இருபதாயிரம் பெண்களுக்கு இலவச கல்வி : துணைவேந்தர் கல்யாணி தகவல்

மதுரை : ""தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 20 ஆயிரம் பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட உள்ளது,'' என துணைவேந்தர் ஏ.கல்யாணி தெரிவித்தார்.


மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எட்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், தற்போது மூன்று லட்சம் பேர் படிக்கின்றனர். இப்பல்கலையில் 133 சமுதாயக் கல்லூரிகள் உள்ளன. 90 படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்பல்கலைக்கு சென்னை சைதாப்பேட்டையில் 11 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் உருவாகிறது. டிசம்பர் முதல் பல்கலை அங்கு இயங்கும். இப்பல்கலையின் டிப்ளமோ தொழிற் படிப்புகளில் 50 ஆயிரம் பேர் படிக்கின்றனர். முடிதிருத்துவோர் ஐந்தாயிரம் பேருக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்துள்ளோம். விரைவில் சான்றிதழ், கருவிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.


பல்கலையின் 90 படிப்புகளுக்கும் பாடத்திட்டங்களை குறுந்தகடுகளில் தயாரித்துள்ளோம். பதினோறு பல்கலைகளின் ஒத்துழைப்புடன் 11 மையங்கள் செயல்படுகின்றன. விரைவில் டெலிகான்பரன்சிங் முறையில் இம்மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவோம். தமிழில் படிப்போருக்கு 25 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச கல்வி அளிக்கிறோம். இந்த ஆண்டே விதவைகள், பெற்றோர் ஆதரவை இழந்த 20 ஆயிரம் பெண்களுக்கு சமுதாய கல்லூரிகள் மூலம் இலவச கல்வி அளிக்க உள்ளோம். தொலைநிலைக் கல்வி கவுன்சில் நிதியின் கீழ் இது செயல்படுத்தப்படும். இவ்வாறு கல்யாணி கூறினார்.

 

0 comments: