நேர மேலாண்மை இல்லையென்றால் வெற்றி பெற முடியாது ': திருச்சி அண்ணா பல்கலை. துணைவேந்தர்

திருச்சி,​​ ஜூன் 29
:​ நேர மேலாண்மையை கடைப்பிடிக்காத மாணவர்களால் எப்போதும் வெற்றி பெற முடியாது என்றார் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ​(பொறுப்பு)​ ருக்மணி.

​ ​ திருச்சி மணிகண்டம் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய கல்லூரி பேராசிரியர்களுக்கான மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:

​ ​ ​ 'ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மத்தியிலும்,​​ சமுதாயத்திலும் மிகவும் மதிப்பு உள்ளது.​ மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடங்களை நடத்தி அவர்களிடம் மேலும் மதிப்பை பெற வேண்டும்.

​ ​ ​ ஒரு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ நன்றாக பாடம் நடத்தும் ஆசிரியர்களையும்,​​ மோசமாகப் பாடம் நடத்தும் ஆசிரியர்களையும் மாணவர்கள் வாழ்க்கை முழுவதும் மறப்பதில்லை.​ ​ ​ ​ கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மட்டும் படிப்பது அல்ல.​ வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருப்பது.​ தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டுமே ஆசிரியர்கள் நடத்தக் கூடாது.​ ​ ​ நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்முறை,​​ கல்வியையும் மாணவர்களுக்கு அளித்தால்தான் அவர்களை நல்ல தொழில்முனைவோராகவும்,​​ நல்ல ஊழியர்களாகவும் உருவாக்க முடியும்.

​ ​ நமது நாடு சுதந்திரம் அடைந்த போது 20 பல்கலைக்கழகங்களே இருந்தன.​ அப்போதைய பொறியியல் மாணவர்களின் எண்ணிக்க ஒரு லட்சம்.​ ஆனால்,​​ தற்போது 590 பல்கலைக்கழகங்கள் உள்ளன.​ ஒரு கோடியே 22 லட்சம் பொறியியல் மாணவர்கள் உள்ளனர்.

​ ​ பல்கலைக்கழகங்களும்,​​ தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களும் அதிகரித்தால் மட்டும் போதாது.​ அவர்கள் நல்ல பாடத் திட்டங்களை படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

​ ​ தனித்தன்மை,​​ தலைமைப் பண்பு,​​ கூட்டு முயற்சி,​​ படைப்பாற்றல் போன்றவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் கல்வி முறை அமைய வேண்டும்.​ குறிப்பாக,​​ மாணவர்களுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானது.

​ ​ ​ நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்காத மாணவர்களால் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது.​ மேலும்,​​ இந்த விஷயத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்' என்றார் அவர்.

​ ​ ​ விழாவில் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் கணேசன்,​​ இயக்குநர் ஜி.​ பாலகிருஷ்ணன்,​​ பொறியியல் கல்லூரி முதல்வர் வி.​ ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

​ ​ ​ 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில்,​​ ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கல்வியாளர்கள் ரோஸ் வித்ரோவ்,​​ ஜோ ராவ்சன்,​​ சீமா ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.​ ​ இதில் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் 60 பேர் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றனர்.

 

0 comments: