மனிதனின் பெருமை பதவியில் இல்லை: ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பேச்சு

http://img.dinamalar.com/data/large/large_117667.jpg

கோவை : ""ஒரு மனிதனின் பெருமை, அவன் வகிக்கும் பதவியில் இல்லை; அந்த பதவியை கொண்டு அவன் சேவையில் இருக்கிறது,'' என, ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் பேசினார்.

பணியில் சிறந்த போலீசாருக்கு விருது வழங்கும் விழா கோவை ரோட்டரி கிளப் சார்பில், தொழில் மற்றும் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. போலீசாருக்கு விருது வழங்கி, தேசிய மின், ஆற்றல் மற்றும் இயற்கை வாயு தீர்ப்பாயம் தலைவரும், ஜார்க்கண்ட் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுமான கற்பகவிநாயகம் பேசியதாவது:ஐ.ஜி., அந்தஸ்தில் இருப்பவர்கள், "ஏசி' அறையில் இருந்து கொண்டு உத்தரவு பிறப்பிக்கலாம். களத்தில் பணியாற்றுவது கீழ்நிலை காவலர்கள்தான். அவர்கள் நினைத்தால் சிவில் வழக்கை கிரிமினல் வழக்காகவும், கிரிமினல் வழக்கை சிவில் வழக்காகவும் மாற்ற முடியும். சாதாரண கான்ஸ்டபிளாக இருந்தாலும், சிறந்த கான்ஸ்டபிள் என்ற பெயர் பெற முயற்சிக்க வேண்டும்.போலீசார் நினைத்தால் ஒரு பிரச்னையை சுமுகமாக தீர்க்கவும் முடியும்; ஒரு பிரச்னையை உருவாக்கவும் முடியும். நேர்மையாக பணியாற்றினால், ஓய்வு காலம் நிம்மதியாக இருக்கும். போலீசாரின் குழந்தைகள் மதிக்கப்படுவார்கள்; சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் மதிப்பையும் பெற முடியும்.காற்றை எதிர்த்து போராடியே காற்றாடி சுழல்கிறது; விண்ணை எதிர்த்து போராடியே விமானம் பறக்கிறது. மண்ணை எதிர்த்துப் போராடியே விதை முளைக்கிறது;


அலைகளை எதிர்த்துப் போராடியே ஓடம் நகர்கிறது. அநியாயத்துக்கு எதிராக போராடினால்தான் உலகம் அங்கீகரிக்கும். போராடும் குணம் என்பது, நம் உணர்வோடு ஒன்றித்திருக்க வேண்டும். குடும்பங்களை சேர்க்கவும், பிரிக்கவும் போலீசாரால் முடியும். அதற்காக கட்ட பஞ்சாயத்து செய்யாதீர்கள்; கனிவான பஞ்சாயத்து செய்யுங்கள். இன் றைக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் பணிக்கு செல்லுங்கள். இன்று வீட்டுக்கு ஏதாவது கொண்டு போக வேண்டுமென்று பணியாற்றாதீர்கள். எங்கே, எந்த சூழலில் பணியாற்றினாலும் நேர்மையாக இருங்கள்.நமது கரங்கள், பாறையை தூக்கும்போது பாறையாகவும், மலர்களை தூக்கும்போது மலர்களாகவும் இருக்க வேண்டும்; அதேபோல, ரவுடிகளைக் கையாளும்போது நீங் கள் ரவுடிகளாக மாறுவதில் தவறில்லை. சாதாரண மனிதர்களை கையாளும்போது, சாதாரண மனிதராக மாற வேண்டும். காக்கிச்சட்டை அணியும் போது, இதயத்தை கழற்றி வைக்க வேண்டுமென்ற வாக்கை நீங் கள் பொய்யாக்க வேண்டும்.


போலீசார் நேர்மையாய் இருப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால், நீங்கள் நேர்மையாக இருப்பது தெரிந்தால் உங்கள் மேலதிகாரியே உங்களை நிர்ப்பந்திக்க மாட்டார். சட்டத்தையும், மனசாட்சியையும் விட யாரும் பெரியவர் இல்லை. ஓய்வு பெறுவதற்கு முன், "எப்ப போவான்' என்று யாரும் நினைக்காமல், "நீங்க போறீங்களா...' என்று கவலையோடு கேட்டால், அதுதான் உண்மையான விருது.காவல்துறையில் கெட்ட விஷயங்களைச் செய்யும் சூழல் நிறைய வரும். நல்லவர்களை கைது செய்ய வேண்டியிருக்கும். எல்லா வழக்குகளும் ஜெயித்து விடாது; அதற்காக நம் முயற்சியைக் கை விட்டு விடக்கூடாது. முயற்சி மட்டுமே நம் கையில்; முடிவு ஆண்டவன் கையில். குறிக்கோள், உழைப்பு, முயற்சி, ஒழுக்கம், அடக்கம் இருந்தால் எந்தத் துறையிலும் தலைமையிடத்துக்கு வர முடியும்.சான்றிதழுக்காக வேலை செய்தால் அந்த வேலையை நன்றாக செய்ய முடியாது; வேலையை நன்றாகச் செய்தால், சான்றிதழ் தானாக வரும். ஒரு மரத்தின் பெருமை, உயரத்தில் இல்லை; அதன் பலனில் இருக்கிறது. ஒரு மலரின் பெருமை, அதன் நிறத்தில் இல்லை; மணத்தில் இருக்கிறது. ஒரு மனிதனின் பெருமை, பதவியில் இல்லை; பதவியைக் கொண்டு அவன் சேவை செய்வதில் இருக்கிறது.இவ்வாறு, நீதிபதி கற்பகவிநாயகம் பேசினார்.


ரோட்டரி மாவட்ட இயக்குனர் (வொகேஷனல் சர்வீஸ்) விஸ்வநாதன், திட்ட தலைவர் சுந்தரவடிவேலு, ரோட்டரி கிளப் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், எஸ்.ஐ.,க்கள் சந்திரமோகன், ஸ்ரீமதி, சுரேஷ் உள்ளிட்ட போலீசார் விருது பெற்றனர்.


அந்த மாணவன்...!முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் பேசுகையில், ""அந்தக் காலத்தில், எஸ்.ஐ., ஆக இருப்பவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் ஊரே அவரை வணங்கும். அதைப் பார்த்து எஸ்.ஐ., ஆக வேண்டுமென்று பள்ளி பருவத்திலேயே நினைத்த ஒரு மாணவன், அதற்காக முயற்சித்து எஸ்.ஐ., தேர்வுக்கு போனபோது மார்பளவில் ஒரு இன்ச் குறைவாக இருந்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் மேலும் படித்து வக்கீலாக, தலைமை நீதிபதியாகி இன்று உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறான்,'' என்றார். அப்போது, அரங்கிலிருந்த போலீசார், ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரும் அரங்கம் அதிர கரவோசை எழுப்பினர்.

 

0 comments: