பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி: போலீஸார் அறிவுரை

தென்காசி,  ஜூலை 29:   பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும் என திருநெல்வேலி சரக துணைப் போக்குவரத்து ஆணையர் வா.பாலன் தெரிவித்தார்.

  தென்காசி வட்டாரத்திலுள்ள பள்ளி, கல்லூரி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:

  வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படுவதோடு, அதனை வாகனங்களின் முன்னும், பின்னும் வாசகமாக எழுதிவைக்க வேண்டும். பள்ளி, மற்றும் கல்லூரி என்ற முத்திரை வாகனங்களின் முன்னும், பின்னும் இடம்பெற வேண்டியது அவசியம்.

  வாகனத்தின் கதவு தாழ்ப்பாள் உறுதியானதாக இருக்க வேண்டும். அதனை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஓட்டுநர்களை பள்ளி நிர்வாகத்தினர் மாதந்தோறும் அணுகி அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

  பக்கவாட்டு தடுப்பு வலை, முதலுதவிப் பெட்டி போன்றவற்றை வாகனங்களில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான மாணவ, மாணவிகளை ஏற்றக் கூடாது. ஓட்டுநர் பணியில் இருக்கும் போது செல்போன் உபயோகிக்க கூடாது என்றார் அவர்.

  கூட்டத்துக்கு, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் த.க.முத்துசாமி முன்னிலை வகித்தார். தென்காசி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் இரா. இளமுருகன் வரவேற்றார். மோட்டார் வாகன ஆய்வாளர் ஐ.ஜெய்மனோகர் நன்றி கூறினார்.

குற்றாலம் சாரல் விழாவில் நாய்கள் கண்காட்சி

தென்காசி,ஜூலை 29: குற்றாலம் சாரல் விழாவின் 6-வது நாளான வியாழக்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

  குற்றாலம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி போட்டியில் டாபர்மேன், பொமேரனியன்,கன்னி, ஜெர்மன் ஷெப்பர்டு, சிப்பிப்பாறை, கோம்பை, லேப்ரடார் உள்ளிட்ட 17வகையான இனத்தைச் சேர்ந்த 78 நாய்கள் போட்டியில் கலந்துகொண்டன.

  ஒவ்வொரு இனத்திற்கும் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ்.ஆனந்த் என்பவருடைய பீகிள் வகையினத்தை சேர்ந்த நாய் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. போட்டியின் நடுவர்களாக நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியன், திருநெல்வேலி கால்நடைபராமரிப்புத் துறை துணை இயக்குநர் மணிவண்ணன்,மண்டல இணை இயக்குநர் எஸ்.சிவானந்தம் ஆகியோர் 
செயல்பட்டனர்.

  தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.கே.புகழேந்திரன் தலைமை வகித்து நாய்கள் கண்காட்சி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

  பராமரிப்பு பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் பி.கோபால் முன்னிலை வகித்தார். தொழிலாளர் ஆய்வாளர் சுடலைராஜ், தென்காசி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின், தென்காசி கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பாலகிருஷ்ணன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  விழாவில் பேரூராட்சி செயல்அலுவலர் கொ.ராஜையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் இரா.மதிவாணன் வரவேற்றார். தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் த.க.முத்துசாமி நன்றி கூறினார்

 

0 comments: