அரசுப் பள்ளிகளுக்கு 4,944 கூடுதல் வகுப்பறை

கட்டாய கல்விச் சட்டம் எதிரொலி:
கோவை : தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 4,944 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது, 61 துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது போன்ற திட்டங்களுக்கு துணை பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இயற்றப்பட்டுள்ள கட்டாய கல்விச் சட்டம் அமலுக்கு வந்து விட்டதால், மாணவர்கள் கல்வி கற்க தடையாக உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண மத்திய அரசு முடிவு செய்துள்ளது. போதுமான கழிப்பறைகள் இல்லாததாலோ, வகுப்பறைகள் இல்லாததாலோ கூட பள்ளிக்கு மாணவர்கள் வருவது தடைபடக் கூடாது என்பதற்காக, அனைத்து தடைகளையும் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் - மாணவர் விகிதமும் மாற்றியமைக்கப்படவுள்ளதால், ஏராளமான ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய பட்ஜெட்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையை விட, துணை பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 4,944 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன. 61 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. மாணவியருக்கு தனியாக 7,625 கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. இதைத் தவிர, 370 பொது கழிப்பறைகளும் கட்டப்படுகின்றன. 434 பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டங்களை செயல்படுத்த கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு மட்டும் 20.34 கோடி ரூபாய் துணை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதான பட்ஜெட்டில் கட்டுமானப் பணிகளுக்காக 8.59 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணை பட்ஜெட் தொகையான 20.34 கோடி ரூபாயை பயன்படுத்தி, நான்கு துவக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. 323 கூடுதல் வகுப்பறைகள், 165 தலைமை ஆசிரியர் அறைகள், 495 கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. 12 பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 2010 - 2011ம் ஆண்டில் ஏற்கனவே 8.59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழையால் பாதிப்பு: கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, செங்கல் உற்பத்தி குறைந்துள்ளது. சிமென்ட், மணல், ஜல்லி விலை அதிகரித்துள்ளதால், கட்டுமானப் பணிகளை துரிதமாக முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மூட்டை 300 ரூபாய் ஆக இருந்த சிமென்டின் விலையை 50 ரூபாய் குறைப்பதாக தமிழக அரசு அறிவித்தாலும், சிமென்ட் குடோன்கள் 10 அல்லது 15 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளன.
ஆனாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் உதவியுடன் பற்றாக்குறை தொகையை ஈடுசெய்து, பணிகளை விரைந்து முடிக்க அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

 

0 comments: