வகுப்பறையில் மாணவர்களை வசப்படுத்துவது எப்படி?

"ஆசிரியர் பணி அறப்பணி... அதற்கு உன்னை அர்ப்பணி' என ஆசிரியர் பணியின் பெருமையை பறைசாற்றும் வாக்கியங்கள் பல உண்டு. இன்றைய காலகட்டத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களை பாடங்களில் கவனத்தை செலுத்து வைத்து, தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வைப்பதில், ஆசிரியர்களின் பணி மகத்தானது.

மாணவ பருவத்தில் எந்நேரமும் விளையாட்டு உணர்வு மேலோங்கி நிற்கும். அதிலிருந்து மாணவர்களை திசைதிருப்பி, வகுப்பறைகளில் போதிக்கும் கல்வியை கற்று கொள்ள வைப்பதற்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர்கள் அடித்தால் கூட மாணவர்களோ, பெற்றோர்களோ, "பையன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் அடிக்கின்றனர்,' என எடுத்து கொண்டனர். தற்போது எக்காரணம் கொண்டும் மாணவர்களை, ஆசிரியர்கள் அடிக்க கூடாது என அரசு சட்டம் கொண்டு வந்து விட்டது. தவறு செய்யும் மாணவர்களை கூட தண்டிக்க முடியாத நிலையில், பள்ளி நிர்வாகங்கள் அவர்களை படிக்க வைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.

வகுப்பறைகளில் மாணவர்களை வசப்படுத்துவது குறித்து மதுரை மகாத்மா பள்ளிகளின் மூத்த முதல்வர் பிரேமலதா கூறியதாவது:முக மலர்ச்சியுடன் இன்முகத்துடன் மாணவர்களை ஆசிரியர் வரவேற்கும் பட்சத்தில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிப்பை துவங்குவர். ஆசிரியர்கள் இரண்டாம் தாயாக மாறி மாணவர்களிடம் உள்ள நிறை, குறைகளை முன்கூட்டியே அறிந்து, அதற்கு தீர்வு காண வேண்டும். ஏதேனும் ஓர் இடத்தில் குறையோ, குற்றமோ, தவறோ இருந்தால், ""எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான் மண்ணில் பிறக்கும் வரை'' என்பதை உணர்ந்து, தாய்மை உணர்வுடன் அவர்களை அணுக வேண்டும்.மாணவர்களிடம் குறைகளை சொல்லும் போதும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தாமல், "கண்ணே, மணியே' என்ற இனிமையான சொற்களை பயன்படுத்தி, அவர்களை நல்வழிக்கு கொண்டு வர வேண்டும். அவர்கள் விரும்பும் வகையில் அவர்களது குறைகளை உணர செய்ய வேண்டும்.வகுப்பறைகளில் அனைத்து மாணவர்களையும் வட்டமாக அமர வைத்து, நண்பர்களாக மாறி மனம் திறந்து பேசும் போது, கண்டிப்பாக மாணவர்களை ஆசிரியர்கள் வசப்படுத்திட முடியும். பாடத்திட்டம், மாணவர்கள் சார்ந்த கல்வியாகவும், அவர்களை மையமாக வைத்து கற்பிக்கும் வண்ணமுமாக அமைய வேண்டும். பாடங்களை நேர்த்தியாகவும், அழகாகவும் கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு தான் படிக்கிறோம் என்ற உணர்வு வராத வண்ணமும், படிப்பில் முழுமையாக ஈடுபாடு வரும் வண்ணமும், கற்பிப்பதில் சிறந்த அணுகு முறையை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும். பாடங்களை கற்பிப்பதோடு, தியாக உணர்வுடனும், தன்னலமற்ற மனப்பான்மையுடனும் மாணவர்களுக்கு நீதி, மனித நேய கருத்துக்கள், ஒழுக்க நெறிகள் போன்றவற்றையும் போதிக்கும் ஆசானாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

என்ன ஆசிரியர்களே, இனி மாணவர்களை வசப்படுத்தி விடலாம் அல்லவா?

 

0 comments: