அடையாளம் தெரியாதவர் பரிசு மூளை வளர்ச்சி பாதித்த இந்திய சிறுவனுக்கு லேப்டாப்

கோலாலம்பூர், ஜூன் 30:
மூளை பாதிப்பு அடைந்துள்ள இந்திய சிறுவனின் ஆசையை நிறைவேற்ற, அடையாளம் தெரியாத ஒருவர் லேப்டாப் பரிசு அளித்துள்ளார்.
மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த ரவி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் விக்னேஷ் என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை மூளை பாதிப்பு நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளான். கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்தன்று, விக்னேஷை தி ஸ்டார் நியூஸ் பேப்பர் பேட்டி கண்டது.
அப்போது அவனது தந்தை எனது குழந்தை மூளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் சக வயதுடைய மற்ற குழந்தைகள் போன்று செயல்பட முடியாது. அவனது கை விரல்களால் பேனா, பென்சிலை பிடித்து எழுத முடியாது. அவன் கம்யூட்டரில் கேம் விளையாட அதிகம் விரும்புவான். ஆனால் கம்யூட்டர் வாங்குவதற்கான போதிய வருமானம் எனக்கு இல்லை என்பதால், அவனது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் அவனுக்கு கம்யூட்டர் வாங்கி கொடுப்பதே எனது அடுத்தகட்ட முயற்சியாக உள்ளது என்றார்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத ஒரு நபர், விக்னேஷை பேட்டி கண்ட தி நியூஸ் ஸ்டார் பேப்பர் விலாசத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் லேப்டாப் ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார். பின்னர் அந்த லேப்டாப்பை அந்நிறுவனம் ரவியிடம் சேர்த்துள்ளது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை ரவி கூறுகையில், பரிசாக கிடைத்த லேப்டாப்பை கண்ட என் மகன் வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சியை அடைந்துள்ளான். அவனது இந்த மகிழ்ச்சிக்கு காரணமான அடையாளம் தெரியாத மனிதருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் என் மகன் ஆசைப்பட்டதை நான் வாங்கி கொடுக்க முடியவில்லையே என்கிறபோது சிறிய மனவருத்தம் ஏற்படுகிறது. இருந்தாலும் விக்னேஷ் மகிழ்ச்சியாகவே இருக்கிறான் என்றார். லேப்டாப்பை பரிசாக அளித்த அந்த நபர் அதில் குறிப்பிட்டுள்ள சில விவரங்கள் வருமாறு:
நான் முன்னர் கஷ்டப்படும் போது எனது குடும்பத்தினர் மற்றும் சிலர் அதிக அளவில் எனக்கு உதவி செய்தனர். அந்த நன்றி கடனை திருப்பி செலுத்தும் வகையிலேயே இந்த உதவியை செய்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். முகம் தெரிந்தவர்களுக்கே உதவி செய்ய முன்வராத நபர்கள் இருக்கும் இந்த கால கட்டத்தில், சுய விளம்பரம் தேடிக் கொள்ளாமல் உதவி செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது

 

0 comments: