"கடவுளின் குழந்தைகளுக்கு கெட்ட எண்ணங்கள் இருக்காது'

ஊட்டி : ""பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு, கெட்ட எண்ணங்களும், பிறருக்கு கெடுதல் செய்யும் மனோபாவமும் இருக்காது; அவர்கள் கடவுளின் குழந்தைகள்,'' என, புலிகள் காப்பக கள இயக்குனர் நெகிழ்ச்சி தெரிவித்தார். நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) சார்பில், தீபாவளி திருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி தாவரவியல் பூங்கா அருகேயுள்ள, காது கேளாதோர் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நடத்தப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ""பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு, எவ்வித கெட்ட எண்ணங்களும், பிறருக்கு கெடுதல் செய்யும் மனோபாவமும் இருக்காது; அவர்கள் கடவுளின் குழந்தைகள். அவர்களிடம் அன்பு செலுத்தும் பட்சத்தில், கடவுளின் ஆசியை நாம் நேரடியாக பெறலாம்.


மாற்றுத் திறனாளிகளிடம் அன்பு செலுத்துவதற்கு, அனைவரும் முன்வர வேண்டும்; அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதை தொடர வேண்டும்; அப்போது, நிச்சயமாக நம் வாழ்வு சிறக்கும்,'' என்றார். "நெஸ்ட்' அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் பேசியதாவது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள பாதுகாப்பு செயல் திட்டங்களை கடைபிடிக்க வேண்டும்; அதீதமான ஒலிகள், செவிகளின் கேட்கும் திறனை பாதிக்கும். வனம் சூழ்ந்த பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்காமல், வன விலங்குகளுக்கும் வனத்துறை சார்ந்து வசிக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் பயமற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும்.


தொடர் வெடிகள், சிறு குழந்தைகளுக்கு பய உணர்வை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள், இருதயம் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களை, அதிக வெடிச்சத்தம், நச்சுப் புகை பாதிக்கச் செய்யும். மின்சார உபகரணங்கள் உள்ள இடங்கள், மருத்துவமனை, அமைதி காக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள் பட்டாசு கொளுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; திறந்தவெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் உடைகளை அணிந்து, பட்டாசு கொளுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளை பயமுறுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளியை, பாரம்பரிய தன்மையோடு, வண்ணமயமான ஆனந்த திருநாளாக கொண்டாட வேண்டும். இவ்வாறு, சிவதாஸ் பேசினார். ஊட்டி உதவும் கரங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், கிரசன்ட் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கிரசன்ட் பள்ளி, நிர்மலா மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியரின் ஓவியம், பார்வையாளர்களை கவர்ந்தது.

 

0 comments: