large_19957 சென்னை : தமிழகத்தில், பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவிகளை விட, மருத்துவம் படிக்க விண்ணப்த்துள்ள மாணவியரின் சதவீதம் அதிகமாக உள்ளது.

பொறியியல் படிப்புக்கு வந்துள்ள மொத்த விண்ணப்பங்களில், 40 சதவீதத்தினரே பெண்கள். ஆனால், மருத்துவப் படிப்புக்கான மொத்த விண்ணப்பங்களில் 64 சதவீதம் மாணவிகளுடையது.

பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு இரண்டு லட்சத்து 2,133 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 1,234 பேர் (60.47 சதவீதம்) ஆண்கள்; 66 ஆயிரத்து 172 பேர் (39.53 சதவீதம்) பெண்கள்.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 18 ஆயிரத்து 115 பேரில், 6,422 பேர் (35.45 சதவீதம்) ஆண்கள்; 11 ஆயிரத்து 693 பேர் (64.55 சதவீதம்) பெண்கள். மருத்துவப் படிப்பில் ஆண்களை விட, பெண்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ள நிலையில், பொறியியல் படிப்பில் இது நேர்மாறாக உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 295 பேர் ஆண்கள்; மூன்று லட்சத்து 19 ஆயிரத்து 956 பேர் பெண்கள்.

பிளஸ் 2வில் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண்கள் தேர்ச்சி பெற்றிருந்தபோதும், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் பெண்கள் எண்ணிக்கை, ஆண்களை விட 20 சதவீதத்திற்கும் மேல் குறைவாக உள்ளது.வரும் 28ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை நடக்கவுள்ள முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில், 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 இடங்கள் நிரப்பப்படுகின்றன. மத்திய அரசு குழுவின் அனுமதி கிடைத்த பின், தர்மபுரி மருத்துவக் கல்லூரி மற்றும் திருவாரூர், விழுப்புரம் ஆகிய இரு புதிய மருத்துவக் கல்லூரிகளும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும்.

ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 348 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ்., இடங்கள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 778 பி.டி.எஸ்., இடங்களும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்.பொறியியல் கவுன்சிலிங்கில், மாநில அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 7,850 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. புதிய பொறியியல் கல்லூரிகள், பழைய கல்லூரிகளில் புது பாடப்பிரிவு மற்றும் கூடுதல் இடங்கள் மூலம், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் மேலும் 10 முதல் 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கக் கூடும்.ஒரு லட்சத்து 7,850 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என, முந்தைய பொறியியல் கவுன்சிலிங் அடிப்படையில் தெரிகிறது.கடந்த ஆண்டுகளில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதில்லை. கடந்த 2007ம் ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த 97 ஆயிரத்து 255 பேரில், 35 ஆயிரத்து 566 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவில்லை.அதேபோல, 2008ம் ஆண்டு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 401 பேரில், 46 ஆயிரத்து 259 பேரும், 2009ம் ஆண்டு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 918 பேரில், 43 ஆயிரத்து 822 பேரும் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. இதே நிலை இந்த ஆண்டும் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.