ஆபத்து என்றால் குரல் கொடுங்கள்: மன இயல் நிபுணர் அறிவுரை

கோவை: "பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளோம் எனக் கருதும் நிலையில் குழந்தைகள் காத்துக் கொள்ள அல்லது பிறரிடமிருந்து உதவி பெற சத்தம் போட வேண்டும்,'' என குழந்தைகள் மன இயல் நிபுணர் மோகன் ராஜ் கூறினார். கோவையில் சில நாட்களுக்கு முன் இரு குழந்தைகள் கடத்தி கொலை செய்யப் பட்டதை தொடர்ந்து குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் தோறும் நடந்து வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெக்குப்பாளையம் ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் "பெண் குழந்தைகள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது எப்படி!' என்பது குறித்து குழந்தைகள் மன இயல் நிபுணர் மோகன் ராஜ் பேசியதாவது:
பெண் குழந்தைகள் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் பேசத் தயங்கக் கூடாது. பெற்றோரிடமோ அல்லது தோழிகளிடமோ மனதில் உள்ள கருத்துக்களை சுதந்திரமாக பேச வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக் கும் துன்பங்கள் குறித்து மற்றவர்களுக்கு தெரியாது. பெண் குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பாற்ற தொடுதல் முறைகளை அடையாளம் காண வேண்டும். அருகில் வசிப்பவர், நண்பர், உறவினர் சில நேரங்களில் வீட்டில் இருப்பவர்கள் கூட உங்களை "பாதுகாப்பாற்ற முறையில்' தொடலாம். உடனடியாக அவர்களின் கண்களை பார்த்து "என்னை தொடாதே' என்று மிரட்டும் பாணியில் தெரிவிக்கலாம். மீறி தொட முயற்சித்தால் பலத்த சத்தம் போடலாம். மற்றவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பி, உடனடியாக உதவி பெற முடியும். உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு வரும் வழியில் சில டாக்சி, ஆட்டோ டிரைவர்கள், அதே போல பள்ளியிலும் சில நேரங்களில் இந்த பாதுகாப்பாற்ற தொடுதல் நிகழ்ச்சி நடக்கலாம். அதை உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தினமும் பள்ளியில் என்ன நடந்தது என்பதை நேரம் ஒதுக்கி கேட்க வேண்டும். அசாதாரண நிகழ்ச்சி நடந்து இருந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவற்றை குழந்தைகள் வாங்கி சாப்பிடக் கூடாது. பிஸ்கட், ஐஸ்கிரீம், சாக் லெட் போன்றவை ஏற்கனவே திறந்து மூடப்பட்டு இருப்பதை போன்று இருந்தால், அதை கட்டாயம் சாப்பிடக் கூடாது. அபாயகரமான சூழ்நிலையில் 1098 என்ற எண்ணுக்கு போன் செய்ய வேண்டும். அவர்கள் நிச்சயம் உதவுவார்கள். கூட்டத்தில் தொலைந்து போனால் போலீஸ் இருந்தால் அவர்களிடம் உங்கள் தாய், தந்தை, முகவரி, அவர்களின் மொபைல் எண்களை தெரிவியுங்கள். நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே உங்களுடைய மொபைல் எண்களை கொடுங் கள். புதிய நபர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் தந்தையின் மொபைல் எண்ணை கொடுங்கள். "மிஸ்டு கால்' கொடுக்கும் நபர்களிடம் பேச வேண்டாம். பயன்படுத்தாத "சிம்கார்டு' களை அழித்து விடவும் அல்லது அந்த மொபைல் நிறுவனத்தில் கூறி "சிம்கார்டு' செயல்படுவதை தடை செய்து விடவும். இவ்வாறு மோகன்ராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில், ஏ.வி.பி. பள்ளி தலைவர் சுப்பிரமணியம், தாளாளர் வெங்கடேஷ்வரன், இயக்குனர் குணசேகரன், முதல்வர் சந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: