"எழுத்தறிவைப் போல சூழலியல் கரிசனமும் அவசியம்'

http://img.dinamalar.com/data/large/large_135465.jpg
கோவை: "எழுத்தறிவைப்போல் சூழலியல் கரிசனம் அனைவருக்கும் இருக்க வேண்டும்,'' என, சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் பேசினார். கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் ரோட்டரி கிளப் சார்பில், "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்புக்கு "போற்றுதலுக்குரிய சேவைக்கான விருது' வழங்கும் விழா, குப்புசாமிநாயுடு மருத்துவமனை ஜி.கே.டி., அரங்கத்தில் நடந்தது. கலெக்டர் உமாநாத், சுற்றுச்சூழலியல் ஆர்வலர் தியோடர்பாஸ்கரன் பங்கேற்று, விருதை வழங்கினர். தியோடர் பாஸ்கரன் பேசியதாவது:
சூழலியல் ஆர்வலர் அடைமொழி சிலருக்கு மட்டுமே உண்டு. ஆனால், "சூழலியல் கரிசனம்' அனைவருக்கும் இருக்க வேண்டும். எழுத்தறிவு போல, சூழலியல் கரிசனம் பொதுமக்களுக்கு அவசியம். படித்தவர்கள், வசதிபடைத்தவர்களிடையே சூழலியல் கரிசனம் விலகி உள்ளது. யார்வீட்டு கல்யாணமோ என்ற அளவில்தான் உள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான விஷயம் பெரிதாகி, பிரச்னையான பின்னரே போராட்டங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் அரசு சூழலியல் பற்றிப் பள்ளிகளில் பாடமாக்கி இருக்கிறது. அதற்கான பாடப்புத்தகங்களும்; சூழலியல் பாடத்தை நடத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் இல்லை. சூழலியலை பாடமாக மட்டும் பார்க்கக்கூடாது. அது ஒரு விழிப்பு; பார்வைக்கோணம்; உலகைப்பற்றிய புரிதல்; உயிர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பு பற்றியதுதான் சூழலியல் கரிசனம். வறுமைக்கும் சூழலியல் கரிசனத்துக்கும் தொடர்புண்டு. எப்போதெல்லாம் சூழலியல் பாதிக்கப்படுகிறதோ அதனால் நேரடியாகவும், முதலிலும், அதிகமாகவும் பாதிக்கப்படுவது ஏழைகள்தான். காடுகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பின்புலத்தில் கேள்வி எழுப்ப வேண்டும். எல்லா வாழ்வாதாரங்களுக்கும் காடுகள்தான் அடிப்படை. மலைகளையும், காடுகளையும் அழித்துவிட்டால், நீராதாரங்கள் அழிந்துவிடும். காடுகளை அழித்ததன் பலன், நீர் நிலைகள் வறண்டு விட்டன. நதிகள், பூமியின் தழும்புகளாக மாறிவிட்டன. கானகத்தின் பல மரங்கள் இன்னும் பட்டியலிடப்படவே இல்லை. மனிதன் உண்ணும் உணவுகளில் 85 சதவீதத்தை எட்டுவகையான பயிர்களில் இருந்துதான் பெறுகிறோம். காடுகளைப் பாதுகாத்தால், கூடுதலான தாவரங்களில் இருந்து வேறு வகையான உணவுகளைப் பெற முடியும். உணவுத்தட்டுப்பாடு தவிர்க்கப்படும். பல நோய்களுக்கு மருந்து கிடைக்கும். தேவையற்று நதிகளை இணைப்பது குறித்து சிந்திப்பது இயற்கைக்கு எதிரானது. பின் எவ்வாறு, தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வது என்ற கேள்வி எழும். காடுகளை மீட்டெடுத்தல், மழை நீர் சேகரிப்பு போன்ற உள்ளூர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேரணைகள் கட்டுவது, நதிநீர் இணைப்பு போன்றவை உள்ளூர் முயற்சிகளைத் தடை செய்யும். இவ்வாறு, சுற்றுச் சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் பேசினார்.
ஓசை நிர்வாகி காளிதாஸ் விருது ஏற்புரையில், "மாணவர்களிடையே ஓசை அமைப்பு இயற்கை குறித்த விழிப்புணர்வை விதைத்திருக்கிறது; தொடர்ந்து விதைத்தும் வருகிறது.வளர்ச்சித்திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. வளர்ச்சித் திட்டங்கள் பெயரில், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை, அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இளம் தலைமுறையினரிடையே சூழலியல் விழிப்புணர்வு அதிகரித்து வருவது நம்பிக்கையூட்டுகிறது,'' என்றார்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுனர் ராஜரத்தினம், தொழிற்சேவைப்பிரிவு இயக்குனர் விஸ்வநாதன், ரோட்டரி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

0 comments: