போதிக்கும்.இதனால், வேத வழியில் நின்று நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். பிராமணர்கள் வேதத்தை கற்று மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தானங்களை பெற்று, மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்.ஆசார, அனுஷ்டானங்கள் உடலை சுத்தி செய்வதுடன் மனதையும் சுத்தி செய்பவை. ஆனால், இவற்றை பலரும் கடைபிடிப்பதில்லை. வேத மந்திரங்களை அதன் அர்த்தம் தெரிந்து சொல்ல வேண்டும். வேதம் படித்தவர்களை மதிக்க வேண்டும்.ஒவ்வொருவரும் தமக்கு என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை செய்ய வேண்டும். மற்றவர் செய்கிறாரே என்று செய்யக் கூடாது.உபநயனம், திருமணம் என்பது முக்கியம். திருமணம் நான்கு நாள் தீட்சை. இது மணமக்கள் வீட்டாருக்குதான். மற்றவர்களுக்கு அரை நாள் மட்டும் தான் திருமண வைபவத்தில் உண்டு என வேதம் சொல்கிறது. அதை விட்டு விட்டு, திருமணத்திற்கு முதல் நாள் மதியத்தில் இருந்து மறு நாள் கட்டு சோறு வரைக்கும் பெண் வீட்டாரை பாடுபடுத்துவது தவறு.

திருமணத்தில் காசி யாத்திரைக்கு பிறகுதான் அதற்கான சடங்குகளே துவங்குகின்றன. திருமணம் செய்தால் தான், மூன்று வகையான கடன்களையும் செய்து முடிக்க முடியும். எனவே வேதம் நமக்கும் காட்டும் வழியை கடைபிடிக்க இல்லறமே உயரிய வழி.இவ்வாறு பிரம்ம ஸ்ரீ பாலசுப்ரமணிய சாஸ்திரிகள் பேசினார்.விழாவில், அறக்கட்டளை செயலர் மாதவன் அறிமுக உரை நிகழ்த்தினார். விழாவில், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், ராமமூர்த்தி உள்ளிட்டோரும், கல்லூரி அங்கத்தினரும் பங்கேற்றனர்.


 

0 comments: