108 மணி நேர நடன நிகழ்ச்சி: கேரளப் பெண் கின்னஸ் சாதனை

திருச்சூர், செப். 26: தொடர்ந்து 108 மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்தி கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர் கலாமண்டலம் ஹேமலதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


திருச்சூரில் தனது நடன அமைப்பாளருடன் இணைந்து மோகினி ஆட்டம் நடன நிகழ்ச்சியை திங்கள்கிழமை இரவு அவர் தொடங்கினார். 108 மணி நேரத்துக்குப் பின் சனிக்கிழமை இரவு நடனத்தை நிறைவு செய்தார். 5 நாள்கள் தொடர்ந்து நடனமாடியபோது, விதிகளுக்கு உள்பட்ட குறிப்பிட்ட இடைவெளியில் மொத்தமாக சுமார் 10 மணி நேரம் மட்டுமே அவர் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் மிக நீண்ட நடன நிகழ்ச்சி என்ற பிரிவின் கீழ் இந்த நிகழ்ச்சியை அனுப்ப இருக்கிறோம். வேறு எவரும் இவ்வளவு நீண்ட நேரம் நடனமாடியது இல்லை. எனவே இந்த சாதனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இப்போது 35 வயதாகும் ஹேமலதா, 20 ஆண்டுகளாக நடனமாடி வருகிறார். கேரளத்தில் புகழ்பெற்ற மோகினி ஆட்டம் நடனத்தில் தனித் திறமை பெற்றவர். இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளிலும் ஹேமலதா நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
இதற்கு முன் கடந்த ஜூன் மாதத்தில் அவர் கின்னஸ் சாதனைக்காக நடன முயற்சி மேற்கொண்டார். ஆனால் 64 மணி நேரத்தை நிறைவு செய்தபோது, அவருக்கு உடல் நிலைபாதிக்கப்பட்டதால் முயற்சி கைவிடப்பட்டது

 

0 comments: