விண்வெளியில் மனிதன்


இஸ்ரோ புதிய திட்டம்:


"நிலவில் உயிர் வாழ்வது தொடர்பான, "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என, "இஸ்ரோ' விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசினார். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, திருப்பூரில் இரண்டு நாட்கள் நடந்தது; 143 பள்ளிகளைச் சேர்ந்த 210 அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 10 ஆயிரம் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இதன் நிறைவு விழா, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.

இஸ்ரோ விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசியதாவது: தற்போது, 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி, மற்ற நாடுகளுக்கு முதன்மையாக இந்தியா விளங்குகிறது. விண்வெளி, செயற்கைக் கோள்களின் பயன், தேவை அதிகமானோருக்கு தெரிவதில்லை. ஆராய்ச்சியின் மூலம் நாட்டின் பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி மேம்படும்.

பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வெற்றி கண்டாலும், வரும் காலத்துக்கு இது போதாது. பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டாலும், நாம் செலுத்திய, "சந்திரயான்' நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முறையாக உறுதிப்படுத்தியது; உலக நாடுகளுக்கு நம்மை அடையாளம் காட்டியது. இதனால், பல நாடுகள் நம்முடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.

அடுத்ததாக, ரஷ்யாவுடன் இணைந்து புது திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது, நிலவில் விண்கலம் செலுத்தி, அதிலிருந்து ரோபோ 100 மீ., நடந்து சென்று, அங்குள்ள மண்ணை எடுத்து ஆராய்ச்சி செய்வது பற்றியது. இதில், கடுமையான சவால்கள் உள்ளன. மேலும், நிலவில் உயிர்வாழ்வது குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சத்தியபாமா, எஸ்.ஆர்.எம்., - ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஏவுகணை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரோ, அக்கல்லூரிகளுக்கு உதவி வருகிறது. யார், இதுபோல் முயற்சி எடுத்தாலும் இஸ்ரோ உதவ தயாராக இருக்கிறது. இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.

 

0 comments: