ஆன்-லைனில் இன்ஜினியரிங் பொது நுழைவுத்தேர்வு

சி.பி.எஸ்.இ., தகவல்:

புதுடில்லி : அடுத்த ஆண்டு முதல் அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.,) பரீட்சார்ந்த முறையில் ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். நாட்டின் பெருமைமிக்க கல்வி நிறுவனங்களாக கருதப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.,), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி.,) ஆகியவற்றில் மாணவர்களை சேர்ப்பதற்கு, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தவிரவும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் குறிப்பிட்ட மாநில கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் மற்றும் கட்டடக்கலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையும், இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதால், இந்த நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

உள்நாடு மட்டுமின்றி, துபாய் மற்றும் சவூதி அரேபியா ஆகிய வெளிநாடுகளிலும் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக கருதப்படும் இதில், கடந்த ஆண்டு 12 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்.,) சேர்வதற்கு நடத்தப்படும் சி.ஏ.டி., நுழைவுத் தேர்வு, கடந்த ஆண்டு ஆன்-லைனில் நடத்தப்பட்டது. இதேபோன்று, இன்ஜினியரிங் பொது நுழைவுத் தேர்வையும் ஆன்-லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை (ஏ.ஐ.இ.இ.இ.,) ஆன்-லைனில் நடத்த சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. நாட்டின் 84 நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இன்ஜினியரிங் பொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், நாட்டின் 20 முக்கிய நகரங்களில் இத்தேர்வு ஆன்-லைனில் சோதனை முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கும் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.


"எழுத்தறிவைப் போல சூழலியல் கரிசனமும் அவசியம்'

http://img.dinamalar.com/data/large/large_135465.jpg
கோவை: "எழுத்தறிவைப்போல் சூழலியல் கரிசனம் அனைவருக்கும் இருக்க வேண்டும்,'' என, சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் பேசினார். கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் ரோட்டரி கிளப் சார்பில், "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்புக்கு "போற்றுதலுக்குரிய சேவைக்கான விருது' வழங்கும் விழா, குப்புசாமிநாயுடு மருத்துவமனை ஜி.கே.டி., அரங்கத்தில் நடந்தது. கலெக்டர் உமாநாத், சுற்றுச்சூழலியல் ஆர்வலர் தியோடர்பாஸ்கரன் பங்கேற்று, விருதை வழங்கினர். தியோடர் பாஸ்கரன் பேசியதாவது:
சூழலியல் ஆர்வலர் அடைமொழி சிலருக்கு மட்டுமே உண்டு. ஆனால், "சூழலியல் கரிசனம்' அனைவருக்கும் இருக்க வேண்டும். எழுத்தறிவு போல, சூழலியல் கரிசனம் பொதுமக்களுக்கு அவசியம். படித்தவர்கள், வசதிபடைத்தவர்களிடையே சூழலியல் கரிசனம் விலகி உள்ளது. யார்வீட்டு கல்யாணமோ என்ற அளவில்தான் உள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான விஷயம் பெரிதாகி, பிரச்னையான பின்னரே போராட்டங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் அரசு சூழலியல் பற்றிப் பள்ளிகளில் பாடமாக்கி இருக்கிறது. அதற்கான பாடப்புத்தகங்களும்; சூழலியல் பாடத்தை நடத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் இல்லை. சூழலியலை பாடமாக மட்டும் பார்க்கக்கூடாது. அது ஒரு விழிப்பு; பார்வைக்கோணம்; உலகைப்பற்றிய புரிதல்; உயிர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பு பற்றியதுதான் சூழலியல் கரிசனம். வறுமைக்கும் சூழலியல் கரிசனத்துக்கும் தொடர்புண்டு. எப்போதெல்லாம் சூழலியல் பாதிக்கப்படுகிறதோ அதனால் நேரடியாகவும், முதலிலும், அதிகமாகவும் பாதிக்கப்படுவது ஏழைகள்தான். காடுகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பின்புலத்தில் கேள்வி எழுப்ப வேண்டும். எல்லா வாழ்வாதாரங்களுக்கும் காடுகள்தான் அடிப்படை. மலைகளையும், காடுகளையும் அழித்துவிட்டால், நீராதாரங்கள் அழிந்துவிடும். காடுகளை அழித்ததன் பலன், நீர் நிலைகள் வறண்டு விட்டன. நதிகள், பூமியின் தழும்புகளாக மாறிவிட்டன. கானகத்தின் பல மரங்கள் இன்னும் பட்டியலிடப்படவே இல்லை. மனிதன் உண்ணும் உணவுகளில் 85 சதவீதத்தை எட்டுவகையான பயிர்களில் இருந்துதான் பெறுகிறோம். காடுகளைப் பாதுகாத்தால், கூடுதலான தாவரங்களில் இருந்து வேறு வகையான உணவுகளைப் பெற முடியும். உணவுத்தட்டுப்பாடு தவிர்க்கப்படும். பல நோய்களுக்கு மருந்து கிடைக்கும். தேவையற்று நதிகளை இணைப்பது குறித்து சிந்திப்பது இயற்கைக்கு எதிரானது. பின் எவ்வாறு, தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வது என்ற கேள்வி எழும். காடுகளை மீட்டெடுத்தல், மழை நீர் சேகரிப்பு போன்ற உள்ளூர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேரணைகள் கட்டுவது, நதிநீர் இணைப்பு போன்றவை உள்ளூர் முயற்சிகளைத் தடை செய்யும். இவ்வாறு, சுற்றுச் சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் பேசினார்.
ஓசை நிர்வாகி காளிதாஸ் விருது ஏற்புரையில், "மாணவர்களிடையே ஓசை அமைப்பு இயற்கை குறித்த விழிப்புணர்வை விதைத்திருக்கிறது; தொடர்ந்து விதைத்தும் வருகிறது.வளர்ச்சித்திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. வளர்ச்சித் திட்டங்கள் பெயரில், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை, அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இளம் தலைமுறையினரிடையே சூழலியல் விழிப்புணர்வு அதிகரித்து வருவது நம்பிக்கையூட்டுகிறது,'' என்றார்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுனர் ராஜரத்தினம், தொழிற்சேவைப்பிரிவு இயக்குனர் விஸ்வநாதன், ரோட்டரி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வீட்டுக்கே வருகிறது "பைபர் ஆப்டிக் கேபிள்'; ஒரே இணைப்பில் போன், "டிவி', நெட்

http://img.dinamalar.com/data/large/large_135472.jpg
கோவை: கோவை நகர மக்களுக்கு, "டிவி' இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட் உள்ளிட்ட மதிப்புமிக்க சேவைகளை "பிராட் பேண்ட்' இணைப்பில் பி.எஸ். என்.எல்., நிறுவனம் அளிக்க வுள்ளது. "பைபர் ஆப்டிக் கேபிள்' இணைப்பை நேரடியாக வீட்டுக்கு அளித்து, இச்சேவையை சாத்தியமாக்கவுள்ளது. அதிநவீன தொலைத்தொடர்பு சேவையில், "பைபர் ஆடிக்கல் கேபிள்' வழியாக இணைப்பில் எளிதாக பல்வேறு சேவைகளை வழங்க முடியும். இந்த சேவையை, கோவை நகரில் முதலில் அறிமுகம் செய்துள்ளது. கோவை நகர மக்கள் இந்தசேவையை இனி எளிதாக பெற முடியும்.
இந்திய தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., "3ஜி' அலைவரிசையான, முகத்துக்கு முகம் பார்த்து பேசும் செல்போன் சேவையை சில மாதங்களுக்கு முன் கோவையில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து, தற்போது வீட்டுக்கு நேரடியாக பைபர் ஆப்டிக்கல் கேபிள் சேவையை அளிப்பதால், கோவை மக்கள் அதிநவீன தொலைத்தொடர்பு சேவையை பெற முடியும். இந்த பைபர் ஆப்டிக்கல் கேபிள் பைபர் வழியாக, ஒரே சமயத்தில் "டிவி' இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட், இன்டர்நெட் டெலிபோன், வீடியோ கான்பிரன்சிங் போன்ற சேவைகளையும் எளிதாக பெறமுடியும். இந்த சேவையை, "எப்.டி.டி.எச்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை அறிமுக துவக்க விழா, கோவை, புரூக் பீல்டு வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், எஸ்.பி., கண்ணன் முதல் இணைப்பை வழங்க, புரூக் பீல்டு இயக்குனர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில்,எஸ்.பி., கண்ணன் பேசியதாவது: தொலை தொடர்புத்துறையில் அடுத்த கட்ட நவீன தொழில்நுட்பமே பைபர் டி.டி.எச்., இணைய உலகில் "ஹேக்கிங்' போல, தொலைபேசியில் "பிரிகிங்' என்ற முறை உண்டு. தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது; "டேப்'செய்வது போன்றவையும் இதில் அடங்கும்.பைபர் ஆப்டிகல் தொழில்நுட்பத்தில் அதிவேகத்தில் டேட்டாக்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றை இடைமறிப்பதும் கூட கடினம். எனவே, தொலைபேசி உரையாடல்களை இடைமறிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும், என அரசுக்கு கோரியுள்ளோம். நவீன தொழில்நுட்பங்களை பொதுமக்கள் நாட்டின் மேம்பாட்டுக்காகவும், நல்ல செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
பைபர் டி.டி.எச்., சேவை குறித்து பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் மேத்யூ கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இச்சேவை துவங்குகிறது. முதலில் நகரப்பகுதிகளுக்கு வழங்கப்படும். பின், அனைத்து இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஒரே இணைப்பில் கேபிள் "டிவி'; பிராட்பேண்ட், தொலைபேசி இணைப்புகளை தனித்தனியாக ஒரே சமயத்தில் பெற முடியும். இதற்கான மோடத்தில் ஐந்து இணைப்புகளுக்கான இடம் விடப்பட்டிருக்கும். மூன்று சேவைகளை இவ்விணைப்புகள் வழியாக பெறலாம். எதிர்காலத்தில் கூடுதல் வசதிகளை பெற கூடுதலான இரு இணைப்புகள் விடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் எக்சேஞ்ச் வரை மட்டுமே பைபர் ஆப்டிகல் இணைப்பு இருந்தது. தற்போது வீடு வரை வருகிறது. பிராட்பேண்ட் திட்டத்தில் 500 ரூபாய் முதல் இச்சேவையில் பெற முடியும். டெலிபோனுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். வரும் முதல் தேதியில் இருந்து தரைவழித் தொலைபேசிக்கு வினாடிக்கு 27 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது. கேபிள் "டிவி'யைப் பொருத்தவரை இந்தியாவின் மிகத்துல்லியமான ஒளிபரப்பாக இருக்கும். 100 ரூபாய் முதல் வாடிக்கையாளர் விரும்பும் "பேக்கேஜை' தெரிவு செய்யலாம். இவ்வாறு, பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் மேத்யூ கூறினார்.
நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் முரளிதரன், துணைப்பொதுமேலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

விப்ரோ நிறுவனம் கல்விக்காக 2 பில்லியன் டாலர் உதவி

பெங்களூரூ: இந்தியாவின் முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம் இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்காக 2 பில்லியன் டாலர் நிதிஉதவி அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரான ஆசிம் பிரேம்ஜி ஆசிம் பிரேம்ஜி பவுண்டேசன் மூலம் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள கல்விநிலையங்களுக்கு வழங்குகிறார். இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 846 கோடியாகும். முதல் கட்டமாக சுமார் 700 கோடி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் ஆசம் பிரேம்ஜி பவுண்டேசன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பவுண்டேசன் மூலம் உருவாக்கப்படும் பல்கலை மூலம் 2011 கல்வி யாண்டில் 200 மாணவர்களும், அடுத்துவரும் நான்கு முதல் ஐந்தாண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் என உயரும் என பவுண்டேசன் அதிகாரிகள் தெரிவித்தனர்.