சுற்றுலா தகவல்களுக்கான வலைப்பூ - தங்களது பார்வைக்காக..

அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்!
வலைப்பூ உலகில் கல்வித் தகவல் மூலம் பல்வேறு செய்திகளை வழங்கி வருகிறோம்.
அத்துடன் தற்பொழுது சுற்றுலா குறித்த தகவல்கள் மற்றும் செய்திகளை வழங்கும் விதமாக


என்னும் வலைப்பூவினை துவங்கியுள்ளோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பார்வையிட்டு தங்களது கருத்துக்களையும் பதிவுசெய்திட வேண்டுகிறோம்!
நன்றி!

தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி?


தூத்துக்குடி: தீபாவளி பண்டிகை தீ விபத்தில்லா பண்டிகையாக இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை தூத்துக்குடி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது; பெரியவர்களின் மேற்பார்வையில் தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். ஓரிரு வாளிகள் நிறைய தண்ணீர், மணல் தயாராக வைத்திருக்க வேண்டும். நீண்ட ஊதுபத்திகள் உபயோகித்து பக்கவாட்டில் பட்டாசுகள் வெடிப்பது நல்லது. அவ்வாறு செய்யும்போது முகத்தை வேறுபக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். எரிந்து முடிந்த பட்டாசு, கம்பிமத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளிகள் அல்லது உலர்ந்த மண்ணில் முக்கவேண்டும். வெடிக்காத பட்டாசுகைள கையில் எடுக்க கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளின் மாடியில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. சிறு குழந்தைகள் அபாயகரமான பட்டாசுகளை வெடிக்ககூடாது.


பூந்தொட்டி, சங்குசக்கரம், ராக்கெட் பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்க கூடாது. சிம்னி இல்லாத விளக்குகள் மூலம் பட்டாசு வெடிக்க கூடாது. கம்பிமத்தாப்புகளை தள்ளிநின்று எரியவிட வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும் போது நைலான், சில்க் துணிகளை தவிர்த்துவிட்டு, பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி முடிய பட்டாசுகளை வெடிக்கலாம். பட்டாசு கடைகள், கேஸ் கிடங்குகள், உணவுப்பொருள் சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போர், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்க், மின்சார டிரான்ஸ்பார்மர், மார்க்கெட், குடிசைகள் அருகில் வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது. பரந்த மைதானத்தில் வைத்து தான் ராக்கெட்டுகளை வெடிக்க வேண்டும். ஆடையில் தீப்பற்றினால் ஓடாமல் தரையில் படுத்து உருளவேண்டும். தீப்புண்கள் ஏற்பட்டால் குளிர்ந்த நீர்ஊற்றி மெல்லியதுணியால் மூடி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அழுத்தி துடைக்ககூடாது, புண்களின் மீது இங்க், ஆயில் போன்றவற்றை ஊற்றக்கூடாது. உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் 100 மற்றும் 101 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கை தேர்வு செய்து தன்னம்பிக்கையுடன் மாணவர் ஈடுபட வேண்டும்

ராசிபுரம்: ""மாணவர்கள் ஒரு இலக்கை தேர்வு செய்து அதற்கான செயலில் தன்னம்பிக்கையுடன் ஈடுபட வேண்டும்,'' என, பாவை கல்வி நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில், சென்னை மைண்ட் பவர் நிறுவனர் ரேகாஷெட்டி பேசினார். ராசிபுரம் பாவைக் கல்வி நிறுவனம் சார்பில், "வெற்றியை அடையும் யுத்திகள்' என்ற தலைப்பில், திறன் மேம்பாட்டு கருத்தரங்கு நடந்துது. கல்வி நிறுவன தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். மாணவர் பிரம்மநாதன் வரவேற்றார். தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார்.


சென்னை மைண்ட் பவர் நிறுவனர் ரேகா ஷெட்டி பேசியதாவது: மனிதர்கள் ஒவ்வொருக்கும் போதிய மனஆற்றல் உள்ளது. அதை பயன்படுத்துவதில் தான் ஒருவருடையை வெற்றி அமைகிறது. இந்த ஆற்றலை கொண்டு இலக்கை அடையும் வரை செயல்பாடுகளை நிறுத்தக்கூடாது. பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா 2020ல் உலக நாடுகளில் முதன்மை நாடாக திகழும். அதற்கு நமது மனித ஆற்றலே காரணமாக அமையும். உலகின் சிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் ஆற்றல் மாணவர்களிடம் தான் உள்ளது. மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களின் செயல்களை எண்ணிப்பார்க்க வேண்டும். மாணவர்கள் ஒரு இலக்கை தேர்வு செய்து அதற்கான செயலில் தன்னம்பிக்கையுடன் ஈடுபட வேண்டும்.


தங்களை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பார்ப்பது தேவையற்றது. மேற்கத்திய கலாச்சாரத்தை கைவிட வேண்டும். நமது இந்திய கலாச்சாரம், கூட்டு குடும்ப வாழ்க்கை போன்றவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீர்வளம், நிலவளம் போன்ற இயற்கை வளங்களை அழித்துவிட்டு, வாழ்வதால் என்ன பயன் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். வாழ்க்கை மரம் போன்றது. நிலைத்து நின்று தான் வளரும். அது போல், அவசர அவசரமான வாழ்க்கை செயல்பாடுகளால் எப்படிப்பட்ட வாழ்க்கை உருவாகும் என எண்ணி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், யுனிசெஃப் நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது.


தர்மபுரி வட்டார வள மையத்துக்கு உட்பட்ட 263 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறு கட்டமாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் ரதி, நக்கீரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சவேரியம்மாள் துவக்கி வைத்தார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் குருநாதன், உதவி திட்ட அலுவலர் சுகுமார் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டனர்.


ஆசிரியர்கள் தங்கள் ஆங்கில புலமை வளர்த்து கொள்ளுதல், பள்ளிகளில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கற்றல், கற்பித்தலை முறைப்படுத்தல் குறித்து பயிற்சியில் விளக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கதிர் செய்திருந்தார்.

ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை

திருப்பூர்: ""கட்டாயக்கல்வி திட்டம் கொண்டு வரும்போது, நாடு முழுவதும் ஒரு கோடி ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுவர்,'' என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலை துணைவேந்தர் பத்மனாபன் பேசினார். திருப்பூர், அமராவதிபாளையம் டி.கே.டி., ஆசிரியர் கல்வியல் கல்லூரியில் முதலாவது பி.எட்., பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் சசிகலா பர்வீன் வரவேற்றார். தாளாளர் சவுகத் அலி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் பத்மனாபன் முன்னிலை வகித்தார். கல்லூரியில் ஓராண்டு பி.எட்., படித்த 96 மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரியின் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் பெரியசாமி வாசித்தார். துணைவேந்தர் பத்மனாபன் பேசியதாவது: கல்வி பயின்றவர்களே சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை பெறுகின்றனர். அடிப்படை கல்வி ஒரு குழந்தையை ஒழுக்கம் உடையவனாக உருவாக்குகிறது. வாழ்வில் முன்னேற்றம் அடைந்து, புதிய சிந்தனை வளர்த்து வளம் பெறுவதற்கு உயர்கல்வி வழிகாட்டுகிறது. சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகளில், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது கல்வி வளர்ச்சி மட்டுமே. வரும் ஆண்டுகளில் நாடு முழுவதும் கட்டாயக்கல்வி திட்டத்தை அமலாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக, பல்கலை மானியக்குழு, இந்திய தேசிய ஆசிரியர் குழு இணைந்து ஆய்வு நடத்தியது. இதில், நாடு முழுவதும் எதிர்காலத்தில் பணிபுரிய ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டது. தற்போது, 50 லட்சம் ஆசிரியர்கள் நாடு முழுவதும் பணியில் உள்ளனர். ஆசிரியர் படிப்பு படித்தவர்கள், பணிபுரிபவர்களுக்கு சமுதாயத்தில் தக்க மதிப்புள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன், ஆசிரியராக நான் இருந்தபோது, கல்வி கற்பிக்க காரணியாக ஆசிரியராக ஒருவர் மட்டுமே இருந்தார். தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், கல்வி கற்பிக்கும் காரணிகளில் ஆசிரியரும் ஒருவர் என்று நிலை மாறிவிட்டது. பள்ளிக்கு மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் வரும் வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். நல்ல குணங்களால், நம்மை மாணவர்கள் மதிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். மனிதனை மனிதனாக ஆக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. இப்பணியில் மன அழுத்தம் இல்லை என பலரும் நினைக்கலாம்; மன அழுத்தம் இல்லாத பணி என எப்பணியும் கிடையாது. படித்தவர்கள் கட்டாயம் வேலை பெற தகுதி உடையவர்கள். ஆகவே, கல்வியை ஊக்குவிப்பதில் முழு ஈடுபாடு கட்ட வேண்டும்.இத்தகைய புனிதமான ஆசிரியர் பணியின்போது சில ஆசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் வன்முறையாக நடந்து கொள்வதாக செய்தித்தாள், "டிவி'களில் செய்தி வெளிவரும்போது, அதை கண்டு மனம் வேதனை அடைகிறது. அவ்வாறு இல்லாமல் நீங்கள் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். வேதனை இருப்பின், அதை குழந்தைகளிடத்தில் காட்டக்கூடாது, என்றார்.
விழாவில், "டெக்மா' கோவிந்தசாமி, கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழக பல்கலைகள் இடையே ஒப்பந்தம் : சென்னை பல்கலைக் கழகம் திட்டம்

http://img.dinamalar.com/data/large/large_117020.jpg

சென்னை : ""ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை இணைத்து ஆராய்ச்சி மேற்கொள்வது தொடர்பாக, மருத்துவம், சட்டம், வேளாண்மை, பொறியியல், கால்நடை மருத்துவம் ஆகிய, தமிழக பல்கலைக்கழகங்களுடன் சென்னை பல்கலை ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது,'' என, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.


சென்னை பல்கலைக்கழக சென்ட் கூட்டம் துணைவேந்தர் திருவாசகம் தலைமையில் நேற்று நடந்தது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் பாடப்பிரிவுகளுக்கு பல்கலை இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தியதற்கும், ஆண்டுதோறும் புதுப்பித்தல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியதற்கும் செனட் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


கூட்டத்தில் பேசிய துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழகம் பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ஆராய்ச்சி, மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றம் ஆகிய பணிகளில் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், நம்நாட்டிலேயே பல்வேறு வசதிகள் உள்ளன. அவற்றை நாம் முதலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள சட்டம், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் சென்னை பல்கலை ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம், சென்னை பல்கலை மாணவர்கள் இதர பல்கலைகளில் உள்ள வசதிகளையும், ஆராய்ச்சி உபகரணங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இதர பல்கலை மாணவர்கள் சென்னை பல்கலையில் 35 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட நானோ டெக்னாலஜி உபகரணங்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை இணைந்து, ஆராய்ச்சி மேற்கொள்ள உதவியாக இருக்கும். இது தொடர்பாக தமிழக பல்கலை துணைவேந்தர்களுடன் பேச உள்ளேன். இன்னும் ஒரு மாதத்தில் தமிழக பல்கலைகள் மற்றும் சென்னை பல்கலை இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். எதிர் காலத்தில் மற்ற பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளை, சென்னை பல்கலை மாணவர்கள் விருப்பப் பாடமாக தேர்வு செய்யவும் முடியும். சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனத்தில், தமிழக அரசு பிறப்பித்துள்ள "200 பாயின்ட் ரோஸ்டர்' முறை பின்பற்றப்படும். பல்கலையில் உள்ள ஒவ்வொரு துறையும் ஒரு தனிப்பிரிவாக கருதப்பட்டு, இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்படும். சென்னை பல்கலையில் ஒவ்வொரு ஆசிரியருக்கு, ஒரு மாணவராவது ஆராய்ச்சி உதவித்தொகை பெறும் வகையில் ஆராய்ச்சி உதவித்தொகையின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு திருவாசகம் தெரிவித்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 12-ந் தேதி பட்டமளிப்பு விழா: கவர்னர் பங்கேற்பு

மாத்தூர்: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் 27-ம் பட்டமளிப்பு விழா அரங்கில் வருகிற 12-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவிற்கு தமிழக கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்துகொண்டு பட்டம் வழங்குகிறார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றுகிறார். விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசுகிறார்.

விழாவில் துணைவேந்தர் கே. மீனா பதிவாளர் ராமசாமி, ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்

மன நலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: கலெக்டர்

கடலூர் : குழந்தைகளின் உடல் நலன் குறித்து தொண்டு நிறுவனங்கள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கலெக்டர் கேட்டுக் கொண்டார். கடலூர் புதுப்பாளையத்தில் தமிழக அரசின் நிதி உதவியுடன் ஒயாசீஸ் கருணா மன நலம் பாதிக் கப்பட்டோர்களுக்கான மறுவாழ்வு மையம் துவக்க விழா நடந்தது. ஒயாசீஸ் தொண்டு நிறுவன இயக்குனர் தவராஜ் வரவேற்றார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். கடலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், மனநல டாக்டர் சத்தியமூர்த்தி, வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம், என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் உட்பட பலர் பங்கேற் றனர்.


விழாவில் அரசு அங்கீகாரம் பெற்ற 6 மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சத்து 5 ஆயிரம் வீதம் 6.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கலெக் டர் சீத்தாராமன் பேசுகையில், "நாட்டில் இது போன்ற மையங்கள் இனி துவங்கப்படாமல் இருக்க மன, உடல் நலம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற சூழல் ஏற்படாமல் இருக்க சமூக பொறுப்பு மக்களிடையே ஏற்பட அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும். இந்த மையத்தில் உள்ள குழந்தைகள் மன நலம் பெற்று பூரண குணமடைய வேண்டும்' என பேசினார்.

கிராமப்புற மருத்துவமனையில் பணியாற்ற முன்வர வேண்டும் : மருத்துவர் வேண்டுகோள்

திருச்செங்கோடு: ""கிராமப்புற மாணவர்கள் உயர்ந்தால் நாடு வளம் பெறும். படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்ற முன் வரவேண்டும்,'' என, கே.எஸ்.ஆர்., கல்லூரியில் நடந்த விழாவில், மருத்துவ கல்வித்துறை இயக்குனர் கனகசபை பேசினார். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பல் மருத்துவக் கல்லூரி 2வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி நிறுவன தாளாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்புசெழியன் வரவேற்றார். துணைச் செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். முதல்வர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். மருத்துவ கல்வி இயக்குனர் கனகசபை பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கி பேசியதாவது:


குடும்ப உறவுகள் தான் இந்திய நாட்டின் மிகப்பெரிய பலம். 100 வயதிலும் படிக்கலாம். ஒருவருக்கு குணம் தான் முக்கியம். படிப்பு இரண்டாம் பட்சம் தான். ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் படித்து கொண்டே இருக்க வேண்டும். படித்து பட்டம் பெற 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும். சிறந்த மருத்துவர் என்ற பெயர் எடுக்க 100 சதவீதம் பெற வேண்டும். நம்மை நாடி வருபவர்களிடம் மென்மையாக பழக வேண்டும். மக்கள் மருத்துவர்களை கடவுளாக கருதுகின்றனர். காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். மருத்துவத் துறை சேவைத்துறை என்பதை கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும். சுதந்திரத்துக்கு முன் மனிதனின் சராசரி வயது 45ஆக இருந்தது. தற்போது 65 என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 85 வயது வரை வாழ்பவர்கள் அதிகரித்துள்ளனர்.


வரும் காலத்தில் 100 வயது என்பது சர்வசாதாரணமாகும் நிலை உள்ளது. எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாக வாழவேண்டும். 16 வயதில் இருதயநோய், 20 வயதில் சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற நோய்கள் வருகிறது. கனவுகள் நிறைவேறாத போது தொடர்ந்து முயற்சிக்காமல் இளைஞர்கள் தவறான முடிவை தேடுகின்றனர். நோய்களுக்கான மூலகாரணம் மனம் பாதிக்கப்படுவதுதான். மனதை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்பு சக்தி குறைந்தால்தான் பன்றிக்காய்ச்சல், சிக்குன் குன்யா போன்ற நோய்கள் நம்மை தாக்குகிறது. கிராமப்புற மாணவர்கள் உயர்ந்தால் நாடு வளம் பெறும். படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்ற முன் வரவேண்டும். அரசு அனைத்து கிராம மருத்துவமனைகளிலும் பல் மருத்துவ பிரிவு துவங்க உள்ளது. அதனால் அரசு வேலைகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு அரசு நிறைய வாய்ப்புகளை வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அன்புசெல்வன், முருகேஷ், சகுந்தலா, மணிமாறன், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய கண்டுபிடிப்பு: மாணவனுக்கு பாராட்டு

கரூர்: "மொபைல் டிடெக்டர்' கருவியை வடிவமைத்த பள்ளி மாணவனை, கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி பாராட்டினார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. கரூர் சின்ன ஆண்டாங்கோவில் தெருவை சேர்ந்த குணசேகர் மகன் வசந்தகுமார். கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவர் "மொபைல் டிடெக்டர்' என்னும் கருவியை வடிவமைத்து, சமீபத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தார். "மொபைல் டிடெக்டர்' கருவி முக்கிய கூட்டம் நடக்கும் இடத்தில் பொருத்திவிட்டால், எவராவது மொபைல் ஃபோன் இயக்கினால் சத்தம் எழுப்பி காண்பித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சம்மந்தப்பட்ட மொபைல் ஃபோன் எண்ணும் தெரியும் வகை வடிவமைத்திடவும் இயலும் எனவும் விளக்கப்பட்டது. மாணவர் குணசேகரை, கலெக்டர் உமாமகேஸ்வரி சால்வை அணிவித்து பாராட்டினார். கண்டுபிடிப்பை மேலும் பயனுள்ள வகையில் விரிவு செய்ய பொறியியல் கல்லூரிக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவித்தார். டி.ஆர்.ஓ., பிச்சையா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தசரத ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இளைஞர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் நாடு வலிமை பெறும்

காந்திகிராமம் : இளைஞர்கள் ஆற்றல், லேசர் கதிர்களை போன்ற வலிமை மிகுந்தது. இதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் குடும்பம், சமுதாயம் , தேசம் என அனைத்து தரப்பிற்கும் நன்மை ஏற்படும் என காந்திகிராம பல்கலை., பதிவாளர் (பொறுப்பு) சிவராமன் பேசினார்.காந்திகிராம பல்கலை., இடாரா மையத்தில் சமுதாய திட்டங்களின் செயலாக்கத்திற்கு இளைஞர்களின் திறனை மேம்படுத்துதல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. திட்ட அதிகாரி முத்துச்சாமி வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.


பயிற்சியை துவக்கி வைத்து பல்கலை., பதிவாளர்(பொறுப்பு) சிவராமன் பேசும்போது, "நமது நாட்டில் இளையோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. வல்லரசு என்ற லட்சியத்தை அடைவதற்கு இளைஞர்களின் கடின உழைப்பும் முயற்சியும் அவசியம். தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை இவற் றை வளர்த்து கொண்டு, குறிப்பிட்ட இலக்கை அடையவேண்டும் என்ற லட்சியத்துடன் இளைஞர்கள் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறமுடியும். இளைஞர்களின் ஆற்றல் லேசர் கதிர்களை போன்ற வலிமை மிகுந்தது. இதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் குடும்பம், சமுதாயம், தேசம் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் நன்மை ஏற்படும்' என்றார். இடாரா இயக்குநர் பாலுச்சாமி, செம்பட்டி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆனந்த், தொழில்நுட்ப வல்லுநர் பிரிட்டோ உட்பட பலர் பேசினர். ஆராய்ச்சி உதவியாளர் இங்கர்சால் நன்றி கூறினார்.

பொதுக் கடன் அட்டை திட்டம் மதுரை வங்கிகளில் துவக்கம்

மதுரை:மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் திட்டத்தின் கீழ் கணக்குகள் வைத்துள்ளோருக்கு "பொதுக் கடன் அட்டை திட்டம்' நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.வங்கியாளர்கள் கூட்டத்தில் இத்திட்டத்தை துவக்கி வைத்து கலெக்டர் காமராஜர் பேசியதாவது:மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் திட்டத்தின் கீழ் 4.80 லட்சம் பேருக்கு "0' வைப்புத் தொகை கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் பொதுக் கடன் அட்டை திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.இதை பயனாளிகள் தங்களுக்கு தேவைப்படும் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான முறையில் கடன்கள் வழங்கப்படும்.

இதற்கு சொத்து ஜாமீன் மற்றும் நபர் ஜாமீன் தேவையில்லை. மூன்று வருடங்களுக்கு அசலை திரும்ப செலுத்த வேண்டிய அவசியமில்லை. வட்டி மட்டும் செலுத்தினால் போதும். மாவட்டத்தில் உள்ள பல வங்கிகள் மூலம் 4600 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 8,402 பழுதடைந்த வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பழுதுபார்ப்பதற்கு இந்த திட்டத்தை குடியிருப்போர் பயன்படுத்தலாம், என்றார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சாமுவேல் இன்பதுரை, மகளிர் திட்ட அலுவலர் கிருஷ்ணம்மாள், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சங்கரநாராயணன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஜார்ஜ், முன்னோடி வங்கி மேலாளர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.

மாணவர் சேர்க்கை : அவகாசம் நீட்டிப்பு

சென்னை : அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய மாணவர் சேர்க்கை, நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய படிப்புகளின் 2010 - 11ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.எஸ்சி., (உளவியல், வழிகாட்டுதல் ஆலோசலை நல்குதல், கணிதம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை) எம்.பி.ஏ., - எம்.ஏ., (ஆங்கிலம், தமிழ், மகளிரியல், இசை, வணிகவியல், கணினி பயன்பாடு, கல்வியியல், வரலாறு, சமூகவியல், பொதுநிர்வாகம்) ஆகிய முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. பி.பி.ஏ., (வணிக மேலாண்மை), பி.ஏ., (இசை, சமூகவியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம், மகளிரியல்), பி.எஸ்சி., (உளவியல், கணிதம், ஹோட்டல் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம்), பி.காம்., - பி.சி.ஏ., மற்றும் முதுநிலை பட்டயப்படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, பல்கலையின் இயக்குனரை 04542-241921, 044-24347222, 24358216, 0452-2387345 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வியில் துணைத் தேர்வு

சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைத் தேர்வுக்கு, நவம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 633 கல்வியியல் கல்லூரிகளுக்கான பி.எட்., மற்றும் எம்.எட்., மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இம்மாதம் 27ம் தேதி வெளியானது. தேர்வில் தவறியவர்கள், டிசம்பரில் நடக்கவுள்ள துணைத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை, அவர்கள் பயின்ற கல்லூரிகளின் முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்லூரி முதல்வர்கள் வழியாக, நவம்பர் 9ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அபராதக் கட்டணத்துடன் அனுப்ப நவம்பர் 19ம் தேதி இறுதி நாள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ் ரீடிங் புரோகிராம் : ஒரே நேரத்தில் பலரை படிக்க வைக்க குஜராத் அரசு புதுமை நிகழ்ச்சி

ஆமதாபாத்: புத்தகம் படிக்கும் எண்ணத்தை வளர்க்கும் விதமாக ஒரு நாளில் ஒரே நேரத்தில் 50 லட்சம் பேரை படிக்க வைக்கும் புதுமை நிகழ்ச்சிக்கு குஜராத் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. முதல்வர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.


புதுமைத்திட்டங்களை புகுத்துவதில் நல்லதொரு பெயர் பெற்ற மோடிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சமீபத்திய பஞ்சாயத்து தேர்தல்கள் வெற்றிகள் அமைந்திருந்தன. 3 முறை முதல்வராக பதவியேற்றதில் இவரது அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சிப்பணிகளையும் செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


பொருளதார வளர்ச்சியும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இவரது ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் முக்கியமானவை வருமாறு:


கிரிஷி மகோத்சவ் ( விவசாய நிலங்கள் ஆய்வுப்பண்ணை), சிரஞ்சீவி யோஜனா ( குழந்தைகள் இறப்பை குறைக்க நலத்திட்டம் ) , ஜோதிகிராம் யோஜனா (மின்சாரம் வழங்கி இருள் இல்லாத கிராமங்கள் உருவாக்குதல் ), மற்றும் பெண்கல்விக்கு முக்கியத்துவம், பெண்குற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் திட்டம் என பல அடங்கும்.


இந்நிலையில் மக்கள் இடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு புதிய முயற்சி மேற்கொண்டிருக்கிறது, இந்த மாநில அரசு.


இதன் படி இன்று ஒரு மணி நேரம் அனைவரும் புத்தகமும் கையுமாக இருக்க மாஸ் ரீடிங் புரோகிராம் ( வஞ்சே குஜராத் - ரீட் குஜராத் என்ற பெயரில் ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பள்ளிகள், கல்லூரிகள், பார்க்குகள், பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே புத்தகங்கள், நாழிதழ்கள் விநியோகிக்கப்பட்டு படிக்க செய்ய வைக்கப்படுகிறது.


இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு சாதனையாக அமையும் என மாநில கல்வித்துறை முதன்மை செயலர் ஹஸ்முக்ஆதித்யா கூறியுள்ளார்.


மக்களிடம் படிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரூ.2 கோடி செலவில் நானோ செயற்கைக்கோள் : அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்குகிறது

சென்னை : ""அனுசாட் மைக்ரோ செயற்கைக்கோளை தொடர்ந்து, இரண்டு கோடி ரூபாய் செலவில் 10 கிலோ எடையுள்ள நானோ செயற்கைக்கோளை உருவாக்கும் முயற்சியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் கூறியதாவது: அண்ணா பல்கலையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை உருவாக்கப்படுகிறது. 30 கோடி ரூபாய் வைப்பு நிதி மூலம் இந்த உதவித்தொகை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம், ஆண்டுதோறும் இரண்டு கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் 45 மாணவர்களுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும்.

மூன்று ஆண்டுகளுக்கு 135 மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஆராய்ச்சி உதவித்தொகையை, மொத்தம் 250 மாணவர்களுக்கு வழங்கும் வகையில் அதிகரிக்க விரும்புகிறோம். தமிழகத்தில் உள்ள 474 பொறியியல் கல்லூரிகளில் ஐந்து லட்சத்து 20 ஆயிரம் படிக்கின்றனர். இக்கல்லூரிகளுக்கு 32 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுவர். கடந்த இரு ஆண்டுகளாக அண்ணா பல்கலையில், 820 பேர் பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா லிங்கன் பல்கலையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஐந்து மாணவர்கள் இரட்டை பிஎச்.டி.,பட்டம் பெற முடியும். நான்கு ஆண்டுகளில் அண்ணா பல்கலையில் ஒரு பிஎச்.டி., பட்டமும், நெப்ராஸ்கா லிங்கன் பல்கலையில் ஒரு பிஎச்.டி., பட்டமும் பெற முடியும்.

பிரான்சின் எகோல் சென்ட்ரல் நான்டஸ் கல்வி மையத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, நான்கு மாணவர்கள் இரட்டை எம்.இ., பட்டம் பெற முடியும். ஆறு ஆண்டு படிப்பில் அண்ணா பல்கலையில் பி.இ., - எம்.இ., பட்டத்தையும், பிரான்ஸ் கல்வி மையத்தில் டிப்ளமா, எம்.இ., பட்டத்தையும் மாணவர்கள் பெற முடியும். பிரான்ஸ் கல்வி மையத்தில் நமது மாணவர்கள் தங்கியிருக்கும் போது ஆகும் செலவை அக்கல்வி மையமே ஏற்றுக் கொள்ளும்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், ஐந்து கோடி ரூபாய் செலவில் 40 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட "அனுசாட்' மைக்ரோ செயற்கைக்கோள், இஸ்ரோ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, இரண்டு கோடி ரூபாய் செலவில் 10 கிலோ எடையுள்ள நானோ செயற்கைக்கோளை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ., அமைப்புகளுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., அமைப்புகளின் அனுமதி கிடைத்தவுடன் நானோ செயற்கைக்கோளை உருவாக்கும் பணிகள் துவங்கும். தகவல்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரிமாற இந்த நானோ செயற்கைக்கோள் உருவாக்கப்படவுள்ளது. இவ்வாறு மன்னர்ஜவகர் கூறினார்.

பேட்டியின் போது, அண்ணா பல்கலை பதிவாளர் சண்முகவேல், ஆராய்ச்சி மைய இயக்குனர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

எதிர்காலத்தில் "ரோபோ' பங்கு முக்கியமானதாக இருக்கும் : நடராஜன்

http://img.dinamalar.com/data/large/large_115870.jpg

ஆவடி : ""எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும், ரோபோக்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்,'' என, ராணுவ அமைச்சகத்தின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் நடராஜன் பேசினார். மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பாக, "ஸ்டூண்ட்ஸ் ரோபோ-2010' போட்டி துவக்க விழா, ஆவடி, போர் ஊர்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராணுவ அமைச்சக, முன்னாள் அறிவியல் ஆலோசகர் நடராஜன் பேசுகையில், "பாதுகாப்புத் துறையில் ஆட்கள் இல்லாமல் இயங்கும் போர் வாகனங்களுக்கு, ரோபோக்களின் பங்களிப்பு உதவும். எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் ரோபோக்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்' என்றார்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேஷ், போட்டியை துவக்கி வைத்து பேசுகையில், "மாணவர்களுக்கு, இதுபோன்ற போட்டிகள் வைப்பதன் மூலம், அவர்களது அறியவியல் தொழில்நுட்பத்தை, ராணுவத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக, பல்வேறு கல்லூரிகளுடன், நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறோம்' என்றார்.

விழாவில், சி.வி.ஆர்.டி.இ., இயக்குனர் சிவகுமார், கூடுல் இயக்குனர் ஜெயஸ்ரீ வரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சென்னை அண்ணா பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி., - எஸ்.ஆர்.எம்., பல்கலை உள்ளிட்ட, 14 கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்புகளை வைத்துள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை பரிசுகள் வழங்கப்படும்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் டிச.,க்குள் நிரப்ப நடவடிக்கை

விருதுநகர் : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால், ஆசிரியர் காலிப் பணியிடங்களை டிசம்பருக்குள் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின், புதிய பணி நியமனம் செய்ய முடியாது. இதனால், காலியாகவுள்ள 1,766 இடைநிலை ஆசிரியர் பணியிடம், 5,050 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர, 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 341 சத்துணவு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் மூலம், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தமிழாசிரியர்கள் 346 பேர், ஆங்கிலம் 385, கணிதம் 684, இயற்பியல் 452, வேதியியல் 456, தாவரவியல் 194, விலங்கியல் 194, வரலாறு 165, புவியியல் ஆசிரியர்கள் 17 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

விவசாயத்துறையில் புதிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அவசியம்: துணை ஜனாதிபதி பேச்சு

திண்டுக்கல் : ""இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டுள்ள விவசாயத்துறையில், புதிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அவசியம்'' என, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலை.,யின் 28 வது பட்டமளிப்பு விழா நடந்தது.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆற்றிய பட்டமளிப்பு உரை: மகாத்மா காந்தியின் "புதிய கல்வி' திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 1956 ல் இப்பல்கலை., உருவானது. கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இங்குள்ள கல்விமுறையை இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளது. 1941ல் ஜமீயா நகரில் அடிப்படை கல்வி குறித்த 2 வது தேசிய கருத்தரங்கம் நடந்தது. அதில் டாக்டர் ஜாகீர் உசேன் பேசுகையில், "பள்ளிகல்வி என்பது தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தின் சேவையை மையமாக கொண்டிருக்க வேண்டும்,'என்றார். காந்தி கிராம பல்கலை., இச்சேவையை தான் செய்கிறது. இக்கொள்கையை மாணவர்களாகிய நீங்கள் உங்கள் தொழில், வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டுள்ள விவசாயத்துறையில் புதிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அவசியம். வரும் ஐந்தாண்டு திட்டத்தில், விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தந்து, ஏழை மக்களின் வாழ்க்கை மேம்படவும், ஏழ்மையை ஒழிக்கும் வகையிலும் புதிய திட்டங்கள் தேவை. தரிசு நிலங்களை மேம்படுத்த கூடுதல் கவனமும், பண்ணை விவசாயத்திற்கு முக்கியத்துவமும் தர வேண்டும்.

விவசாய தொழில் நுட்ப வளர்ச்சிக்காக நாட்டின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதம் ஒதுக்க வேண்டும். விவசாய பல்கலைகள் ஆராய்ச்சி முறைகளில் புதிய உத்திகளை கையாள வேண்டும். தனியார் நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்களை பின்பற்றி, பருத்தி, மக்காச்சோளம், சூரியகாந்தி, நெல் உற்பத்தியில் சாதனை செய்துள்ளனர். விவசாயிகளால் வரவேற்கும் புதிய தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமி வரவேற்றார். பதிவாளர் எம். சிவராமன், அமைச்சர் ஐ. பெரியசாமி, சித்தன் எம்.பி., கலெக்டர் வள்ளலார், காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கவுசல்யா தேவி உட்பட பலர் பங்கேற்றனர். பாரம்பரிய விவசாயம் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் சென்னையை சேர்ந்த வி.பாலசுப்பிரமணியத்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 32 பேருக்கு டாக்டர் பட்டமும், 51 பேருக்கு தங்க பதக்கம் மற்றும் 1,131 பேருக்கு பட்டயம், இளங்கலை, முதுகலை பட்டங்கள் வழங்கப்பட்டன.

"புத்துயிர்' பெறும் ஐ.டி., நிறுவனங்கள்

புதுடில்லி : இந்திய ஐ.டி., நிறுவனங்களில் 13 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்தியாவில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன. ஐ.டி., ஊழியர்களில் சிலருக்கு சம்பள வெட்டும், பலருக்கு வேலைவாய்ப்பும் பறிபோனது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஐ.டி., துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆய்வு நடத்தியது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடந்த இந்த ஆய்வில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஐ.டி., துறை மீண்டும் புத்துயிர் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஜவுளிப் பொருட்கள், தோல், உலோகங்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆபரணப் பொருட்கள் சார்ந்த உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில், இதுவரை 13 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

"தமிழ், ஆங்கில பாடங்களை முழுமையாக வாசிக்க மாணவர்க்கு பயிற்சி அளிக்க வேண்டும்'

உடுமலை: "தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நடத்திய பிறகு மாணவர்களுக்கு அதனை முழுமையாக வாசிக்க பயிற்சி அளிக்க வேண்டும்,' என உடுமலையில் நடந்த தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில், கடந்த ஆண்டு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்தும், நடப்பு கல்வியாண்டில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது நடந்துள்ள காலாண்டுத்தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு, கூடுதல் மதிப்பெண் பெற்று மாணவர்களை வெற்றி பெற செய்வது குறித்து விளக்கப்பட்டது. பள்ளிகளில் யோகா பயிற்சி நடைபெறும் விவரம் குறித்து கேட்டறியப்பட்டதுடன், யோகா பயிற்சியினை தலைமையாசிரியர்கள் மேற்பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளி வளர் இளம் பருவம் கல்வித்திட்டத்தின் கீழ் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 16 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தி முடிக்க செயல்திட்டம் குறித்தும் கூறப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில், பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சி நடத்தி, அதற்குரிய செய்முறைப் பதிவேடுகள் மாணவர்களால் பாதுகாக்க வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளுக்கென தனியாக அறிவியல் ஆய்வகம் பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் பெறக்கூடிய அனைத்து அறிவியல் உபகரணங்களும் பள்ளியில் இருப்பு பதிவேட்டில் பதியப்படுவதுடன் பள்ளியின் ஆய்வகத்தில் செய்முறையில் அறிவியல் உபகரணங்கள் பயன் படுத்தப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில அகராதிகள் பயன்படுத்துவதற்கு தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆங்கில ஆசிரியர்கள் வகுப்பிற்கு சென்றவுடன் 5 நிமிடம் ஆங்கில அகராதி சார்பான வகுப்புகள் நடத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரை கணிதபாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் வாய்ப்பாட்டினை கற்றுக்கொடுக்க வேண்டும். 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு மணக்கணக்கு பயிற்சி உரிய முறையில் கற்பிக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நடத்திய பிறகு மாணவர்களுக்கு அதனை முழுமையாக வாசிக்க பயிற்சி அளிக்க வேண்டும். 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையில், கற்றல், கற்பித்தல் முறையும், 9ம் வகுப்பிற்கு ஏஎல்எம்., ப்ளஸ் கற்றல் கற்பித்தல் முறையையும் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் குறைந்தது வாரத்திற்கு 10 பாடவேளைகளில் வகுப்பு எடுக்க வேண்டும். தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் கலை மன்றங்களில் செயல்பாடுகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாதுகாக்கும் பொருட்டு தொன்மை மன்றங்கள் துவங்குதல் குறித்து விளக்கப்பட்டது. பள்ளிகளில் கட்டடம் விவரம், இலவச சைக்கிள் தேவைப்பட்டியல் அனுப்பப்பட்டது.

கலை பண்பாட்டுத்துறை தமிழிசை மூவர் விழா

கரூர்: கரூர் நாரதகான சபாவில் கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் அருணாச்சல கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரை கவுரவித்து தமிழிசை மூவர் விழா நடந்தது.கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி, கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் மணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.கரூர் மாவட்ட கலைமன்றம் சார்பில் 2008-09 மற்றும் 2009-10 ஆகிய இரு ஆண்டுக்களுக்கான "கலை இளமணி' விருது அபிமித்ரா (பரதநாட்டியம்), ஸ்வேதாசரண் (பரதநாட்டியம்), "கலைவளர்மணி' விருது அதிஷ்டபாலன் (பரதநாட்டியம்), பாண்டியம்மாள் (ஓவியம்), "கலைச்சுடர்மணி' விருது சின்னதுரை (ஒயிலாட்டம்), அகிலாதேவி (பரதநாட்டிய ஆசிரியர்), "கலைநன்மணி' விருது ஞானசேகரன் (நாடகம்), ஜெகநாதன் (இசை நாடக நடிகர்), "கலைமுதுமணி' விருது மருதமுத்து (நாதசுரம்), சந்தானம் (கிளாரிநெட்) ஆகிய பத்து பேருக்கு வழங்கப்பட்டது.


கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது: இந்த விழா தமிழிசை மூவர்களான அருணாச்சல கவியராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் விழா. தமிழக பாரம்பரியம், கலாச்சாரம், தமிழிசையோடு கலந்துள்ளது. இந்த தமிழிசை வளர்ப்பதற்கு அடித்தளமாக இருந்த மூவருக்கும் விழா எடுத்து சிறப்பிக்கப்படுகிறது.



இன்றைய தலைமுறையினர் தமிழிசை மூவரை அறிந்து கொள்வதற்காகவும், அதன்மூலம் பல்வேறு கலைஞர்களின் தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் இந்த விழா இரண்டு நாள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளிடையே இந்த கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களது திறமைகள் வெளிக்கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலைவிருது பெற்றுள்ள பெரியோர், இளைஞர், குழந்தைகள் மேலும் தங்களது கலைக்கு புகழ் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கலைபண்பாட்டுத்துறை கமிஷனர் மணி பேசுகையில்,"" தமிழிசை மூவருக்கும் விழா எடுக்கும் இவ்வேளையில், அவர்கள் விட்டுச்சென்ற இசையை இளைய தலைமுறையினர் காக்க வேண்டும். அரசு நலிந்த கலைஞர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. மேலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு தனிவாரியம் அமைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறது. தமிழிசையை வளர்க்க அரசு பெருமுயற்சி எடுத்து வருகிறது,'' என்றார்.


கிருஷ்ணராயபுரம் எம்.எல். ஏ., காமராஜ், திருச்சி ம ண்டல கலை பண்பாட்டு மை ய உதவி இயக்குனர் குணசேகரன் வாழ் த்தி பேசினர். கரூர் அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் தேவிகாபூரணி நன்றி கூறினார்.முன்னதாக, கரூர் அரசு இசை ப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை நடந்தது. தொடர்ந்து தருமபுரம் ஞானபிரகாசம் மற்றும் குடந்தை வேதகீதாலட்சுமணன் குழுவினரின் தேவார இசையும், ஸ்ரீநிதி குழுவினரின் வீணை இசை, காஷ்யப் மகேஷ் குழுவினரின் தமிழிசை, ஷேக்மெகபூப், சுபானி, காலீசாபீ சுபானி சிறப்பு நாதஸ்வரம், கோவிலூர் கல்யாணசுந்தரம், தாராபுரம் விக்னேஷ் சிறப்பு தவில் நிகழ்ச்சி நடந்தது.

புதிய கண்டுபிடிப்பைவரவேற்கும் "நிப்ட் டீ'

திருப்பூர்:தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்க, "நிப்ட் டீ' கல்லூரியில் திட்ட வடிவமைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற புதிய கண்டுபிடிப்புகள் வரவேற்கப்படுகின்றன."நிப்ட் டீ' கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கை:குறு, சிறு மற்றும் மத்திய தொழில் அமைச்சகம், திட்ட வடிவமைப்பு மையம் என்ற புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார்ந்த ஆக்கப்பூர்வமான புதிய திட்டத்துக்கு வடிவம் அளித்தல், மக்களிடம் வர்த்தகப்படுத்துவது இதன் முக்கிய குறிக்கோள். நாடு முழுவதும் 29 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் கோவை வேளாண் பல்கலை மற்றும் திருப்பூர் நிப்ட் டீ கல்லூரி என இரண்டு மையங்கள்.பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோரிடம் இருந்து பின்னலாடை துறையில் ஆக்கப்பூர்வமான புதிய கண்டுபிடிப்புகள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய திட்டம், "நிப்ட் டீ புதிய பின்னலாடை தொழில்நுட்ப வடிவமைப்பு மையம்' என்ற பெயரின் கீழ் கொண்டு வரப்படுகிறது. பின்னலாடை தொழில்முனைவோர், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை நிபுணர்களை கொண்டு, பிரத்யேக செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.கண்டுபிடிப்புகளை பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்களுக்கு, கல்லூரி முதல்வரை அணுக வேண்டும். அல்லது 0421 - 2374 200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தை தவிர்க்க, எஸ்.பி., அறிவுரை:காவல் நிலையங்களில் "மணக்கிறது' தமிழ்

திருப்பூர்: "இயன்றவரை தூய தமிழில் பேசுங்கள்' என, திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு எஸ்.பி., அருண் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, கட்டுப்பாடு அறையில் இருந்து, போலீஸ் ஸ்டேஷன்கள் வரை போலீசார் தூய தமிழில் பேச ஆரம்பித்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷன்களில், பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. வழக்குகள் தொடர்பாகவும், வழக்குப்பதிவு குறித்தும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்த மைக் அறிவிப்புகளிலும், 90 சதவீதம் ஆங்கில வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகளின் உத்தரவை தெரிவிக்கும்போதும், மற்ற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல்களை பரிமாறும்போதும் ஆங்கிலச் சொற்களையே போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கு மண்டல காவல் துறையில், கூடுமானவரை ஆங்கிலத்தை தவிர்த்து தூய தமிழில் பேசுமாறு, ஐ.ஜி., சிவனாண்டி உத்தரவிட்டுள்ளார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில், திருப்பூர் எஸ்.பி., அருண், போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுமானவரை போலீசார் தூய தமிழில் பேசுமாறு அறிவுத்தியுள்ளார். கடந்த இரு நாட்களாக, போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார், தூய தமிழில் பேசி வருகின்றனர். திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து, தூய தமிழில் பேசுவது துவங்கியுள்ளது. மைக்கில், "வடக்கு காவல் நிலையம், தொடர்பு கொள்ளுங்கள்... கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசு கிறோம்.... கண்காணிப்பாளர் உத்தரவு, துணை கண்காணிப்பாளர் அழைக்
கிறார். அலைபேசியில், ஆய்வாளரை தொடர்பு கொள்ளுங்கள்; விபரத்தை முழுமையாக தெரிந்து கொண்டீர்களா, இத்தகவலை உடனடியாக தங்கள் உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது,' என்பது போன்ற உரையாடல்களில் போலீசாருடனும், போலீஸ் ஸ்டேஷன்களுடனும் போலீசார் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். இதுமட்டுமின்றி, மொபைல் போன்களில் பேசும் போலீசாரும், நேரில் சந்தித்துக் கொள்ளும் போலீசாரும்,""வணக்கம் ஐயா, ஓய்வாக இருக்கிறீர்களா? பணியில் உள்ளீர்களா, தகவலை தெரிந்து கொண்டீர்களா; வழக்கு தொடர்பான விசாரணையில் என்ன தகவல் உள்ளது,'' என ஒருவருக்கொருவர், தூய தமிழில் பேசிக் கொள்வது, வித்தியாசமாக உள்ளது. சுருக்கமாக, ஆங்கில வார்த்தை
களில் இதுவரை தகவல்களை மைக்குகளில் உடனுக்குடன் பரிமாறிக் கொண்ட போலீசார் சிலர், தூய தமிழில் பேச திணறுகின்றனர். தூய தமிழில் வார்த்தைகளின் நீளம் அதிகமாக இருப்பதால் ஒரு தகவலை சொல்லி முடிக்கவே, சில நிமிடங்கள் கூடுதலாக ஆகிறது. அனுபவம் வாய்ந்த போலீசார், ஆங்கில வார்த்தைக்குரிய தமிழ் வார்த்தைகளை உடனுக்குடன் தெரிவித்து விடுகின்றனர். பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளே பேசி வந்த போலீசார், தமிழ் வார்த்தைகள் தெரியாமல் சில விநாடிகள் திணறி, பின் சமாளித்து, கொச்சை தமிழில் பதில் கூறுகின்றனர். இன்னும் சிலர், ஆங்கிலத்திலேயே கூறி முடிக்கின்றனர். போலீசார் கூறுகையில், "தூய தமிழில் பேசுவது இனிமையாக உள்ளது; ஒருவர் தூய தமிழில் பேசும்போது, எதிரில் பதில் அளிப்பவரும் எளிதில் தூய தமிழுக்கு மாறி விடுகிறார். ஆங்கிலத்தில் மிக பரிச்சயமான வார்த்தைகளை, தமிழில் பேசுவது சிரமம் என்றாலும், நாளடைவில் இது பழக்கமாகி விடும்,' என்றனர். தூய தமிழில் பேசுவதை உத்தரவாக இல்லாமல், இயன்றவரை பேச முயற்சியுங்கள் என்று மட்டுமே போலீசாருக்கு எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார். எனினும், போலீசார் மிகுந்த ஆர்வத்துடன் தூய தமிழில் பேசி வருவதால், காவல் நிலையங்களில் ஒலிக்கிறது தமிழ்.

விட்டுக்கொடுத்தால் வாழ்வில் வெற்றி

பெரம்பலூர்: ""விட்டு கொடுத்து வாழ்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்,'' என தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தெரிவித்தார். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில், "வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கம் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. கருத்தரங்கத்துக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, சேகர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது: எய்ட்ஸ் நோயாளிகள் அதிகளவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளனர். இதற்கு காரணம் அங்கு லாரி டிரைவர், கூலித்தொழிலாளிகள் அதிகம். மனைவிகளைப் பிரிந்து வாழ்வதால் இதுபோன்ற நோய்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். எய்ட்ஸ் நோயால் குடும்பத்தலைவர் இறந்துவிட்டால் அந்த குடும்பமே பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. மனிதர்களாகிய நாம் பகுத்தறிவை பயன்படுத்தி எந்த செயலையும் செய்ய வேண்டும். தமிழர் பண்பாடுகளை மீறக்கூடாது. உங்களது எண்ணங்கள் உயர்ந்த எண்ணங்களாக இருக்க வேண்டும்.
எண்ணங்கள் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். விட்டு கொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் கெட்டுப்போவதில்லை. எனவே, விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். பெண்களுக்கு இளகிய மனசு இருக்க வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தார்போல தங்களை மாற்றிக்கொண்டால் வாழ்வில் உயர்வு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், டாக்டர் இளங்கோவன், ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட மேலாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் புனிதலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர் ராணி நன்றி கூறினார்.

இலவச ஓவியப்போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இலவச ஓவியப்போட்டி நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட் டெக்னாலஜி, கலை வளர்ச்சிக்கான அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, "ஒவ்வொரு மாணவனுக்கும் ஓவியம்' திட்டத்தின் கீழ் இலவச ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 2,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் இலவச ஓவிய போட்டியில் பங்கு பெறலாம். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு "எனது வீடும் தோட்டமும்' என்ற தலைப்பிலும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு "கேலிச்சித்திரங்கள்' என்ற தலைப்பிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு "காடுகளில் விலங்குகளில்' என்ற தலைப்பிலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு "புவி வெப்பமயமாதல்' என்ற தலைப்பிலும் ஓவியம் வரைய வேண்டும்.


ஓவிய போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 25 முதல் 50 மாணவர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர் "செயலாளர், இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஆர்ட் டெக்னாலஜி, 12/8, ஏரித்தெரு, எஸ்.பி.எஸ்., மருத்துவமனை எதிரில், ஓசூர்' என்ற முகவரிக்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். சந்தேகத்துக்கு 94887 62718 என்ற மொபைல்ஃபோனை தொடர்பு கொள்ளவும். இத்தகவலை இந்தியன் இன்ஸ்டிடியூட் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

"கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிட்டும்'

வேலூர்: ""விளையாட்டு வீரர்களிடம் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைக்கும்,'' என கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரன் கூறினார்.தென் மண்டல பல்கலைக்கழகளுக்கு இடையேயான ஆண்களுக்கான கால்பந்து விளையாட்டு போட்டிகள் வேலூர் வி.ஐ.டி., பல்கலையில் கடந்த 18ம் தேதி முதல் நடந்தது வந்தது.இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 57 பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆறு நாட்கள் நடந்த இப்போட்டியின் நிறைவு விழாவும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் நடந்தது.


வி.ஐ.டி., துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சம்பத், இணை துணை வேந்தர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் விக்டர் தன்ராஜ் வரவேற்றார், கூடுதல் டி.ஜி.பி., (நிர்வாகம்) ராஜேந்திரன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுக்கோப்பையை வழங்கி பேசியதாவது:தேன் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்து முடிந்துள்ள கால்பந்து போட்டியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.சமீபத்தில் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் யாரும் எதிர்பாராத அளவில் பதக்கங்களை நம் வீரர்கள் குவித்துள்ளனர். கிரிக்கெட் போட்டியில் மட்டுமே முன்னணியில் இருந்து வந்த நிலையில் இப்போது தடகள போட்டியும் இந்த பட்டியலில் வந்துள்ளது.


வேலூர் வி.ஐ.டி.,யில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ள நான்கு அணிகளும் அகில இந்திய கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளன. அதிலும் வெற்றி பெற இப்போதே பயிற்சி செய்ய வேண்டும். விளையாட்டில் வெற்றி தோல்விகள் சகஜம், தோல்வியை மறந்து வெற்றியை ருசிக்க வீரர்கள் தயாராக வேண்டும்.விளையாட்டு வீரர்களிடம் கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் வெற்றி கிடைக்கும். விளையாட்டு துறையில் இந்தியா முன்னேறி வரும் வேளையில் இன்னும் அதிக அளவில் வீரர்கள் தயாராக வேண்டும், காவல் துறையில் விளையாட்டு வீரர்களுக்காக 5 சதவீத இட ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி முன்னேற வழி செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்.தென் மண்டல கால்பந்து போட்டியில் முதல் பரிசுக்கான கோப்பையை சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் வென்றது. இரண்டாவது பரிசை கேரளா மாநிலம் கன்னூர் பல்கலைக்கழகமும், மூன்றாம் பரிசை கேரளா பல்கலைக்கழகமும், நான்காம் பரிசை அண்ணா பல்கலைக்கழகமும் பெற்றன.வெற்றி பெற்ற இந்த நான்கு அணி வீரர்களும் அடுத்த மாதம் மத்திய பிரதேசம் ஜபல்பூரில் நடக்க உள்ள அகில இந்திய கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

எதிர்கால இந்தியா ஆசிரியர் கையில் உள்ளது

திருச்செங்கோடு ""எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் உள்ளது,'' என, பள்ளி விழாவில், எம்.பி., செல்வகணபதி பேசினார். திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தொன்மை பாதுகாப்பு மன்றத்துவக்க விழா நடந்தது. சி.இ.ஓ., மல்லிகா தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கண்ணையன் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் முரசொலி முத்து, உறுப்பினர் தாண்டவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


எம்.பி., செல்வகணபதி மன்றத்தை துவக்கி வைத்து பேசியதாவது: அரசு பள்ளியில் படிப்பதை தாழ்வாக கருதக் கூடாது. உயர்ந்த நிலையில் உள்ள தலைவர்கள், மேதைகள், அறிஞர்கள், அதிகாரிகள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான். குதிரைகளை குதிரைகளாகவே உருவாக்கும் வேலையைத்தான் தனியார் பள்ளிகள் செய்கின்றன. குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை சிறந்த திறமையாளர்களாக உருவாக்கும் பணியை அரசு பள்ளிகள் செய்கின்றன. அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்குதான் வாழ்க்கை மற்றும் வறுமை தெரியும். போர் குணமும், போராட்ட உணர்வும் மிகுந்த மாணவர்கள் அரசு பள்ளிகளில்தான் உருவாகின்றனர்.


குழந்தைகளை சுதந்திரமாக வளர விட வேண்டும். கட்டுப்பாடுகளை விதித்து கசக்கி பிழியக் கூடாது. மனப்பாடம் செய்வதை விட புரிந்து படிக்கும் திறனை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். வளரும் சூழ்நிலை வாழ்க்கை பாதையை மாற்றிவிடும். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களை ரோபோக்களை போல் கையாளும் நிலை தான் நடைமுறையில் உள்ளது. எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கைகளில்தான் உள்ளது. தாழ்வு மனப்பான்மை இல்லாமல், திட்டமிட்டு கடுமையாக உழைத்தால் எதிலும் வெற்றி பெறலாம். நான் படித்த பள்ளியில் 500 பேர் அமரும் வகையில் கலையரங்கம் கட்ட எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, ஒன்றரை ஆண்டுகளுக்குள் கட்டித்தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தலைமையாசிரியர் கண்ணையன், ஆசிரியர்கள் செந்தில்குமார், தமிழரசி, பாக்யலட்சுமி, செல்ரவாசு, கனகராஜ், ராஜேஸ்வரி, தமிழ்மணி ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

உலக அளவிலான கராத்தே போட்டி தமிழக வீரர்கள் பங்கேற்பு

சேலம்: செர்பியாவில் உள்ள பெல்கிரேடில் 20வது உலக சீனியர் கராத்தே போட்டி நேற்று துவங்கியது. இதில் அகில இந்திய கராத்தே சம்மேளன தலைவர் சென்சாய் கராத்தே தியாகராஜன் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. அகில இந்திய ரியோசின்கான் சிட்டோரியோ கராத்தே பள்ளியைச் சேர்ந்த ஆந்திரா கீர்த்தன், ஒரிஸா வெலினா வாலன்டினா ஆகியோர் பங்கேற்கின்றனர். உலக கராத்தே போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் விவரம் : ஆண்கள்: அம்பர்சிங் பரத்வாஜ் (சட்டீஷ்கர்), சவுரவ் சிந்தியா, விகாஷ் சர்மா (மத்திய பிரதேசம்), சபரி கார்த்திக் (தமிழ்நாடு), சுனில்ரதி (ஹரியானா), கீர்த்தன் (ஆந்திரா), சபவாலா, படகாலா, மேத்தா(மஹாராஷ்டிரா). வீராங்கனைகள் : சுமித்ரா (தமிழ்நாடு), வெலினா வாலன்டினா(ஒரிஸா), லின்சா பென்னி (மேகாலயா), சிமிபட்டா (பஞ்சாப்), சுரேவ்(ஆந்திரா), காட்போலே, ஜலால் நடாலியா ராய்மொனாலி( மஹாராஷ்டிரா). இந்திய அணி மேலாளராக பரத்சர்மா (டில்லி), பயிற்சியாளர்களாக கனகராஜ் (தமிழ்நாடு), கபாடியா (மஹாராஷ்டிரா) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவலை இந்திய ரியோசின்கான் சிட்டோரியோ மாஸ்டர் கலைமணி, சேலம் மாவட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் செந்தில் ஆகியோர் தெரிவித்தனர்.

சர்க்கரை நோய்க்கு புதிய மருந்து மருத்துவக் கருத்தரங்கில் தகவல்

கம்பம்: சர்க்கரை நோயாளிக்கு சாப்பிடும் போது மட்டும் கொடுப்பதற்கு புதிய மருந்து ஒன்று இருப்பதாக மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்க முல்லைப்பெரியாறு கிளை சார்பில் மருத்துவ கருத்தரங்கு கம்பத்தில் நடந்தது. கிளை தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் மணிமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "சர்க்கரை நோய்க்கு புதிய சிகிச்சை முறைகள்' என்ற தலைப்பில் மதுரை சர்க்கரை நோய் டாக்டர் கோவிந்தராஜ் பேசியதாவது: இந்தியாவில் 5 பேர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருந்து, பயிற்சி, உணவு கட்டுப்பாடு, விழிப்புணர்வு, சர்க்கரையின் அளவை அடிக்கடி கண்காணித்தல் என்ற அடிப்படையில் சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நோய்க்கு "புரோமே கிருப்டின்' என்ற புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் கடைகளில் கிடைக்கும். தற்போது "விட்டா கிளிப்டின்' என்ற மருந்து வரப்பிரசாதமாகும். உணவு சாப்பிடும் போது மட்டும் இந்த மருந்து சாப்பிட்டால் போதும். பிற நேரங்களில் தேவையில்லை என்றார். சக கிளை பொருளாளர் அக்னிராஜ் நன்றி கூறினார்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களக்கு சிகிச்சை "நலமான தமிழக' திட்டம் நவ.1ல் துவக்கம்

திண்டுக்கல்: கிராமங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்க மார்க் வழங்கும் "நலமான தமிழகம்' திட்டம் நவ.1ல் துவங்குகிறது. தமிழக கிராமப்புறங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை, இருதயம், ரத்த அழுத்தம் ஆகியவற்றை அறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு "நலமான தமிழகம்' என பெயரிடப்பட்டுள்ளது. வரும் நவ.1 முதல் கிராமங்களில் பள்ளிகள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நூலகங்கள், பஞ்சாயத்து அலுவலகங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடல் ரீதியாக பரிசோதனை நடக்கிறது. வயது, இடுப்பளவு, உடல் எடை, உயரம், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, புகைபிடித்தல், மது குடித்தல், போதை பொருள் பழக்கம் உள்ளதா, பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளதா, சம்பந்தப்பட்டவர் பார்க்கும் வேலை கடினமானதா, எளிதானதா என்பது குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. பின்னர் இதற்கு மார்க் வழங்கப்படும். நூற்றுக்கு 70 மார்க் எடுத்தவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், 30 மார்க் எடுத்தவர்கள் நோயாளிகளாகவும் கருதப்படுவர். 30 மார்க் எடுத்தவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி: தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், கிராமநல தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு நோயாளிகளை கண்டுபிடிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 50 வீடுகளுக்கு ஒரு கிராம நல தன்னார்வ தொண்டர் நியமிக்கப்படுவார். இவர்கள் 50 வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை கண்காணித்து சிகிச்சை அளிப்பர். இதுதொடர்பான முகாம் வரும் 1ல் துவங்கி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடக்கிறது.

வயதானவரின் அனுபவம், அறிவுரை இளம் சந்ததியினருக்கு அவசியம்

திருச்சி: ""வயதானவர்களின் அனுபவம், அறிவுரை வருங்கால இளம் சந்ததியினருக்கு மிகவும் அவசியம்,'' என்று திருச்சியில் நடந்த உலக முதியோர் தின விழாவில் கலெக்டர் மகேசன் காசிராஜன் பேசினார். திருச்சி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் உலக முதியோர் தின விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் லட்சுமி வரவேற்றார். புங்கனூரைச் சேர்ந்த 108 வயது மூதாட்டி அழகம்மாளுக்கு பொன்னாடை அணிவித்து, "நாட்டின் வளர்ச்சிக்கு முதியோர்களின் பங்கு' எனும் தலைப்பில் நடந்த கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி கலெக்டர் மகேசன் காசிராஜன் பேசியதாவது: மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 வயதாக உள்ளது. மருத்துவ வசதி, மருத்துவமனை, சிறப்பான சுற்றுச்சூழல் போன்றவற்றால் தற்போது மனிதர்களின் சராசரி வயது 70 ஆக உள்ளது.


பல ஆண்டுக்கு முன் சர்க்கரை நோய் ஏற்பட்டது என்றால் சரியான மருத்துவ சிகிச்சை இன்றி ஏராளமானோர் இறக்கும் சூழ்நிலை இருந்தது. இப்போது மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளால் சர்க்கரை நோயால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பல குடும்பத்தில் பிள்ளைகள் பெற்றோரை தனியாக விட்டுவிட்டு சம்பாதிப்பதற்காக வெளியூர், வெளிநாட்டுக்கு சென்றுவிடுகின்றனர். பெற்றோர் தனிமையிலும், முதியோர் இல்லத்திலும் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நமது பாரம்பரியமான கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இதனால் சிதைந்து வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. வயதானவர்களின் அனுபவம், அறிவுரை வருங்கால இளம் சந்ததியினருக்கு மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார். சமூகநல வாரிய உறுப்பினர் செல்வி கிரேஸ் ஜார்ஜ், சப்போர்ட் தொண்டு நிறுவனத்தின் செயலர் தர்மராஜா, மூத்த குடிமக்களுக்கான மாவட்ட குழு உறுப்பினர் செல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் விஜயரெங்கன் நன்றி கூறினார்.

இயற்கையை சீரழித்து விடக்கூடாது பெரியார் பல்கலை துணை வேந்தர்

திருச்செங்கோடு: ""நேனோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ என்ஜினியரிங் துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்,'' என, விவேகானந்தா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பெரியார் பல்கலை துணை வேந்தர் முத்துச்செழியன் பேசினார். திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.கல்வி நிறுவன தாளாளர் கருணாநிதி தலைமை வகித்தார். முதல்வர் முருகேசன் வரவேற்றார். முதல்வர்கள் ராஜேந்திரன், மவுலாதேவி, சாந்தகுமாரி, கலாவதி, நிர்வாக அதிகாரி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் முத்துச்செழியன், பல்கலை அளவில் 17 தங்கப்பதக்கம் பெற்ற மாணவியர் உட்பட 3,100 பேருக்கு பட்டச்சான்று வழங்கி பேசியதாவது: கற்றுக்கொள்ளுதல் கல்லூரியோடு முடிந்து போவதில்லை. வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும். அறிவுள்ளவர்களை தான் சமுதாயம் மதிக்கும். பலவிதமான கனவுகளை சுமந்து கொண்டு கல்லூரியை விட்டு வெளியேறுபவர்கள் அந்தக் கனவு நிறைவேற வேண்டும் என்ற உறுதியோடு உழைத்தால் நிச்சயமாக கனவு நிறைவேறும். உங்களை நோக்கி வரும் சவால்களை எதிர்கொண்டு உழைக்க வேண்டும். பொருளாதாரத்தில் 9 சதவீத வளர்ச்சியடைந்துள்ள நம் நாட்டில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வருவாயை பெருக்குவதற்காக இயற்கையை சீரழித்து விடக் கூடாது. மாறிவரும் பருவநிலை மாற்றங்களுக்கு புவி வெப்பமயமாதல் காரணம் என்பதை உணர்ந்து, சமுதாயம் பாதிக்காத வகையில் தொழில் வளர்ச்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். விவசாயம், தொழில், உள்கட்டமைப்பு போன்றவற்றில் நம் நாடு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. உலகமயமாக்கல் போட்டியில், இந்தியா வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திறன் உள்ளதாக வளர்ந்துள்ளது. அறிவுத்திறன், தகுதியுள்ள உழைப்பாளிகள், நிறைந்திருப்பதால்தான் இந்தியா வளர்ச்சிபெற்று வருகிறது. மாணவர்களின் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்த வேண்டும். நேனோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ என்ஜினியரிங் துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள கல்லூரிகளும், பல்கலையும் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு பயிற்சி : பாரதிதாசன் பல்கலையில் மையம்

திருச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த, பாரதிதாசன் பல்கலை திருச்சி காஜாமலை வளாகத்தில் உள்ளடக்க கல்வி மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


பல்கலை பதிவாளர் ராமசாமி வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டத்தை செயல்படுத்துகிறார். அதன்படி, கடந்த மாதம் 24ம் தேதி நடந்த பாரதிதாசன் பல்கலை ஆட்சிக்குழு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த, காஜாமலை வளாகத்தில் உள்ளடக்க கல்வி மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.


மையத்தில், மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு பயிற்சி வழங்கப்படும். மையத்துக்கான புதிய கட்டிடத்துக்கு, "சிதார் வெசஸல்ஸ்' நிறுவனத் தலைவர் சுப்புராஜ், 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்குகிறார். சமுதாயத்தில் ஆயிரக்கணக்கில் மாற்றுத்திறனாளிகளாக உள்ள செவிப்புலன் இழந்தோர், பார்வைத்திறன் இழந்தோர், உறுப்புக்குறைபாடு உடையோர், மனநலம் குன்றியோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியும், பயிற்சியும் வழங்குவது அவசியம்.


சமுதாய புனரமைப்பு பணியின் ஒரு அங்கமாக மாற்றுத் திறனாளிக்கென்று வடிவமைக்கப்பட்ட, கம்ப்யூட்டருடன் இணைந்த கருவிகளை பயன்படுத்தி அவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணி மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தும் பயிற்சி அளிக்கப்படும். இப்பணியை கண்காணிப்பதற்கும், மேம்படுத்தல் ஆலோசனையை வழங்குவதற்கும் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும்.

ஆசிரியர்கள் நாள்தோறும் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளணும்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை கல்வியாளர் கல்லூரி சார்பில், கல்லூரி மற்றும் பல்கலை வேதியியல் துறை பேராசிரியருக்கான 21 நாள் புத்தாக்க பயிற்சி நிறைவுவிழா நேற்று நடந்தது.கல்வியாளர் கல்லூரி இயக்குனர் சிங்காரவேல் வரவேற்றார். பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் வேணுவானலிங்கம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர் சங்கர் பேசுகையில், ""புத்தாக்க பயிற்சிக்கு வருபவர் தங்களது அனுபவம், திறமைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். வேதியியல் துறையால் உருவாக்கப்பட்ட ரசாயன உரம் விவசாயம் வளர பயன்பட்டதோ, இல்லையோ. மஹாராஷ்டிரா உள்பட பல பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. விஞ்ஞானிகளுக்கு சமூக சிந்தனை வேண்டும். மண், நீர், மலை, காடு இவை நான்கும் நாட்டின் அரண் போன்றவை. ஆனால், விஞ்ஞான வளர்ச்சியால் அவை இன்று மாசுபட்டு அழிந்து வருகின்றன,'' என்றார்.


சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவன, "ஆர்கானிக்' (கரிம) வேதியியல் விஞ்ஞானி சர்மா பேசியதாவது:மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர் பணி அறப்பணி. நடப்பாண்டு வேதியியல் துறைக்கு மூன்று நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.ஹைதராபாத் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இரண்டு விஷயங்கள் குறித்து கவலைப்பட்டார். ஒன்று குழந்தைகள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை எப்படி தூண்டுவது; மற்றொன்று பள்ளிகளில் ஆய்வகங்களை எப்படி கொண்டு செல்வது.எம்.எஸ்.சி., படித்த மாணவர்கள் "தியரி'யில் கெட்டிக்காரர்களாக உள்ளனர். ஆனால், ஆய்வில் கோட்டை விடுகின்றனர். ஆய்வு செய்வதில் திறமை குறைவாக உள்ளனர். இதற்கு போதிய ஆய்வகம் இல்லாததே காரணம். சீனா, ஜப்பானை காட்டிலும் இந்தியாவில் பல்கலைக்கழகம் மிக குறைவு. பத்து லட்சம் சீனர்களில் 900 பேர் ஆய்வாளர்களாக உள்ளனர்.வரும் 2030ம் ஆண்டில் இந்தியா சிறந்த இடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ஆனால், சர்வதேச அளவில் 100 இடங்களில் இடம்பெற்றுள்ள பல்கலை பெயர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு பல்கலை கூட இடம் பெறவில்லை. ஆசிரியர்கள் நாள்தோறும் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

"வாழ்க்கைக்கு அறிவியல், கலை அவசியம்'

திருச்சி: திருச்சி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் "காஸ்கா ஃபேர் 2010' என்ற தலைப்பில் நடந்த அறிவியல் கண்காட்சி நிறைவுவிழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழச்சி தங்கபாண்டியன் மாணவ, மாணவியருக்கு பரிசளித்து பேசியதாவது:அறிவியல் வளர்ச்சியால் கல்விதுறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு தேவை கலையா?, அறிவியலா? என இங்கு மாணவியர் விவாதம் நடத்தினர்.இதேபோல், "லிஃப்ட்'டுக்கு பெயர் வைப்பது தொடர்பாக அமெரிக்கருக்கும், ஆங்கிலேயேருக்கும் இடையே விவாதம் நடந்தது. ஆங்கிலேயர் "லிஃப்ட்' என்று கூறுவதை அமெரிக்கர் "எலிவேட்டர்' என்பர். "லிஃப்ட்டை கண்டுபிடித்தது நாங்கள் தான் எனவே, "எலிவேட்டர்' என்பது தான் அதற்கு சரியான பெயர்' என்று அமெரிக்கர் கூறினர்.அதற்கு அந்த ஆங்கிலேயேர் சொன்னார், "எலிவேட்டரை கண்டுபிடித்தது நீங்களாக இருக்கலாம். ஆங்கிலத்தை கண்டுபிடித்தது நாங்கள் தான். எனவே, அதற்கு "லிஃப்ட்' என்பது தான் சரியான பெயர்' என்றார். கலையா, அறிவியலா என்று பார்க்கையில் முதலில் கலை தான் நிற்கிறது.



ஆரியபட்டர், பாணினி என அறிவியலர் நம் நாட்டில் ஏராளம். இவர்களுக்கெல்லாம் முன்னோடி கம்பர். அவர் தனது கம்ப ராமாயணத்தில் "புஷ்பகவிமானம்' என்று வர்ணித்துள்ளார். இதுவே இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கு சான்று.அணுகுண்டை கண்டுபிடித்த நோபல், "தனது கண்டுபிடிப்பால் அழிவு ஏற்படுமே' என்று மனம் வெதும்பியே "நோபல்' அமைப்பை ஏற்படுத்தினார். கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.அறிவியலால் வளர்ச்சி இருக்க வேண்டும். தேவையற்ற வீக்கம் இருக்கக் கூடாது. தேவையான வளர்ச்சி இருக்கும் போது, தேவதையாக தெரியும் அறிவியல், தேவைற்ற வீக்கம் வரும்போது பிசாசாக தெரியும். வாழ்க்கைக்கு அறிவியல், கலை இரண்டும் அவசியம்.கலையின் துணை கொண்டு அறிவியலை வழிநடத்திச் செல்ல வேண்டும். இரண்டும் இரு கண்கள் போன்றது. யாரை நீங்கள் உங்கள் "ரோல்மாடலாக' எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதில் தான் வாழ்க்கை உள்ளது.பெண்களை கேலிசெய்து சினிமாவில் வரும் வசனம், பாடல்களை பார்த்து பெண்களாகியே நாமே கைத்தட்டி ரசிக்கிறோம். தில்லையாடி வள்ளியம்மை பற்றி சிலருக்குத் தான் தெரியும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வேர் இருக்கும். அதை புரிந்து கொண்டு ஆசிரியர், பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.

அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை

அண்ணா பல்கலையில் இந்த ஆண்டு முதல் துவக்கம்:

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, புதிதாக அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் பொறுப்பையும் கவனித்து வந்தது. அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் பொறுப்பை கவனிக்க சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலை துவக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகம் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நூற்றாண்டை முன்னிட்டு, "அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை' என்ற பெயரில் புதிய ஆராய்ச்சி உதவித்தொகை உருவாக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இந்த கல்வியாண்டு முதல் ஆண்டுதோறும் 45 ஆராய்ச்சி மாணவர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும். முழுநேர பிஎச்.டி., ஆராய்ச்சியில் சேரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். அறிவியல், தொழில்நுட்பம், ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங், அறிவியல் மற்றும் கலை, மேலாண்மை அறிவியல் ஆகிய பாடங்களில் இந்த ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆராய்ச்சி உதவித்தொகையை பெறத் தகுதிபெறும் மாணவர்கள், மாதந்தோறும் 12 ஆயிரம் ரூபாயும், வருடாந்திர சிறப்பு நிதியாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு அல்லது ஆராய்ச்சி அறிக்கை தாக்கல் செய்யும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். மொத்தம் வழங்கப்படவுள்ள 45 ஆராய்ச்சி உதவித்தொகைகளில், கிண்டி பொறியியல் கல்லூரிக்கு 16, எம்.ஐ.டி.,க்கு 9, ஏ.சி., டெக்., கல்லூரிக்கு 5, எஸ்.ஏ.பி., கல்லூரிக்கு 2, சிறப்பு மையங்களுக்கு 6 உதவித்தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


காந்திய சிந்தனைகள் அனைத்து இடங்களிலும் பரவ வேண்டும்

http://img.dinamalar.com/data/large/large_114419.jpg

சென்னை: ""காந்திய சிந்தனைகள் பரவ, அவரது நூல்களை அனைத்து இடங்களிலும் இடம் பெறச் செய்ய வேண்டும். காந்திய மையங்களை அனைத்து இடங்களிலும் திறக்க வேண்டும்,'' என, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ். ராகவன் பேசினார்.


சென்னை காந்தி கல்வி நிலையம் சார்பில், டி.டி., திருமலை நினைவு மாநில அளவிலான பரிசுகள் வழங்கும் விழா, நேற்று தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடந்தது. விழாவிற்கு, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ். ராகவன் தலைமை வகித்துப் பேசியதாவது: இன்றைய சூழ்நிலையில் காந்தி இருந்தால் எப்படி இருக்கும், அவர் இன்றைய பிரச்னைகளை எப்படி எதிர் கொள்வார் என்பது குறித்து, பலரும் பல்வேறு இடங்களில் விவாதிப்பது உண்டு. அன்னியர் ஆட்சியின் போதான அவரது கொள்கைகளை, தற்போதைய மக்களாட்சியின் போது எப்படி செயல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக, இந்தியில் ஒரு சித்திரமும் வெளியாகி இருந்தது. அது நன்றாக இருந்ததாகவும் பலரும் கூறினர்.


இதே போல், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் பிறந்த அரிஸ்டாட்டில், போர்டு நிறுவன அதிபராக இருந்தால் எப்படி செயல்படுவார் என்பது குறித்து, டாம் மாரிசன் என்பவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலாக எழுதினார். அதே போல், நான் காந்தி, ரிலையன்ஸ் அதிபராக இருந்தால் எப்படி செயல்படுவார் என்பது குறித்து நூல் எழுதலாமா என நினைப்பதுண்டு. இப்போது உலகம் முழுவதும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், முக்கிய இடங்களில் பகவத் கீதை அல்லது பைபிள் இடம் பெற்றுள்ளது.


காந்திய சிந்தனைகள் பரவ நான் அரசுக்கு இரண்டு யோசனைகள் சொல்கிறேன். ஒன்று, கீதை, பைபிளைப் போல், காந்திய சிந்தனைகள் குறித்த ஒரு சிறிய நூலை இது போன்ற இடங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும். அதே போல், காந்திய கருத்துக்களை ஒரு சிறிய வட்டத்தில் சுருக்காமல், காந்திய மையங்களை அனைத்து இடங்களிலும் துவக்க வேண்டும். இதன் மூலம் இன்றைய தலைமுறையினருக்கும் காந்திய சிந்தனைகள் பரவும். இவ்வாறு பி.எஸ். ராகவன் பேசினார்.


விழாவில், பிரார்த்தனை பாடலை, சென்னை செம்மொழி மைய அருணா சரவணன் பாடினார். காந்தி கல்வி நிலைய ஆய்வு ஒருங்கிணைப்பாளர் பிரேமா அண்ணாமலை வரவேற்றார். காந்தி கல்வி நிலைய அறங்காவலர் விப்ரநாராயணன் விருந்தினர்களை உபசரித்தார். மகாத்மா காந்தியின் மூத்த சகோதரர் கர்சன்தாஸ் காந்தியின் பேத்தி பிரவீணா பாரிக், மாநில அளவிலான பரிசுகளை வழங்கினார். தமிழக முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். நரேஷ்குப்தா ஏற்பாட்டில், காந்தியடிகளின் வாழ்க்கை குறித்த வீடியோ காட்சி தொகுப்பு பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. தக்கர் பாபா வித்யாலயா செயலர் ஸ்தாணுநாதன், குஜராத்தி மண்டல் செயலர் சுரேஷ் பாரிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், காந்திய சிந்தனைகள் குறித்த போட்டியில் பங்கேற்ற பள்ளிகளுக்கு கேடயமும், மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன. காந்தி கல்வி நிலையத்தைச் சேர்ந்த சரவணன் நன்றி கூறினார். காந்தி கல்வி நிலைய இளைஞர் நல ஆலோசகர் சிவலிங்கம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். விழாவில், தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

உ.பி., மாநிலத்தில் இங்கிலீஷுக்கு கோவில்

லக்னோ : உத்தர பிரதேசத்தில் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு "ஆங்கில தேவி' என பெயரிடப்பட்டுள்ளது.


தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சினிமா நடிகைகளுக்கு கோவில் கட்டப்படும் நடைமுறை உள்ளது. அதேபோல், வட மாநிலங்களிலும் கோவில் கட்டும் கலாசாரம் துவங்கியுள்ளது. ஆனால், இவர்கள் சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோவில் கட்டுகின்றனர். உத்தர பிரதேசத்தில் கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆங்கில தேவி என்ற பெயரில், ஒரு கோவில் கட்டப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசத்தில் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்த கோவில் கட்டப்படுகிறது. கம்ப்யூட்டர் போன்ற மாடலில் இந்த கோவில் கட்டப்படுகிறது.


இதுகுறித்து கோவிலை கட்டி வரும் பொதுமக்கள் கூறியதாவது: ஆங்கில மொழி, தற்போது அத்தியாவசியமாகி விட்டது. ஆங்கில மொழியை கற்றவர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, அதை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கோவில் கட்டப்படுகிறது. மற்ற கோவில்களில் வழக்கமாக எந்த முறையில் வழிபாடு நடத்தப்படுகிறதோ, அதே முறையில் இந்த கோவிலிலும் வழிபாடு நடக்கும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர். "உ.பி.,யில், கடவுள் அல்லாத விஷயத்துக்காக, கோவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை' என, அங்குள்ள பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் 85 ஆயிரம் பேருக்கு வேலை

புதுடில்லி : பொதுத்துறை வங்கிகளில், அடுத்த மூன்றாண்டுகளில் 85 ஆயிரம் காலியிடங்கள் ஏற்படவுள்ளன. இந்த இடங்களுக்கு தகுதியான நபர்கள், தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசு தெரிவித்துள்ளது.


மத்திய நிதியமைச்சகம் சார்பில் பொருளாதார ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது, அரசு தரப்பில் பொதுத்துறை வங்கிகள் வேலைவாய்ப்பு பற்றி தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுத் துறை வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 2010-13ம் ஆண்டிற்குள், 34 ஆயிரம் அதிகாரிகளும், 52 ஆயிரம் கிளார்க்குகளும் தேர்வு செய்யப்பட உள்ளனர். "வங்கி ஆட் தேர்வு மையம்' (ஐ.பி.பி.எஸ்.,) மூலம் வெளிப்படையான முறையிலும், வேகமாகவும் தேர்வு செய்யப்படுவர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளுக்கான தேர்வு முறைகள் மூலம் ஐ.பி.பி.எஸ்., ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. 1984ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஐ.பி.பி.எஸ்., நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான ஆட்தேர்வு உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. கடந்த 2009-10ம் ஆண்டில் நாடு முழுவதும் ஐ.பி.பி.எஸ்., மூலம் நடத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்தேர்வில், 60 லட்சம் விண்ணப்பதாரர்கள் பங்கேற்றுள்ளனர்.

"மாணவர்கள் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும்'

பந்தலூர்: "மாணவர்கள் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பந்தலூர் புனித சேவியர் மாணவர் நுகர்வோர் மன்றம் சார்பில், சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், உலக பார்வை தின நிகழ்ச்சி கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவர் நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""முக்கியத்துவம் வாய்ந்த கண்களை பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமை. 60 சதவீத பார்வை குறைபாடு, சிகிச்சை மூலம் குணப்படுத்தவும், 20 சதவீதம் தடுக்கவும் முடியும். பிறவியிலேயே கண்பார்வை இழத்தல், வைட்டமின் "ஏ' குறைபாடு, சர்க்கரை அளவு அதிகரித்தல், தொற்றுநோய் போன்றவை கண் பார்வை இழப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே தான், நுகர்வோர் பாதுகாப்பு மையம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து, விழிப்புணர்வு மற்றும் கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வருகிறது,'' என்றார். பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் அமராவதி ராஜன் பேசுகையில், ""உலகில் ஒவ்வொரு 5 நொடிக்கும் ஒருவர் பார்வை இழப்பதுடன், ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் பார்வையை இழக்கின்றனர். அதிகபட்சம் குழந்தைகள் என்பது தான் வருத்தம் தரக்கூடியது. விளையாட்டுகள் மூலம் கண்களில் அடிபட்டு கருவிழி படலம் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோகிறது. மாணவர்கள் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். சிறுவயது குழந்தைகளுக்கு வைட்டமின் "ஏ'சத்து குறைவால், பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதைப் போக்க, குழந்தை பிறந்த 6 மாதம் முதல் 5 வயது வரை, ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒரு முறை வைட்டமின் "ஏ' சத்து நிறைந்த திரவம் வழங்கப்படுகிறது. அரசு சுகாதாரத் துறை மூலம் வழங்கப்படும் இந்த திரவத்தை பயன்படுத்தவும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வழங்குவதிலும், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். தொற்றுநோய் கிருமிகள் மூலமும் கண் பாதிக்கப்படும் நிலையில், வைரஸ் கிருமிகளால் பார்வை பாதிக்கப்பட்டால், அடிக்கடி துடைத்தல் உட்பட செயல்களை மேற்கொள்ளாமல், குளிர்ந்த நீரில் கழுவுவதுடன், உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவரை அணுக வேண்டும்,'' என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நெல்லியாளம் நகர மன்றத் தலைவர் காசிலிங்கம் பேசுகையில், ""கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதால், பலர் பயன் பெற்றுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளுக்கு, மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார். சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசுகையில், ""சுகாதாரத்தை பாதுகாப்பதில் மாநில அரசு பல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பார்வை குறைபாடுடைய மாணவர்களை கண்டறிந்து, கண் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது. பந்தலூர் தாலுகாவில் மட்டும் 352 மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் வைட்டமின் "ஏ' திரவம், உயிர்திரவம் என அழைக்கப்படுகிறது. இதை, அந்தந்தப் பகுதி சுகாதார செவிலியர்கள், குழந்தைகளுக்கு வழங்குவர். இதன் மூலம் கண்பார்வை குறைபாடு மட்டுமின்றி, தோல் நோய்களும் கட்டுப்படுத்தப்படுகிறது,'' என்றார். பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, கவுன்சிலர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி செலீன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெள்ளு, பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதரன், கண் பரிசோதகர் நாகூர் கணி, நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள், நுகர்வோர் மைய மாணவர்கள் பங்கேற்றனர்.

மனிதன் தன்னம்பிக்கையோடு வாழ்ந்துவாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்: நல்லக்கண்ணு

திருநெல்வேலி:எந்த விஷயமாக இருந்தாலும் மனிதன் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூ.,மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசினார்.எழுத்தாளர் நிலாவின் "உறைக்கும் உண்மைகள்' நூல் வெளியீட்டு விழா நெல்லை ஜங்ஷன் ஜானகிராம் ஓட்டலில் நடந்தது. இந்திய கம்யூ.,மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட, சாகித்ய அகாடெமி விருதுபெற்ற இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரன் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து நல்லகண்ணு பேசுகையில்,""சமீபகாலமாக மக்களிடம் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.


மன அழுத்தத்தால் சோகத்தின் எல்லைக்கே மக்கள் சென்று விடுகிறார்கள். கலாச்சார மாற்றத்தால் சிலர் பழைய மரபுபடியும் வாழ முடியாமல், புதிய மரபுபடியும் வாழ முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள். இந்த சமுதாயத்தின் நடுத்தர மக்கள் தினமும் சந்திக்கும் சோதனைகளும், வேதனைகளும் ஈழமக்களின் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் தான்.மனிதன் அனைத்து விஷயங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும். அதைதான் தனது கதையில் நிலா கூறியுள்ளார்.''என்றார்.


தி.க.சிவசங்கரன் பேசுகையில்,""இங்கிலாந்தில் மக்களிடம் சமூக விழிப்புணர்வு உள்ளதாக நிலா கூறியுள்ளார். இந்திய மக்களிடம் தான் விழிப்புணர்வு இல்லை. எழுத்தாளர்களுக்கு உணர்வு இருப்பது அவசியம். அது இல்லாத எழுத்தாளர்களை நான் மதிப்பது இல்லை.''என்றார்.விழாவில், பேராசிரியர்கள் ராமச்சந்திரன், மயன் ரமேஷ், ராஜா, வரலாற்று ஆராய்ச்சியாளர் திவான், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் நாறும்பூ நாதன், ஜானகிராம் ஓட்டல் உரிமையாளர் ராம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தகவல் தொழில் நுட்ப கம்பெனிகளில் 3.25 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்

மதுரை: "தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப கம்பெனிகளில் 3.25 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்,'' என மதுரையில் சாப்ட்வேர் இன்டஸ்டிரீஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன்(சிடா) துவக்க விழாவில் "நாஸ்காம்' மண்டல இயக்குனர் புருசோத்தமன் குறிப்பிட்டார். விழாவிற்கு தலைமை வகித்து சிடா தலைவர் சிவராஜா பேசியதாவது: மதுரையில் தகவல் தொழில் நுட்ப கம்பெனிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்காட் போன்ற அரசு நிறுவனங்கள், சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களிடமிருந்து புரோகிராம்களை பெறுகின்றனர். மதுரை நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பு கொள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மதுரை போன்ற தென் மாவட்ட சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். சாப்ட்வேர் உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும், தென் மாவட்ட இளைஞர்கள் பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும், அவர்களது ஆங்கில புலமையை வளர்க்க பயிற்சி பட்டறைகளை நடத்தவும், சிடா நடவடிக்கை எடுக்கும். வெளிநாட்டு முதலீடுகளை தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


"நாஸ்காம்' இயக்குனர் புருசோத்தமன் "தகவல் தொழில் நுட்ப துறையின் இன்றைய போக்கு' குறித்து பேசியதாவது: தென் மாவட்டங்களில் 70 சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. சாப்ட்வேர் துறையில் இருக்கும் புதிய வாய்ப்புகள், வியாபார யுக்திகள், அரசு துறைகளுடன் வர்த்தக தொடர்பு மேற்கொள்வது குறித்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு "நாஸ்காம்' உதவுகிறது. எதிர்காலத்தில் மதுரை போன்ற சிறிய நகரங்களிலும் சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏராளமாக துவங்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கு தேவையான நிலம், இன்ஜினீயர்கள் உள்ளனர். தமிழகத்தில் 3.25 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகின்றனர். இவர்களில் 20 சதவீதம் பேர் தென் மாவட்டத்தினர், என்றார்.


துணை தலைவர்கள் கதிர்காமநாதன், அஷ்வின் தேசாய், வரதராஜன், ராதாகிருஷ்ணன், பாண்டியன், சிவக்குமார் பேசினர். ஒருங்கிணைப்பாளர் சேஷகாஸ் கான் நன்றி கூறினார்.

"பூச்சியினங்கள் வேகமாக அழிந்து வருவதால், மனித குலம் அபாய நிலையில் உள்ளது"

கோவை : ""பூச்சியினங்கள் வேகமாக அழிந்து வருவதால், மனித குலம் அபாய நிலையில் உள்ளது. மொபைல்போன் டவர், பூச்சி கொல்லிகளால் பறவையினம் அழிந்து வருவதால், மகரந்த சேர்க்கை குறைந்து தாவரங்கள் அழிந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கண்டாக வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது,'' என, ஹாங்காங் பேராசிரியர் ரோஜர் கென்ட்ரிக் பேசினார்."ஆசிய பட்டாம் பூச்சிகள் பாதுகாப்பு' குறித்த ஐந்து நாள் பயிற்சி மற்றும் கருத்தரங்கம், கோவை பாரதியார் பல்கலையில் நேற்று துவங்கியது.


பல்கலையின் விலங்கியல் துறை, "ஜூ அவுட்ரீச்' அமைப்பு இணைந்து நடத்திய கருத்தரங்கின் துவக்க விழாவில் துணைவேந்தர் சுவாமிநாதன் பேசியதாவது: உலகம் முழுவதும் பூச்சியினங்கள் உள்ளன. இதில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை நன்மை தருபவை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இதன் பங்கு முக்கியம். பல மிருகங்களின் உணவாகவும் பூக்களில் மகரந்த சேர்க்கை நடக்கவும் இவை உதவுகின்றன. 1,500 பட்டாம்பூச்சிகள் இந்திய உபகண்டத்தில் உள்ள வட கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசிப்பவை. இந்த அழகிய உயிரினம் தற்போது மெள்ள அழிந்து வருகிறது. சூழல் மாசு காரணமாக பல மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் அழிந்து வருகின்றன. பயிர்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகளை உண்ணும் பட்டாம் பூச்சிகள் அழிந்து வருகின்றன. மனிதர்களே இதன் அழிவுக்கு காரணம். பூச்சியினங்கள் அழிந்து விடாமல் தடுக்க விரைவில் தீர்வு காண்பது
அவசியம். இவ்வாறு சுவாமிநாதன் பேசினார்.


ஹாங்காங்கை சேர்ந்த பேராசிரியர் ரோஜர் கென்ட்ரிக் பேசியதாவது: பூச்சியினங்கள் வேகமாக அழிந்து வருவதால், மனித குலம் அபாய நிலையில் உள்ளது. இங்கிலாந்தில் 50 ஆண்டுகளில் 99 சதவீத பட்டுப்பூச்சிகளும், அமெரிக்காவில் 50 - 60 சதவீத பட்டுப்பூச்சிகளும் அழிந்து விட்டன. காடுகள் அழிப்பு, சல்பர் பை ஆக்சைடு மற்றும் நைட்ரிக் ஆக்சைடு அடங்கிய பூச்சி மருந்து பயன்பாடு ஆகியவை பூச்சி, பறவை அழிவுக்கு முக்கிய காரணங்கள். தொழில் நுட்ப உதவியால் தீர்வு காணலாம். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதும் தீர்வு தரும். பட்டாம்பூச்சி உள்ளிட்ட பூச்சியினங்கள் அழிவதால் மகரந்த சேர்க்கை குறைந்து, தாவர இனங்களும் அழிந்து வருகின்றன. உலகம் முழுவதும் அடுத்த 30 ஆண்டுகளில் பெருகப் போகும் மக்கள் தொகையின் உணவுத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, தீர்வை கண்டறிய வேண்டும். நகரமயமாதல் அதிகரிப்பு, விவசாய நிலங்கள் சுருங்குவது ஆகிய மாற்றம் தான், பறவைகளின் அழிவுக்கு முக்கிய காரணம். சீனாவில் காடுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. மீண்டும் அதேபோன்ற காடுகளை கொண்டு வர முயற்சிப்பதை விட, இருக்கும் காடுகளையும் அவற்றை நம்பி வாழும் உயிரினங்களையும் பாதுகாப்பது நல்லது. இந்தியா மட்டுமல்லாமல், ஆசிய கண்டம் முழுவதும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு ரோஜர் கென்ட்ரிக் பேசினார்.

யோகா செய்தால் மன அழுத்தம் குறையும் - ஆய்வுத் தகவல்.

ஆமதாபாத் : யோகா செய்வதால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், ஆதித்ய பிர்லாவின் "கிராசிம்' ஜவுளி நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி மற்றும் தத்துவம் பயிற்றுவிக்கப்பட்டது. 84 பேரில் 42 பேருக்கு யோகா பயிற்றுவிக்கப்பட்டது. மற்ற 42 பேருக்கு உடற்பயிற்சியும் தத்துவமும் மொத்தம் 30 மணி நேரம் போதிக்கப்பட்டன. தினமும் 75 நிமிடங்கள் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி முடித்த பின் இவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யோகா பயிற்சி மேற்கொண்ட அதிகாரிகளிடம் மன அழுத்தம் நீங்கியிருந்தது. உடற்பயிற்சியும், தத்துவமும் பயின்ற அதிகாரிகளிடம் வழக்கத்துக்கு மாறாக பதட்டமும், மன அழுத்தமும் அதிகரித்திருந்தது.

சத்தம்போடாமல் அடிவாங்குங்கள்-வாசகர் கட்டுரை

என்.நடராஜன்.

வேற்று கலாசாரத்தில் கால் வைக்கும் போது

உலகெங்கிலும், காலம் காலமாக மனிதர்களும் மற்ற உயிரினங்களும், வளமையைத் தேடி இடம் பெயர்வது புதியதில்லை. இதன் அடிப்படையில் மக்கள் வேற்று கலாசாரங்களுக்கும் கால் வைப்பதும் புதிய செயல் இல்லை.
நீங்கள் எப்போதாவது அடுப்பங்கரையில் மனைவிக்கோ அல்லது அம்மாவுக்கு பஜ்ஜி போட உதவியிருந்தால் வேற்றுகலாசாரதில் வழக்கமாக நிகழும் ஆபத்து புரிந்துவிடும்.
   வேற்று கலாசாரத்தில் வளமைத் தேடி ஊடுருவும் மக்கள் தண்ணீரப் போலவும், உள்ளூர் சமுதாயத்தை எண்ணை காயும் கொப்பரையாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். காயும் எண்ணை, தண்ணீர் இரண்டும் கலக்கும் போது கொதிக்கும் எண்ணை வெடித்துச் சிதறிவிடும் இல்லையா.
  இது சாதாரண, பொருளாதாரப் பிரச்சினை. கலாச்சாரத்தில் இணைந்த புதியவர்கள் உள்ளவர்களின் வாழ்விற்கு அச்சமுறுத்தும் வகையில் அமையக்கூடாது. படிக்க போன்னால் படித்துவிட்டு ஊர் திரும்பினால் பிரச்சனை இருக்காது. படிக்கப் போகிறேன் என்ற போர்வையில் சமுதாயத்தில் உள்ள கீழ்மட்ட வேலைகளை, குறைந்த சம்பளத்தில் பிடித்துக்கொள்ளும்போது எண்ணை சூடாகி வெடிக்கிறது!
  இந்த மொழி-இனக்கலப்பில் கை கலப்பு உருவாகமல் இருக்க மிகவும் அவசியம், எச்சரிக்கை. இதை நமது கல்வித் திட்டத்தில் பல கட்டத்தில் ஒரு பாடமாக இது அமையவேண்டும் என்பது எனது கணிப்பு.
சில உண்மை நிகழ்ச்சிகள்:
   சமீப காலமாக கிரிக்கெட் ஆட்டத்தைதவிர ஆஸ்திரேலியாவைப் பற்றிய செய்திகள் டீ வி யில் நிறையவே வருகின்றன. அதன் பின்னணி என்ன? இந்திய மாணவர்கள் மீது பல கொலை வெறி தாக்குதல்கள். முதலில் மறுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அனைவரும் இதை எல்லா நாடுகளிலும் தவிர்க்க முடியாத திருடர்கள் மற்றும் விடலைச் சிருவர்களின் வேலையாக விளக்கி வந்தார்கள். நம்ம ஊர் அரசியல்வாதிகள் இதை இனக்கலவரம் என்று வருணித்தார்கள். உண்மை இது இரண்டுமே இல்லை.
இதை ஆஸ்திரேலியா தடுக்கவேண்டும். குற்றம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூச்சலிட்டார்கள். டீ.வி சானல்களுக்கு ஏக கொண்டாட்டம். திரும்பத்திரும்ப நாள் முழுவதும் கிடத்த விசுவல்களைப் போட்டு, ஆஸ்திரேலிய அரசாங்கத்தை, விளாசினார்கள். எதுவும் நிற்பதில்லை. இதுவும் நிற்காது.
    நல்ல வேளையாக, ஆஸ்திரேலிய அரசு, அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கைகள், இன்று வரை முக்கியமான ஒரு கேள்வியை நம் அரசிடம் எழுப்பவில்லை. மும்பாயில் மொழியின் அடிப்படையில் ஒரு அமைப்பு. இவர்கள் டெலிவிசன் கேமிரா முன்னிலையில் இந்தி பேசும் மக்களை அடித்து அவர்கள் சொத்துகளை நாசம் செய்துவருவது எல்லா டீ வி சானல்களிலும் வெளிவந்ததே!
இந்த காட்டுமிராண்டித் தனத்தை - இந்தியர் மற்ற இந்தியர் மீது நடத்திய அத்துமீரல்களை எப்படி இந்திய அரசு நிறுத்தும்? இதுவரை எத்தனை குண்டர்கள் சிறையில் அடக்கப்பட்டுள்ளார்கள் ?
சுமார் 50 வருடம் முன்னால் தென்னிந்தியர்களை எதிர்த்து வெறியாட்டம் நிகழ்த்திய அதே அமைப்பு பல கட்சிகள் ஆட்சியில் வந்து போனாலும் விடாமல் வளர்ந்து வருகிறது.
    அமெரிக்கவிலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் குறைவில்லை. தமிழ் நாட்டைவிட ஆந்திர மக்களே அதிகமாக மாணவர்களை அமெரிக்கா அனுப்புவதால் நம்மை அங்குள்ள நிகழ்வுகள் வாட்டுவதில்லை. ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் (பெரும்பாலும் வட இந்திய மாணவர்கள் அடி-உதை பட்ட போது ஆந்திர மாணவர்கள் கொலையுண்ட கதைகளுக்கு குறைவில்லை. அமெரிக்காவில் பெரும்பாலும் இந்த நிகழ்ச்சிகள் வேலையில்லா இளைஞர்கள் குடிகாரர்கள் என்று சிறு கூட்டம் செய்யும் வேலை. இவர்களைச் சிறைப் பறவைகள் என்று அழைப்பார்கள். உள்ளூர்காரர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஊருக்குப் புதியவர்கள் அகப்பட்டுக்கொள்வார்கள்.
   ஒரு சினிமா. மிகப் பழையது. ……X என்பது சினிமாவின் பெயர். அதில் புதியதாக அமெரிக்காவிற்கு குடிபுகும் மக்களுக்கு எதிராக புரட்சி. ரகசிய தாக்குதல். இவர்கள் ஜெர்மெனியில் யூதர்களை படு கொலை செய்த நாஜிகளின் கொடியும் சித்தாந்தமும்தான் வழிக்காட்டுதல்கள்.
அதில் ஒரு வசனம். பல வருடங்களுக்காக அமெரிக்க சமுதாயத்தை உயர்த்த உழைத்தவர்கள் ஏழ்மையில் இருக்கும்போது, புதியதாகப் புகுந்தவர்கள் அதிவேகமாக செல்வந்தராகிறார்கள் என்பதே.
அடுத்ததாக:
  கேரள மக்கள் வளைகுடா நாடுகளுக்கு தங்கள் இலக்கை வைத்திருப்பதைப்போல, ஆந்திரா, மற்றும் தமிழர் அமெரிக்காவை தன் இலக்காக கொண்டதைப்போல, வட ந்தியர்கள் ஐரோப்பா கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை அடைவதை குறிக்கோளாக கொண்டவர்கள்.
வெளி நாட்டில் உயர்கல்வி என்ற பெயரில் இப்படிப்பட்ட நாடுகளில் புகுந்து சிறிய வேலைகளில் சேர்ந்து அந்த நாட்டின் குடியுரிமை பெருவது இவர்களில் சிலரின் வழக்கம்.
  அதெல்லமல், இவர்கள் அந்த நாடுக்ளை அடைய செய்யும் முயற்சி மிக ஆபத்தானது. இரு நாடுகளிடியே வியாபார பரிவர்தனைகளுக்கு மிகப் பெரிய லாரிகள் சென்றுவரும். லாரிகளின் வெளிச்சுவர்கள் மிகச்சிறிய இடைவழி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
   இரண்டு மூன்று நாட்கள் அந்த இடைவெளியில் தாங்க முடியாத குளிர் அல்லது வெப்பத்தில் சவாரி செய்வர்கள் பலர். இப்படி சவாரி செய்து பிற நாடுகளை அடைய முயற்சி செய்யும் மக்களில் பலர் மனிதர்களாக சென்று, பிணங்களாக சேர்பவர்கள். அப்படியும் உயிருடன் சேர்ந்தாலு, அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைபட்டவர் அனேகர். திரும்பவும் தாய் நாட்டிற்கு திரும்பியவரும் குறைவில்லை.

  அடுத்ததாக, ஒரு மிகப்பழைய சம்பவம். ஜெர்மெனியில் யூதர்கள் சில லட்சம் பேர் படு கொலை செய்யப்பட்டார்கள். உலகம் முழுவதும் இதை கண்டித்தது. மனிதாபிமான ரீதியில் அது சரியானது. போருளாதார ரீதியில் இல்லை.
நான் எழுதுவது ஏதோ நான் ஹிட்லரின் வம்சாவளி என்றும் அதனால்தான் நாம் இப்படி எழுதுகிறேன் என்று என்னை குற்றம் சொல்லலாம்.
யூதர்களில் உலகிலேயே அதிக சக்தி பொருந்திய ஒரு இனம். கடந்த பல நூற்றாண்டுகளாக அவர்கள் அடைந்த புகழும், அவர்கள் பட்ட (படுகின்ற) துயரும் மிக மிக அதிகம்.
  அவர்களுடைய சக்தி:
அறிவுச் செரிவுள்ளவர்கள். வியாபாரத்தில், விஞ்ஞானத்தில் அவர்களுக்கு நிகர் இன்று உலகில் எவரும் இல்லை. அமெரிக்கா இவர்களுக்கு ஜாலரா போடக் காரணம் அமெரிகாவின் பெரும்பான்மை வர்தகம் இவர்கள் கையில் இருப்பதே என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.
உலகில் பல கலாசாரங்களில் கலந்திருந்து பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு இவர்கள் இன்று இஸ்ரேலில் குவிந்து குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பல கலாச்சாரங்களின் தாக்கம் கொண்டிருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட தேவையான இணக்கம் இந்த மக்களுக்கு இருக்கிறது.
அவர்களின் துயாரம்
இவர்களைப் பூண்டோடு அழிக்க பல அரபு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. உத்தேசமாக சொன்னால், நம்மைச் சுற்றி 100 பாக்கிஸ்தான் இருப்பதற்கு சமம். சிக்கனமானவர்கள். அதே சமயம் எந்த சமுதாயத்தில் இருக்கிறார்களோ அங்குள்ள பொருளாதாரம் இவர்கள் கைக்கு மாறிவிடும்.
ஆழ்ந்து சிந்தித்தால், ஜெர்மெனியில் இவர்கள் மீது வெறுப்புவருவதற்கு, இவர்களை பூண்டோடு அழிக்கக் காரணமானது, இவர்கள் வெற்றி. இவர்களுடய வெற்றி இவர்கள் கலந்த சமுதாயத்தை தோல்வியில் ஆழ்த்தியதே.

படிப்பினைகள்

(1) சுருக்கமாக இதன் படிப்பினை, வளமையைத்தேடி செல்லும் மக்கள் புதிய சமுதாயத்தை முற்றிலும் கலந்திட வேண்டும். புதிய சமுதாயத்தில் சமுதயத்தையும் உயரவைத்து அத்துடன் தானும் உயரலாம். விருந்தாளிகைப் போல வாழ்ந்து வந்து மற்றவருடன் ஒன்றரக் கலந்துவிட வேண்டும்.
(2) தான் இந்த இனத்தைச் சேர்ந்தவன் என்று பறை சாத்தும் வகையில் மற்ற தன் இனத்தவருடன் இணைந்து கூத்தடுவது அழிவுக்கு விரைவுவழியைத் தேடுவதாகும்.
(3) இனப்பற்று மொழிப்பற்று மதப்பற்று என்று உங்களை பல பற்றுகள் தொல்லை செய்யுமானால், வளமையின் மீதுள்ள பற்றை பற்றவைத்துவிட்டு உங்கள் இயல்பான சமுதாயத்திற்கே திரும்பி, திருப்தியாக வாழுங்கள்.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை – அப்படியானால், மை டியர் மக்களே, சத்தம்போடாமல் அடிவாங்குங்கள்

என்னுடன் தொடர்பு கொள்ள
௦080- 41212349
09686037729
பெங்களூரு

பல்வேறு நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருவேங்கடம் : காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றுபோக்கு போன்ற நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுமக்கள் கண்டிப்பாக பயன்படுத்திட வேண்டும் என குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சாதாரண காய்க்சல் அறிகுறிகள்: தலைவலி, உடல் வலியுடன் காய்ச்சல், சளி, இருமல் இவற்றுடன் ஒருசில நபர்களுக்கு வாந்தியும் ஏற்படலாம். இவை கொசுக்களினால் பரவுகின்றன. வீட்டிற்கு வெளியே கிடக்கும் உபயோகமற்ற டப்பா, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள், மண்பாண்ட துண்டுகள், சிரட்டைகள், தேங்காய் நுங்கு மட்டைகள், ஆட்டு உரல் போன்றவைகளில் மழைநீர் தேங்கி இருந்தால் கொசு உற்பத்தியாக ஏதுவாக இருக்கும். எனவே இவைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேல்நிலை தொட்டி, தரைநீர் தொட்டி, டிரம்களில் 3 தினங்களுக்குமேல் தண்ணீர் தேக்கம் செய்யக்கூடாது.


மலேரியா காய்ச்சல் அறிகுறிகள்: குளிர் மற்றும் நடுக்கத்துடன் விட்டு விட்டு வரக்கூடிய காய்ச்சல். தலைவலி, முதுகுவலி, உடம்பு நெருப்பாக கொதிக்கும். அதிக வியர்வை காணப்படும். இது அனாமலஸ் என்ற பெண் கொசுவினால் பரவுகிறது. இதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக ரத்த பரிசோதனையும் சிகிச்சையும் செய்யப்படும்.


பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல்வலி, இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியன இதன் அறிகுறியாகும். இந்நோய் கிருமி காற்றின் மூலமும், நோய் கண்டவர்கள் தொடும் பொருட்களின் மூலமும் மாற்றவர்களுக்கு பரவும். இதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் 5 வயதிற்குட்பட்டவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், நீண்டகால உடல்நிலை குறைவு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள்.


நோய் தடுப்பு முறை: நோயாளிகள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சத்தான உணவு, ஓய்வு எடுத்தல், கூட்டமாக உள்ள இடத்திற்கு செல்லக்கூடாது.


நோய் தடுப்பு முறை மற்றவர்கள்: இருமல், தும்மல், வரும் போது கைக்குட்டையை பயன்படுத்தவும். பொது இடங்களில் எச்சில் துப்பாமை. தடுப்பு மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி போட வேண்டும். காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். வாந்தி, வயிற்றுப் போக்கை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புத்தகம் படிப்பது இன்றும் குறையவில்லை : சரசுவதி மஹால் நூலக காப்பாளர் பெருமிதம்

தஞ்சாவூர்: ""புத்தகம் படிப்பது இன்றும் குறையவில்லை. அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளிவருகிறது,''என சரசுவதி மஹால் நூலக காப்பாளர் பேசினார். தஞ்சாவூரில் நடந்த பாவேந்தர் நூலக முதலாமாண்டு நிறைவு விழாவில், ராசவேலு வரவேற்றார். நூலக வாசகர் வட்ட தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.


முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் பேசியதாவது: கடந்த 4,000 ஆண்டுக்கு முன் எகிப்தில் முதல் நூல்கள், நூலகம் உருவானது. கோவில், அரசர்களின் இருப்பிடம், அரண்மனைகளில் அவை இருந்தன. களிமண்ணில் எழுதினர். அரசர், கடவுள் குறித்த தகவல்கள் இடம் பெற்றன. எகிப்தில்தான் முதல் பேப்பர் உருவாக்கி எழுதினர். பின், தோலில் எழுதினர். ஜுலியர் சீசரின் தளபதி ரோமாபுரியில் உலகில் முதல் பொது நூலகத்தை உருவாக்கினார். பின், ஆசியாவில் அவை பரவியது. நூல்களின் மீது அதிக ஈர்ப்பு இருந்ததால் லண்டன் நூலகத்தில் 70 லட்சம் நூல்கள் இருந்தன. இந்தியாவில் வேதங்கள் எழுதப்பட்டன. பல மொழிகளில் இருந்தவை மற்ற மொழிகளுக்கு மாற்றி எழுதப்பட்டன. தமிழக அரசு தற்போது நூலகப்பணியில் சிறப்பாக செயல்படுகிறது. மிகப்பெரிய நூலகம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டதுடன், கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


சரசுவதி மஹால் நூலக காப்பாளர் பெருமாள் பேசியதாவது: பட்டறிவு ஆரம்பத்தில் நேரடியாக கூறப்பட்டும், பிற சந்ததியினரும் அறிய வேண்டுமென எழுத்தில் பதிவு செய்தனர். மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததால் கல்லில் எழுதினர். கல்லை பிற இடம் தூக்கிச் செல்ல முடியாது என்பதால் செங்கலிலும், ஆற்றங்கரை பகுதியில் மக்கள் வசித்ததால் மண்ணை தட்டாக்கி, ஓடுகளாக்கி பதிவு செய்தனர். ஓடுகள் உடைந்ததால் காரியம், வெள்ளி, தங்கம், செப்பு போன்றவைகளில் எழுதினர். கடந்த 1620ல் தஞ்சையில் ரகுநாத நாயக்கர் டென்மார்க்குடன் செய்து கொண்ட ஒப்பந்த தங்கத்தகடு இன்னும் உள்ளது.


எழுதுவதை எளிமையாக்குதல், வளர்ச்சியால் மூங்கில், மரம் மற்றும் தாவரங்கள், பேப்பரில் எழுதினர். இந்தியா அதிக வெப்பம், வெளிச்சமான நாடு. இங்கு வடமாநிலங்களில் மரத்திலும், தென்மாநிலங்களில் ஓலைச்சுவடிகளிலும் எழுதினர். நமக்கு 4,000 ஆண்டுக்கு முந்தைய ஓலைச்சுவடிகள் கிடைத்துள்ளன. இவை 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபதிவு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள் சுவடிகளை மறுபதிப்பு செய்தல், பாதுகாத்தலை செய்தனர். முற்காலத்தில் மன்னர்கள் போரின்போது, பிற மன்னரின் அரண்மனையை முற்றிலும் தீயிட்டு நாசப்படுத்தியதால் நமக்கு பல அரிய பதிவுகள் கிடைக்காமல் போனது. சரபோஜி போன்ற மன்னர்கள் பிரிட்டிஷ் அரசுடன் இணக்கமாக இருந்ததால் சரசுவதி மஹால் நமக்கு கிடைத்தது.


நூலக தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதனால் பொது நூலக சட்டம் உருவாக்கப்பட்டது. புத்தக வழங்கு சட்டத்தால் இந்தியாவில் வெளியாகும் நூல்களில் நான்கு பிரதிநிதிகள் கட்டாயமாக கொல்கத்தா தேசிய நூலகம், சென்னை கன்னிமாரா நூலகம், மும்பை மத்திய நூலகம், டில்லி பொது நூலகம் ஆகியவற்றுக்கு அனுப்ப வேண்டுமென்றானது. இங்கு புத்தகங்களின் பட்டியல் உள்ளன. புத்தகம் படிப்பது இன்றும் குறையவில்லை. அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளிவருகிறது. குறுந்தகடு வடிவில் கூட வெளியிடப்படுகிறது. கலைக்களஞ்சியம், அகராதி, பயணக்கட்டுரை, வரைபடம் போன்றவைகள் அதிகமாக பதிவு செய்யப்பட வேண்டும். அவை பயனுடையதாகும். இவ்வாறு அவர் பேசினார். தலைவர் மணிவாசகம், நிர்வாகக்குழு உறுப்பினர் தில்லைராஜ், கவிஞர் சித்தார்தன், முன்னாள் செயலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பேசினர். தணிக்கையாளர் ஜெயகுமார் நன்றி கூறினார்.