தென்தமிழகத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க நல்ல வாய்ப்பு

தூத்துக்குடி : ""தென்தமிழகத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இதைப் பயன்படுத்தி, சூரிய ஒளி மூலம் அதிக மின்சாரம் தயாரிக்க நல்ல வாய்ப்பு உள்ளதாக,'' தமிழக அரசின் எரிசக்தி வளர்ச்சி முகமை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர், கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்தார். தூத்துக்குடியில் நேற்று, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக, "சூரிய சக்தியின் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் எட்வின் சாமுவேல் வரவேற்றார். அதன், சூரிய சக்தி பிரிவு தலைவர் ரமேஷ் கைமல் தலைமை வகித்தார்.


கருத்தரங்கில், கிறிஸ்துதாஸ் காந்தி பேசியதாவது: இன்னும் 20 முதல் 50 ஆண்டுகளில் நிலக்கரி இல்லாமல் போகலாம். எனவே, சூரியன் மற்றும் காற்றிலிருந்து அதிகளவு மின்சாரம் தயாரிப்பது அவசியம். தமிழகத்தில் நிலக்கரி, எரிபொருள் உள்ளிட்டவை மூலம், தற்போது 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், காற்றாலை மூலம் 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய ஒளிமூலம் இந்தாண்டு 1,000 மெகாவாட் மின்சாரமும், அடுத்த 10 ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது குறைவாக உள்ளது. இம்முறை, பெங்களூரில் அதிகம் உள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழகத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவுள்ளதால், இங்கு சூரியஒளியை பயன்படுத்தி அதிக மின்சாரம் தயாரிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.


இதுதவிர சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் , சூரிய நீராவி மூலம் சமைப்பது உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இயங்கும் பிரிஜ்ட்கள் தற்போது, தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளன. அங்கு, அவை மருந்துகளை பாதுகாக்க பயன்படுகின்றன. சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து அதை வீட்டு விளக்குகள், தெருவிளக்குகளில் பயன்படுத்தலாம். தேவையான உபகரணங்களைஅமைத்து சூரிய ஒளிமூலம், குறைந்தளவு 50 கிலோ வாட், 100 கிலோ வாட் முதல் ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கலாம். இதுபோல, ஊராட்சியில் ஐந்து ஏக்கர் நிலத்தில் 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இவற்றிக்காக, குறிப்பிட்ட அளவு தொகை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம், என்றார்.

 

0 comments: