வேலைவாய்ப்பு உருவாக்கும் சமுதாயக்கல்லூரி : ஐ.ஈ.சி.டி., முயற்சிக்கு பாராட்டு

திருச்சி: ""வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் மற்ற கல்லூரிகளுடன் இணைந்து சமுதாய கல்லூரிகளை உருவாக்குவதில், ஐ.ஈ.சி.டி.,யின் முயற்சி பாராட்டத்தக்கது,'' என்று துணைவேந்தர் மீனா பேசினார். திருச்சி பாரதிதாசன் பல்கலை வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறை சார்பில், "வணிகவியல் மற்றும் மேலாண்மையியலில் புள்ளியியல் தொகுப்புகளின் பயன்பாடு' குறித்த ஏழுநாள் பயிற்சிபட்டறை நடந்தது. துவக்கவிழாவுக்கு, துறைத்தலைவர் செல்வம் வரவேற்றார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் மற்றும் வேதியியல் பள்ளியின் துறைத்தலைவர் வேணு வனலிங்கம் தலைமை வகித்தார்.

உருமு தனலெட்சுமி கல்லூரி முதல்வர் சேகர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, செயின்ட் ஜோசப் கல்லூரி புள்ளியியல் துறை பேராசிரியர்கள் ஸ்டீபன் வின்சென்ட், சண்முகவடிவேல், விவேக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலையில் இருந்து 22 பெண்கள் உட்பட 50 ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு புள்ளியியல் கருவிகள், அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பல்கலை துணைவேந்தர் மீனா, நிறைவு விழாவுக்கு தலைமை வகித்து பேசியதாவது: கணிதம் மற்றும் புள்ளியியல் கோட்பாடுகளின் பயனால் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. புள்ளியியல் கருவிகள், கணினி அல்காரிதம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி பகுப்பாய்வு புரிந்து கொள்ள உறுதுணை புரிகின்றன. வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் மற்ற கல்லூரிகளுடன் இணைந்து சமுதாய கல்லூரிகளை உருவாக்குவதில், ஐ.ஈ.சி.டி.,யின் முயற்சி பாராட்டத்தக்கது. திருச்சியில் ஐ.டி., பார்க்கில், பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், அவை சார்ந்த சேவை நிறுவனங்களும் அமையவிருக்கிறது.

இச்சூழலில், வேலையில்லா பட்டதாரிகள் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சுயவேலைவாய்ப்பு பெறும் வகையில், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன், மெடிக்கல் கோடிங், மெடிக்கல் பில்லிங் போன்ற சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளை துவங்க ஐ.ஈ.சி.டி., மேற்கொண்டுள்ள முயற்சி சிறப்புக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் சான்றிதழ் வழங்கினார். முன்னதாக, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் மற்றும் வாணாள் வரை கற்றல் துறைத்தலைவர் பார்த்தசாரதி வரவேற்றார். நிதிக்கல்வியியல் துறைத்தலைவர் செல்வம் அறிக்கை வாசித்தார். ஏற்பாடுகளை, வணிகவியல்துறை உதவி பேராசிரியை காயத்திரி, பேராசிரியர் பாபு செய்திருந்தனர்.

 

0 comments: