கல்வி மையங்களை சிறந்த முறையில் நிர்வகிக்க பயிற்சி

சென்னை : உயர்கல்வி மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள துணைவேந்தர், பதிவாளர், கல்லூரி முதல்வர், இயக்குனர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, கல்வி மையத்தை சிறப்பாக நிர்வாகிப்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) திட்டமிட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகிய உயர்கல்வி மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களது திறமைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய யு.ஜி.சி., ஒரு நிபுணர் கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: நாட்டில் 480 பல்கலைக்கழகங்கள், 20 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு கோடி மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். உயர்கல்வி பயிலும் வயது உடையவர்களில், தற்போது 13 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பயில்கின்றனர். இதனை 25 சதவீதமாக உயர்த்த நம்நாட்டில் மேலும் 500 பல்கலைக்கழகங்கள், 35 ஆயிரம் கல்லூரிகள் தேவைப்படுகிறது. ஒரு பகுதியின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில், உயர்கல்வி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயர்கல்வியின் திட்டமிட்ட மேம்பாட்டில், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களில் பங்கு முதன்மையானது. அவர்கள் திறம்பட செயல்படாவிட்டால், கல்வி மேம்பாட்டின் வேகம் குறையக்கூடும்.

உயர்கல்வி மையங்களை நிர்வகிப்பதில், திட்டமிடுதல் குறித்து விழிப்புணர்வு இல்லாமை, திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைகள், நிதி நிர்வாக திறன்களில் உள்ள குறைபாடுகள், முடிவெடுக்கும் திறன், பிற துறைகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமை, முறையற்ற மேலாண்மை உள்ளிட்ட பல குறைபாடுகள் உள்ளன. உயர்கல்வி மையங்களில் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். முதல் குழுவில், துணைவேந்தர், கல்வி மைய இயக்குனர், இணை துணைவேந்தர் மற்றும் ரெக்டர் ஆகியோர் இடம் பெறுவர். இரண்டாம் குழுவில், கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் இடம் பெறுவர். இந்த இரு குழுக்களுக்கும், தலைமைப் பண்பு மேலாண்மை, மாற்றங்களை நிர்வகிப்பது, கல்வி மையங்களில் ஐ.டி., பயன்பாடு ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

மூன்றாவது குழுவில், பதிவாளர், நிதி அதிகாரி, துறைகளின் இயக்குனர்கள், டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, நூலக அதிகாரி உள்ளிட்டோர் இடம் பெறுவர். இக்குழுவினருக்கு, பொது நிர்வாகம், நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ், சொத்து மேலாண்மை, அணி மேலாண்மை, நிர்வாகத்தில் ஐ.டி., பயன்பாடு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். நான்காவது குழுவில், துணை பதிவாளர், உதவி பதிவாளர், சூப்பிரன்ட், பிரிவு அதிகாரி, கல்லூரிகளில் துறைத் தலைவர்கள், கணக்கு அதிகாரி, தனிச் செயலர், தனி உதவியாளர் உள்ளிட்டோர் இடம் பெறுவர். இக்குழுவினருக்கு, செயல்பாட்டுத் திறமை, அக்கவுண்ட், சட்டம், ஸ்டோர் மேலாண்மை, ஐ.டி., மற்றும் மென்திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். ஐந்தாவது குழுவில், உதவியாளர், ஸ்டெனோகிராபர், கிளார்க் உள்ளிட்டோர் இடம் பெறுவர். இக்குழுவினருக்கு, செயல்பாடு மற்றும் மனப்பான்மை குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். இப்பயிற்சிகள் மூன்று நாட்கள் முதல் நான்கு வாரங்களில் வழங்கப்படலாம். இவ்வாறு நிபுணர் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து துணைவேந்தர்கள் மற்றும் கல்வி மையங்களின் இயக்குனர்களின் கருத்துக்களை கேட்டு, யு.ஜி.சி., சார்பு செயலர் வீணா நய்யார் கடிதம் எழுதியுள்ளார். கருத்துக்கள் பெறப்பட்ட பிறகு, கல்வி மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும்.

 

0 comments: