காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி

காரைக்கால், ஜூலை 30: வீட்டில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு, வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.

   காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து நேரடி செயல் விளக்கத்தை வெள்ளிக்கிழமை அளித்தனர்.

    வீட்டில் காய்கறித் தோட்டம் அமைக்க இடம் தேர்வு செய்தல், நாளொன்றுக்கு தேவைப்படும் காய்கறிகளின் அளவுக்கேற்ப செடிகள் அமைப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்தல், நடவு செய்தல், காய்கறி செடிகளின் வாழ்நாள், காய்கறிகளை அறுவடை செய்தல் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர்.

    மேலும், தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, பீன்ஸ், வெண்டைக்காய், கத்தரி, மிளகாய், கொத்தவரை, பூசணி, கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறிகளின் வளர்ப்புப் பருவங்கள் குறித்தும், காய்கறித் தோட்டத்தின் மூலம் பெறும் பொருளாதார ஆதாயங்கள், தோட்டம் அமைப்புடன் கால்நடை வளர்ப்பு குறித்து விளக்கினர்.

  ஓஎன்ஜிசி பள்ளி முதல்வர் பி. சிவக்குமார், ஆசிரியை நந்தினி ஆனந்தகுமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

 

0 comments: