2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : வரும் மூன்று மாதங்களில் உருவாகும்

http://img.dinamalar.com/data/large/large_117699.jpg

புதுடில்லி : "உணவுப் பொருள் விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வு போன்ற பிரச்னைகள் இருந்த போதிலும், இந்தியாவில் வேலைவாய்ப்புத் துறையில் திருப்திகரமான நிலைமை இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் சுகாதாரம், ஐ.டி., உள்ளிட்ட ஆறு துறைகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன' என்று பிரபல தொழிற்சேவை ஏஜன்சியான, "எர்னஸ்ட் அண்ட் யங்' நம்பிக்கை தெரிவித்துள்ளது.


அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வுகள் அவ்வப்போது வெளியிடப்படுவதை வைத்து, அங்கே மொத்த வளர்ச்சி குறித்த மதிப்பீடு செய்யப்படும்.மேலும், ரிசர்வ் வங்கி அடுத்த இரு நாட்களில் அறிவிக்க இருக்கும் வட்டி விகிதம் கடன் வசதிக் கொள்கையில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அதை பிரதிபலிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் பிரணாப், நேற்று தன் சொந்த ஊரான ஜாங்கிபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும், அதே சமயம் வளர்ச்சி தொடரும் வகையிலும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை அமையும்' என்று கூறியுள்ளார்.மேலும், வேலைவாய்ப்பு இனி நாட்டில் அடுத்த மூன்று மாதங்களில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதற்கு பதிலளிக்கும் விதமாக இத்துறையில் வல்லுனரான, "எர்னஸ்ட் அண்ட் யங்' அமைப்பின் இந்தியப் பிரிவின் தலைவர் என்.எஸ்.ராஜன் கூறியதாவது: இந்தியாவில் பொருளாதாரம் நிலையாக உள்ளது. அதன் அடையாளமாக மொத்த வளர்ச்சி அதிகரித்து வருகிறது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இந்திய நிறுவனங்கள், அதிகளவில் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளன.சுகாதாரம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) மற்றும் அதைச் சார்ந்த துறைகள், கல்வி மற்றும் பயிற்சி, உற்பத்தி, வங்கி நிதிச் சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் (பி.எப்.எஸ்.ஐ.,) என ஆறு துறைகளில் மொத்தம் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் இன்னும் மூன்று மாதங்களில் உருவாகும் .சுகாதாரத் துறையில் 60 ஆயிரம், ரியல் எஸ்டேட்டில் 50 ஆயிரம், கல்வி மற்றும் பயிற்சித் துறையில் 30 ஆயிரம், உற்பத்தி மற்றும் பி.எப்.எஸ்.ஐ., துறைகளில் தலா 20 ஆயிரம் என மொத்தம் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இதனால் கிடைக்கும்.


அடுத்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு ஐந்து லட்சம் பணியாளர்கள் தேவை.பொதுத் துறை நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளன. இந்த அளவு வேலைவாய்ப்பு ஏற்படும் என்பதற்கு காரணம், இந்திய மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம், கிராமங்களில் அரசுத் திட்டங்களால் ஏற்பட்ட வளர்ச்சி ஆகும். அதே சமயம், கல்வித் துறையில் அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

 

0 comments: