பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் அர்ச்சகர் படிப்புக்கு சேர இளைஞர்கள் ஆர்வம்: 30 பேர் பெயர் பதிவு செய்தனர்

திருச்சி, ஜூலை, 1
தமிழக அரசு கோவில்களில் அனைவரும் அர்ச்சகராகலாம், தமிழில் அர்ச்சனை என்று திட்டத்தை அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ் அர்ச்சகராவதற்கான படிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
முதற் பேட்ஜ் முடித்தவர்கள் பதவி ஆணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது தமிழ் அர்ச்சகர் படிப்பிற்கு சேர இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று தமிழ் அர்ச்சகர் பிரிவு தொடக்க விழாவில் பல்கலைக்கழக வேந்தர் பொன்னவைகோ இதனை தெரிவித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு உள்ள அர்ச்சகர் பாடப்பிரிவில் 30 பேர் பதிவு செய்து உள்ளனர்.
கோவை மையத்தில் 80 பேரும், கரூர் கல்வி மையத்தில் 70 பேரும் பெயர் பதிவு செய்து உள்ளனர். 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும் 25 முதல் 75 வயது வரை உள்ளவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அதிகளவில், இதில் சேர ஆர்வம் காட்டுவதாக பொன்னவைகோ கூறினார்.
தமிழ் நாட்டிலும் தமிழ் அர்ச்சகர் வேலைவாய்ப்பு நூற்றுக்கணக்கான கோவில்களில் உள்ளது. அதே போன்று தமிழ் திருமறைகளான தேவாரம், திருவாசகம், தென் ஆப்ரிக்கா, மாலத்தீவு போன்ற நாடுகளிலும் பாடப்படுகின்றன. எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று பொன்னவைக்கோ கூறினார்.
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடந்த தமிழ் அர்ச்சகர் பாடப்பிரிவு தொடக்க விழாவில் கோவை மணிவாசகர் அருட்பணி மன்ற தலைவர் சென்னியப்பனார் மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை பெண்கள் கல்லூரி முதல்வர் சேகர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

0 comments: