பள்ளிகளில் கட்டாய காமிரா : போலீஸ் உத்தரவு

http://img.dinamalar.com/data/large/large_118148.jpg

சென்னை: சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருவதால் நகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும் என்றும் பள்ளிகளில் குழந்கைள் கடத்தலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் கூறியுள்ளார்.


தீபாவளியையொட்டி சென்னை பூக்கடை பகுதியில் 28 இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு, 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் துவக்க விழா இன்று நடந்தது. கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது; பூக்கடையில் பத்திரியன் தெரு, பந்தர்தெரு, மலைய பெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, அமரசன் தெரு, பிராட்வே பஸ்நிலையம் உள்ளிட்ட 28 இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை அமைத்துள்ளோம். தீபாவளி முடிந்த பிறகும் தொடர்ந்து இயங்கும். 24 மணி நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.


கோயம்பேடு பஸ்நிலையத்தில் போலீசார் மாறு வேடத்தில் நின்று ஆய்வு செய்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பவர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்படுவார்கள். தி.நகரில் நேற்று ஒரு நாளில் 10 லட்சம் பேர் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்கி சென்றுள்ளனர். கோவையில் 2 குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து பள்ளிகளின் வாசல்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறோம்.


ஆனால் பல பள்ளிகளில் இன்னும் கண்காணிப்பு காமிரா பொருத்தவில்லை. எனவே கட்டாயம் கேமரா பொருத்த வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் பெற்றோர் சங்கங்களை அழைத்து பேச இருக்கிறோம். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பும் ஆட்டோ, வேன் டிரைவர்கள் பற்றிய முழு விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

 

0 comments: