பொதுப்பிரச்னையில் மாணவர்களை ஈடுபடுத்தாமல் தவிர்க்க "அட்வைஸ்'

திருப்பூர்: ""பள்ளி மாணவர்கள் தொடர்புடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண மாணவர்களை நேரடியாக ஈடுபடுத்த தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக்கூடாது,'' என முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 925 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், 294 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. 125 உயர்நிலை மற்றும் 138 மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. பள்ளி மற்றும் மாணவர்கள் தொடர்புடைய பிரச்னைகளில் ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களை ஈடுபடுத்தி, தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியை மேற்கொள்கின்றனர். சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போரட்டங்களிலும், மாணவர்களை ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, சிறு பிரச்னைகளுக்கும் போராட்டத்தில் ஈடுபடும் குணத்தை இதுபோன்ற சம்பவங்கள் மாணவர்கள் மனதில் ஏற்படுத்துகிறது. இதேபோல், கடந்த வாரம் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதை கலெக்டர் சமயமூர்த்தி கண்டித்தார். இதையடுத்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொடக்க கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கவும், தலைமை ஆசிரியர் கூட்டங்களிலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கவும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில்,""பள்ளிகளில் இருந்து மாணவர்களை இதுபோல் வெளியே அனுமதிக்கக் கூடாது என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பிரச்னையாக இருந்தாலும், தலைமை ஆசிரியரோ, பெற்றோரோ அல்லது பொதுமக்கள் தான், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து மாணவர்களை பள்ளி சீருடையில் அழைத்து வருவதை பெற்றோரும் தவிர்க்க வேண்டும். கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

 

0 comments: