பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவரா? இதோ இலவச தொழில்நுட்ப பயிற்சி






சென்னை, ஜுன்.29, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, உடனடி வேலைவாய்ப்பு கிடைக்ககூடிய தொழில்நுட்ப பயிற்சிகளை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இலவசமாக அளித்து வருகிறது.

கிராமப்புறம் மற்றும் பள்ளிக் கல்வியை முழுமையாக அடைய இயலாத இளைஞர்களை பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்காக, இதுபோன்ற முறையான மற்றும் முறைசாரா பயிற்சிகளை சமுதாய பாலிடெக்னிக்குகளின் உதவியுடன் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

இதுகுறித்து சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் ச. மோகன் கூறியது:

உற்பத்தித் திறனைப் பெருக்க, பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதோடு, அவர்களுடைய பணித் திறனையும் மேம்படுத்துவது அவசியம். இதற்காக "தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் 50 கோடி மக்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்து, அவர்களைப் பொருளாதார ரீதியில் உயர்த்துவது. ஏற்கெனவே பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களின் திறனை மேம்படுத்த, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்துக்காக ஏராளமான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக, சமுதாய பாலிடெக்னிக்குகள் மூலம் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கு தையல், கூடை பின்னுதல் உள்ளிட்ட பயிற்சிகளும், ஆண்களுக்கு ஆட்டோமொபைல், மோட்டார் மெக்கானிக், சைக்கிள் ரிப்பேர் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும்.

தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் 300 சமூக பாலிடெக்னிக்குகள் இந்தப் பயிற்சிகளை அளித்து வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் 67 பாலிடெக்னிக்குகள் மூலமும், சென்னையில் அரசு தர்மாம்பாள் பாலிடெக்னிக் மற்றும் தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் ஆகிய இரண்டு பாலிடெக்னிக்குகள் மூலம் இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு சமுதாய பாலிடெக்னிக்கும், அவர்கள் பகுதியில் உள்ள பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களைக் கண்டறிந்து பயிற்சியில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சில பயிற்சிகளுக்கு மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பயிற்சிகளுக்கு கல்வித் தகுதி தேவையில்லை.

உதவித் தொகை: இந்தப் பயிற்சிகள் குறைந்தபட்சம் 45 நாள்களும், அதிகபட்சமாக 60 நாள்களும் அளிக்கப்படும். இவர்களுக்கு உதவித் தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 150 வரை உதவித் தொகையும் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சிகளை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உடனடியாக கிடைத்துவிடுகிறது. தொழில் நிறுவனங்கள் இதுபோன்று பயிற்சி பெற்றவர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்கின்றனர்.

எப்படி தொடர்பு கொள்வது? இந்த பயிற்சிகளை பெற பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், நேரடியாக சமுதாய பாலிடெக்னிக்குகளை தொடர்பு கொள்ளலாம். அல்லது தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் வி.கே. நடராஜனை 044 - 22545482 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.


 

0 comments: