ஆன்-லைனில் இன்ஜினியரிங் பொது நுழைவுத்தேர்வு

சி.பி.எஸ்.இ., தகவல்:

புதுடில்லி : அடுத்த ஆண்டு முதல் அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.,) பரீட்சார்ந்த முறையில் ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். நாட்டின் பெருமைமிக்க கல்வி நிறுவனங்களாக கருதப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.,), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி.,) ஆகியவற்றில் மாணவர்களை சேர்ப்பதற்கு, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தவிரவும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் குறிப்பிட்ட மாநில கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் மற்றும் கட்டடக்கலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையும், இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதால், இந்த நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

உள்நாடு மட்டுமின்றி, துபாய் மற்றும் சவூதி அரேபியா ஆகிய வெளிநாடுகளிலும் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக கருதப்படும் இதில், கடந்த ஆண்டு 12 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்.,) சேர்வதற்கு நடத்தப்படும் சி.ஏ.டி., நுழைவுத் தேர்வு, கடந்த ஆண்டு ஆன்-லைனில் நடத்தப்பட்டது. இதேபோன்று, இன்ஜினியரிங் பொது நுழைவுத் தேர்வையும் ஆன்-லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை (ஏ.ஐ.இ.இ.இ.,) ஆன்-லைனில் நடத்த சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. நாட்டின் 84 நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இன்ஜினியரிங் பொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், நாட்டின் 20 முக்கிய நகரங்களில் இத்தேர்வு ஆன்-லைனில் சோதனை முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கும் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.


 

0 comments: