டிச.3 மாற்றுத் திறனாளிகள் தினம் : மாநில விருதுகளுக்கு வரவேற்பு

சென்னை : டிச., 3 ல் மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுவதால், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியவர்கள் மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் டிச., 3 ல், "அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் தமிழகத்தில் டிச., 3 ல் மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத் திறன் படைத்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களும், அவர்களுக்காக சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகளும் வழங்கப்படும். மிகச் சிறப்பாக பணியாற்றி சுயதொழில் புரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள், மிகச் சிறந்த முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், மிகச் சிறப்பாக மறுவாழ்வு உதவிகளை அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். இவ்விருதுகளுக்காக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நவ., 10 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது சென்னையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்திலோ கிடைக்கும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 comments: