கல்வி உதவித்தொகை திட்டம் : விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை : "கல்லூரி மற்றும் பல்கலையில் பட்டப் படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: கல்லூரி மற்றும் பல்கலையில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 1,000 ரூபாயையும், அவர்கள் தொடர்ந்து முதுகலை படிப்பு படிக்கும்போது மாதம் 2,000 ரூபாயையும் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசு அளித்து வருகிறது.
மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பயில்பவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 1,000 ரூபாயும், நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டிலிருந்து மாதம் 2,000 ரூபாயும் வழங்குகிறது. இந்த உதவித்தொகை பெற, மேற்கண்ட மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பதுடன், பெற்றோரின் ஆண்டு வருமானம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.tn.gov.in/dge) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

0 comments: