பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்.சி.சி.,யில் சேர அழைப்பு

சென்னை: ""பள்ளி, கல்லூரிகளில் இன்னும் நிறைய மாணவர்கள் என்.சி.சி.,யில் சேர வேண்டும்,'' என என்.சி.சி., துணை பொது இயக்குனர்(டி.டி.ஜி.,) சர்தாஜ் இமாம் தெரிவித்தார். தேசிய மாணவர் படையினருக்கான(என்.சி.சி.,), தேசிய அளவிலான சிறப்பு பயிற்சி முகாம், கடந்த 25ம் தேதி முதல் 3ம் தேதி வரை டில்லியில் நடந்தது. இம்முகாமில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளின் என்.சி.சி., மாணவர்கள் 80 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு, வரைபடத்தைப் பற்றி தெரிந்து கொள்வது, உயரம் தாண்டுதல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் தேசிய அளவில் தமிழக மாணவிகள், இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணிக்கம், தடை தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற கீதா உள்ளிட்ட 11 பேர் பரிசுகளை பெற்றனர். இவர்களுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அவ்விழாவில், தேசிய மாணவர் படை இயக்குனரக துணை பொது இயக்குனர்(டி.டி.ஜி.,) சர்தாஜ் இமாம் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். அவர் பேசும்போது, ""துப்பாக்கி சுடுதலில் தமிழக மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்ற குறை இந்த ஆண்டு நீங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் தமிழக என்.சி.சி., மாணவர்கள் மேலும் சாதிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இன்னும் நிறைய மாணவர்கள் என்.சி.சி.,யில் சேர வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், என்.சி.சி., குரூப் ஏ கமாண்டர் சுனில் சர்மா, உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: