கவர்ச்சி விளம்பரங்களில் ஏமாறக் கூடாது!

குன்னூர் : "இலவசம், பரிசு, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற விளம்பரங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து பொருள் வாங்குவது நுகர்வோரின் கடமை' என, நுகர்வோர் மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றக் கூட்டம் நடத்தப்பட்டது.


குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சபாபதி, சிறப்பு விருந்தினராக பேசியதாவது: ஒவ்வொரு நுகர்வோருக்கும் பாதுகாப்பு, தகவல் பெறுவது, தேர்வு செய்வது, முறையிடுவது, குறை தீர்ப்பது, நுகர்வோர் கல்வி பெறுவது, தூய்மையான சுற்றுச்சூழலை பெறுவது, அடிப்படை தேவைகளை பெறுவது என பல உரிமைகளை, 1986ம் ஆண்டைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழங்கியுள்ளது.


அன்றாட வாழ்வில் நமக்குள்ள பாதுகாப்பு உரிமைகளை, நுகர்வோர் அறியாமல் இருப்பதால், "டிவி' மற்றும் ஊடகங்களில் வரும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், தள்ளுபடி போன்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, உடலுக்கு கேடு விளைவிக்கும் மற்றும் பாதுகாப்பற்ற பொருட்களை வாங்குகின்றனர்.


தேவையற்ற செலவுகளை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்; தேவைக்கு மீறி பொருள் சேர்க்கக் கூடாது; கவர்ச்சி விளம்பரங்களை நம்பக் கூடாது; பொருட்களை வாங்கும் போது, தரம், எடை, வீரியம், விலை, காலாவதி ஆகும் நாள் ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்; ஐ.எஸ்.ஐ., மற்றும் "அக்மார்க்' முத்திரையுள்ள தரமானப் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்; எந்தவொரு பொருள் வாங்கினாலும், ரசீது பெற வேண்டும்.


இலவசம், பரிசு, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற விளம்பரங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, ஒரு பொருளை வாங்குவதும், ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருப்பதும் நுகர்வோரின் கடமை. இவ்வாறு, சபாபதி பேசினார்.


கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியை சுஜாதா, ஊட்டி - குன்னூர் சாலையில் காணிக்கராஜ் நகர் சாலையில் ஏற்பட்ட பாதிப்பு, வழித்தடத்தில் "எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது, நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.


நுகர்வோர் சங்க செயலாளர் சபாபதி, ""கடந்தாண்டு நவம்பரில் பொழிந்த மழையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட காணிக்கராஜ் நகர் சாலையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது; அதை கட்டிய கான்ட்ராக்டர் குறித்த விபரம், தரமானப் பொருட்களை கொண்டு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதா? என்ற விளக்கம், நீர் தேங்காமல் வடிகால் வசதியுடன் தடுப்புச் சுவர் அமைக்கப்படாததற்கான காரணம் என பல விளக்கங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின் கீழ் கேட்கப் பட்டுள்ளது.


ஊட்டி - குன்னூர் வழித்தடத்தில் "எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தில் பஸ் இயக்கக் கூடாது என்ற கோரிக்கையை, போக்குவரத்து கழக அதிகாரிகள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என்றார்.

 

0 comments: