சிறு சேமிப்பு திட்டத்தில் மாணவர்கள் ஈடுபாடு : மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு

ஊட்டி : "தபால் துறையின் சிறுசேமிப்பு திட்டத்தில், மாணவ, மாணவியரை அதிகளவில் பங்குபெறச் செய்து, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்' என, அழைப்பு விடப்பட்டுள்ளது. ஊட்டி அருகே, அணிக்கொரை அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக சிக்கன நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜு பேசுகையில், ""சிறு சேமிப்பு, வாழ்வின் ஊன்றுகோல்; போலியான ஆடம்பரமாக வாழ்பவன், தன்னை சீரழித்துக் கொள்வதோடு, சமூகத்துக்கு ஆபத்தாக உள்ளான்,'' என்றார்.

தலைமை தபால் நிலைய அதிகாரி ராமன், சிறப்பு அழைப்பாளராக பேசுகையில், ""தபால் துறையின் சேமிப்பு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவ, மாணவியர், குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகளவிலான தொகை வரை, சேமிப்புத் திட்டங்களில் சேரலாம். தபால் துறையின் சேமிப்பு, நாட்டின் உள் கட்டமைப்பில் பயன்படுத்துவதால், இதில் முதலீடு செய்து தேச வளர்ச்சியில் பங்கு பெறலாம். கூடலூர், பந்தலூரில், செப்டம்பர் வரை 96 கோடியே 40 லட்சம் வரை, சிறு சேமிப்பு மூலம் பெற்றுள்ளோம்,'' என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள், அவசரத் தேவைக்கு தங்க நகைகளை அடகு வைத்து, அபராத வட்டி செலுத்தி நகையை இழப்பது, அன்றாடம் நடந்து வருகிறது. மது அருந்த செலவழிப்பது, கந்துவட்டியில் சிக்குவது, 10 சதவீதம் மட்டும் குடும்ப செலவுக்கு ஒதுக்குவது போன்ற அவலங்கள் மாற வேண்டும்.  அரசு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய, மக்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.


விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""சேமிப்பு, நமது கலாச்சாரத்துடன் இணைந்தது; குடும்பத் தலைவிகள் சேமிப்பின் அடித்தளம். உலகப் பொருளாதார வீழ்ச்சியில் தாக்குப் பிடித்தோம் என்றால், அதற்கு சேமிப்பு தான் காரணம். டெபிட், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றில் நூதன மோசடி நடந்து வருகிறது; இந்த ஆபத்தின் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும். தபால் துறையில் மாணவ, மாணவியரை, ஆசிரியர்கள் பங்கேற்கச் செய்து, ஊக்கத் தொகை வழங்கி மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்,'' என்றார்.
"நெஸ்ட்' அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில்,""மழைநீர் சேகரிப்பு, உலக வெப்பமயமாதலை தடுக்கும் வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்; காகிதப் பயன்பாட்டை குறைக்கும் பட்சத்தில், மரங்களை பாதுகாக்க முடியும்,'' என்றார்.


குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சங்கரன் பேசுகையில், ""எரிபொருள் சிக்கனம், சமையல் காஸ் சிக்கனம் அவசியம். உடற்பயிற்சி மூலம், மருத்துவச் செலவுகளை குறைக்கலாம்,'' என்றார். கம்ப்யூட்டர் ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசுகையில், ""நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பயன்பாடு பார்வையை பாதிக்கும்; தேவைக்கு மட்டும் கம்ப்யூட்டர் பயன்பாடு, மின் சிக்கனத்துக்கு வழி வகுக்கும்,'' என்றார்.எல்லநள்ளி உதவி மின் பொறியாளர் சந்தீஷ், மின் சிக்கன வழிமுறைகள் குறித்து விளக்கினார். பள்ளி மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.

 

0 comments: